Saturday, 22 November 2014

என் காதல் சொல்ல தேவையில்லை -2

Episode 2
----------

கடற்கரை ஓரமாய் நடந்து கொண்டிருந்தான் கார்த்திக் ..பொங்கி வரும் அலையின் எழிலை, கடல் பெண் மல்லாந்து கிடந்தது  தூக்கி தூக்கி எறியும் அவள் சுருண்ட குழலை,அதில் சூடியிருக்கும் நுரை பூவின் அழகை ரசிக்க மனமில்லாமல், 

"அட நாம எப்டி இங்க வந்தோம்..இது எந்த ஊர்?" என்ற குழப்பத்தோடு சுற்று முற்றும் பார்த்தான்..

கொஞ்சம் தூரத்தில் தென்னந்தோப்பு தெரிந்தது..அந்த தோப்பை கடந்து சற்று தூரம் சென்ற போது மண் சாலை ஒன்று தென்பட்டது...ஆங்காங்கே வண்டிச்சக்கரங்கள் புதையுண்ட தடையமும் , குதிரையின் குளம்படி தடையமும்  தெரிந்தது...

இன்னும் சற்று தொலைவில், கையில் வேலும், தலையில் தொப்பியும், வயிற்றில் தொப்பையுமாய் ஒருவர் நின்று கொண்டிருக்க, அங்கிருந்த கருங்கல்லில் ,அவரிடம் பேசி சிரித்த படியே இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர்..

வியப்பில் ஆழ்ந்தான் கார்த்திக்..

"என்ன இது??இந்தாளுங்க சரித்திர கதைகளில் வரும் காவலாளிகள் மாதிரி ட்ரெஸ் போட்டிருக்காங்க..ஒருவேளை நாடக ஒத்திகை ஏதாவது??மீண்டும் சுற்று முற்றும் பார்த்தான்..நாகரிகத்தின் சுவடே தெரியவில்லை..இருபத்தொன்றாம் நூற்றாண்டு தானா??மாட்டு வண்டி, குதிரை வண்டி, கையில் வேலுடன் ஆண்கள் , கண்ணுக்கு புலப்படாத பெண்கள்,கடல், பனை, தென்னை ....எந்த ஊர் இது ??எங்க இருக்கேன் இப்போ??பேசாமல் கேட்டு விடலாம்..." என்றெண்ணிய படியே நேராக நடந்தான்..

நின்று கொண்டிருந்த தொப்பை ஆசாமியிடம் ,

"excuse me  சார் ..இது எந்த ஊரு?" என்று கேட்க,

அவரும் மற்ற இருவரும் கார்த்திக்கை மேலும் கீழும் ஒரு முறை பார்த்தனர்..

அழகிய உருவம்..நல்ல உயரம்..ஒருவேளை ஆறடிக்கு ஓரிரு இஞ்ச்கள் குறைவாக இருக்கலாம்..வசீகரமான கண்கள் ,கண்ணில் கண்ணாடி, நீல நிற ஜீன்ஸ் ,ஊதா நிற முழுக்கை டி ஷர்ட் ..அதன் காலர் மட்டும் வெள்ளை..கார்த்திக்கின் உருவமும் உடையும் அந்த மனிதர்களுக்கு விநோதமாய் தெரிந்தது..

"தம்பி ஏது நாடா??சோழ நாடாணோ??" என்று மலையாளம் கலந்த தமிழில் கேட்க..

அவன் ஒன்றும்  புரியாமல் தலையசைத்து விட்டு...

"இது எந்த ஊரு ?" என்றான்..

இது கோலோச்சல்..."என்று ஒருவன் சொல்ல..

"உங்க நாட்ல இப்டி தான் வஸ்திரம் இடுவியளா ?" என்று இன்னொருவன் கேட்டு சிரித்தான்..

இவன் மீண்டும் தலையசைத்து விட்டு ...

"கோலோச்சலா ??அப்டின்னா.."

"அப்டின்னா..எங்கள் நாட்டை கைப்பற்ற இவ்விடம் வந்த வெள்ளையனை ஓட ஓட விரட்டி எங்கள் மன்னன் மார்த்தாண்டன் கோலோச்சிய இடம் என்பதால் இந்த இடத்துக்கு கோலோச்சல் என்று பெயர்.."

"ஓ!!அப்ப இங்க பெரிய போர் நடந்துச்சா ?" என்று கார்த்திக் கேட்க ,

"இல்ல பிள்ளே !!வெள்ளையன் தன் கடற்படையோடு வந்து கொண்டிருந்தான்..நாங்களோ நிறைய பனை மரங்களை வெட்டி ,எங்கள் வண்டிகளை கடற்கரையோரம் வரிசையாய் நிற்க வைத்து ,ஒவ்வொரு வண்டியின் மீதும் ஒவ்வொரு பனையை சரித்து வைத்து ,அதற்கு கருத்த சாயமும் பூசினோம்..தூரத்தில் வந்த போதே தன் தொலைநோக்கி கொண்டு கடற்கரையை பார்த்த வெள்ளையன் அதிர்ச்சியடைந்தான்..இங்கே வரிசையாய் நிறுத்தி வைத்திருப்பதெல்லாம் பீரங்கி என்றெண்ணி வந்த வழியே ஓட்டம் பிடித்தான்.."

"ம்ம்..சம ஐடியாவா இருக்கே!!"

"என்ன?"

"நல்ல யோசனை ன்னு சொன்னேன்..இந்த யோசனை யார் கொடுத்தது..?"


"நம்ம இளவரசி அம்மா தான்..வயதை மிஞ்சிய அறிவு..அழகுக்கேற்ற ஞானம்.." என்று ஒருவன் சொல்ல, குதிரையில் அங்கே வந்த ஒருவன்,

"லே!!உன்ன சேனாதிபதி விளிச்சார்.."என்றான் ..

கார்த்திக்கிடம் பேசிக்கொண்டிருந்த மனிதன்,

"தே..வருன்னுன்னு  பற" என்று அவனிடம்  சொல்லிவிட்டு , கார்த்திக்கிடம்,

"நீ எங்க போனும் பிள்ளே..?" என்றார்..

குழப்பத்தில் இருந்த கார்த்திக் இப்போது அந்த இளவரசி எப்படி இருப்பாள் என்று பார்க்கும் ஆர்வத்தில் ,

"இளவரசி.."

"எந்தா?""

"இல்ல ...வந்து..அரண்மனை.."

"ஓ!!அரண்மனைக்கா??நேரா போயி வலத்தொட்டு திரும்பி , ஒரு கல் தூரம் நடக்கணும்.." என்ற அந்த மனிதரிடம் நன்றி சொல்லி புறப்பட்டான்..

அத்தனை காவலையும் மீறி எப்படி அந்த மாளிகைக்குள் நுழைந்தான் என்பது அவனுக்கே புரியவில்லை ..வெள்ளை நிற சலவை கற்களால் கட்டப்பட்ட அழகிய மாளிகை அது..

படிக்கட்டு வழியே மாடியை அடைந்த போது , அங்கே இருந்த ஒற்றை அறையில் ஒற்றையில் இருப்பவள் தான் இளவரசி என்பது புரிந்தது..அவள் முகத்தை தான் பார்க்க முடியவில்லை..

அவளுக்கே தெரியாமல் அவளை பார்ப்பது எப்படி..தன் வலது கையை வாயில் வைத்த படி , பார்வையை மட்டும் அவள் புறம் வீசி,வாசலின் இடமிருந்து வலமும் வலமிருந்து இடமும் இருமுறை நடந்தான்..

"அட நம்ம தேவி!!அவ இங்க என்ன பண்றா?"

என்று இவன் அறை வாசலின் இடது சுவர் ஓரமாய் சாய்ந்தபடி யோசிப்பதற்குள்,

விரிந்த கூந்தலும், ஒளி சிந்தும் கண்களுமாய் வெளியே வந்த அந்த பெண்..

"யார் அது??யார்??" என்று கேட்க,

அவனோ அவளை தன் புறமாய் இழுத்து,சுவரோடு சாய்த்து, வலது கையால் ,அவள் இடைபற்றி , இடது கையால் அவள் வாய் பொத்தி 

"நான் தான் கார்த்திக் டி.." என்று சொல்வதற்குள்,மூர்ச்சையுற்றாள் அவள் ..

தன் தோளில் சாய்ந்தவளை இழுத்தபடியே ,

"ஐயோ..யாராவது பார்த்த அவ்ளோ தான்..." என்று முணுமுணுத்தபடியே அந்த அறைக்குள் நுழைந்து அங்கிருந்த கட்டிலில் அவளை கிடத்தினான்..

பின் பதற்றத்தோடு அறைக் கதவை சாற்றினான்..

விசாலமான அறை அது..சுவர் முழுக்க ஓவியங்கள்..தன்னை விட்டு நழுவும் ஆடையை பற்றிய படி வெட்கி நிற்கும் பெண்ணின் ஓவியத்தை பார்த்த போது , தன்னையுமறியாமல் ஒரு நொடி அப்படியே நின்று விட்டான்..

திடீரென்று ,உள்ளே பொறி தட்ட..

"ஐயோ..தேவி ..நான் கார்த்திக் டி ..என்ன பாரு..." என்று கட்டிலில் ஓவியம் போல் கிடந்த பெண்ணின் காதருகே சென்று சொல்லிப் பார்த்தான்..

அவளோ அசையவில்லை..அவள் அதரங்களில் இருந்து உதிரம் கசிந்தது..அவள் அங்கங்களில் இருந்து ரத்தம் பெருகியது..அவள் ஆடை முழுவதும் ரத்தமாய் ,குருதியில் குளித்தவள் போல் கொடூரமாய் காட்சி தந்தாள்...முகம் மட்டும் பளிங்கு போல் மின்னிக் கொண்டிருந்தது..

"தேவி..என்னாச்சு ..பயப்படாத..எழுந்திரு ..நான் உன் பக்கத்துலையே தான் இருக்கேன்..எழுந்திரு.." என்று சொல்ல சொல்ல தன்னையும் அறியாமல் பொங்கி வரும் விழி நீரை அடக்க முடியாமல் தவித்தான்...

ஒரு துளி நீர் அவள் கன்னங்களில் விழுந்தது..

மெல்ல கண் திறந்தாள்..தன் பார்வையால் சைகை செய்து அவனை தன் அருகே வரும்படி சொன்னாள்..

அவள் ஏதோ சொல்ல விரும்புகிறாள் என நினைத்து , அவள் இதழருகே காது கொடுத்து கேட்க ,

அவளோ அவன் கன்னத்தில் தன் இதழ் பதித்தாள்..அந்த முத்தத்தின் அடையாளமாய் ..அவள் இதழோரம் வழிந்த உதிரம் அவன் கன்னத்தில் ஒட்டிக் கொண்டது..

அந்த முத்தத்தின் ஈரம் துடைத்த படி,

"என்ன ஆச்சு உனக்கு..ஏன் இப்டி..??"என்று கார்த்தி கேட்க,

"டேய் ..லூசு ..நம்பிட்டியா..???இது தக்காளி சட்னி டா" என்றாள் அவள் ..

குழப்பத்தோடு..

"என்ன??" என்று மீண்டும் அவன் கேட்க..

"ஐயோ..லூசு பயலே..அது தக்காளி சட்னி டா.." என்று யாரோ தன்னை அடிக்க அவன் உறக்கம் கலைந்தது..

"எவ்ளோ நேரம் டா தூங்குவ..??ஸ்கூலுக்கு போக வேண்டாமா??தல மாட்டுல தக்காளி சட்னி டா..தக்காளி சட்னி டான்னு எவ்ளோ நேரமா கத்துறேன்..கொஞ்சம் கூட சொரண இல்லாம அதுக்குள்ளே கைய விட்டிருக்க..."என்று அம்மா சொன்ன போது தான் தன் வலது கை ஆள் காட்டி விரலில் இருப்பது ரத்தம் இல்லை என்பதே புரிந்தது...

"ச்சே..கனவு.." மெல்ல முணுமுணுத்தான்..

'ஆனா..தேவி.!!!..ஏன் இப்டி ஒரு கனவு வந்துச்சு.."ஒன்றும் விளங்கவில்லை அவனுக்கு..

"ப்ளஸ் டூ பாடம் தொடங்கியாச்சு..உன் தூக்கத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு..உன்ன டியூஷனுக்கு விட்டா தான் சரிப் படுவ.." அவன் அம்மா சாந்தி புலம்பி தள்ளினாள்..

பள்ளிக்கு கிளம்ப தயாரானான்....வாசலுக்கு வந்து,

"தேவி ..ரெடி ஆயிட்டியா..வா போலாம்..!" என்று இவன் குரல் கொடுக்க,

தனது ரெட்டை ஜடையில் ரிப்பன் வைத்து பின்னியபடி,

"தோ ..அஞ்சு நிமிஷம் ..வந்துடுறேன் டா.." என்றாள் தேவி..

அம்மா ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்..அவன் அவளிடம் "சரி " என்று சொல்லி உள்ளே நுழைந்ததும்,

"அந்த அநாதை கழுத கூட சேராதன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன்.."

"அப்டி சொல்லாதம்மா...அவ பார்வதி அத்தை பொண்ணு..பார்வதி அத்தை உன் friend  தானே.."

"ம்க்கும்..friend  தான் ..உயிருக்கு உயிரான friend ..." என்றவள், வாய்க்குள்,

"துரோகி.." என்று முனுமுனுத்தாள்..

அவள் முனுமுனுப்பு அவன் காதுகளை அடைவதற்குள்,

"கார்த்தி..நான் ரெடி!!வா!!" என்றாள் தேவி..

இருவருமாய் பள்ளி நோக்கி நடந்தனர்..

(தொடரும்..)

Monday, 3 November 2014

"என் காதல் சொல்ல தேவையில்லை.."

ஹலோ...எப்டி இருக்கீங்க??எவ்ளோ நாளாச்சு கதை சொல்லி...திரும்பவும் ஒரு தொடர்கதை..உங்களுக்காக...படியுங்க..மறக்காம கமெண்ட் குடுங்க..அதுக்கு முன்னாடி ..இந்த கதை எதை பத்தின்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா??அதுக்காக ஒரு குட்டி முன்னுரை...

ஒரு பொண்ணு ஒரு பையன் .ரெண்டு பேரும் லவ் பண்றாங்க..பொண்ணு நல்லவ பையனும் நல்லவன்...ரெண்டு பேருக்கும் நடுவுல நல்ல understanding . ஆனாலும் அந்த காதல் ஜெயிக்கல அப்டின்னா அதுக்கு முக்கியமான காரணம் பெண்மையாக தான் இருக்க முடியும்...ஷ்..ஷ்..தாய்க்குலமே..சண்டைக்கு வராதீங்க... முழுசா படியுங்க..

"நீ மட்டும் என்னை அவனுக்கு கட்டி வைக்கலன்னா கத்தி எடுத்து சதக் சதக் னு என்னை நானே குத்திக்குவேன்.." என்றெல்லாம் போராடும் குணம் கொண்ட பெண்கள் இங்கே குறைவு..அடி உதை வாங்கி காதலுக்காக போராடும் அளவுக்கு சாதாரண பெண்மைக்கு சக்தி கிடையாது...ஒரு நல்ல காதல் ஜெயிக்கணும்னா ஆணை விட பெண்ணுக்கு அதிக மனோ தைரியம் தேவை..வைராக்கியம் தேவை..அப்படி அதிக மனோ தைரியம் உள்ள ஒரு பெண்ணின் காதல் கதை..அப்றோம் ..ஒரு முக்கியமான விஷயம்..இந்த கதையில் வரும் சம்பவங்கள் பாத்திரங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே..கதைய படியுங்க கமெண்ட குடுங்க...

."என் காதல் சொல்ல தேவையில்லை...". 

Episode-1
------------


"டாக்டர்..எனக்கு பைத்தியமாம் ..பேய் புடிச்சுருக்காம்..விடியிறதுக்கு முன்னாடியே எழுப்பி என் தலையில எலுமிச்சம் பழத்தை தேய்க்கிறாங்க..நான் பைத்தியம் இல்ல டாக்டர்..நான் பைத்தியம் இல்ல.."பதற்றத்தோடு பேசினாள் ராதிகா..

"முதல்ல உட்காரும்மா...தண்ணி வேணுமா??"என்று டாக்டர் சொன்னதும் சற்று அமைதியானவள் , முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..

"இல்ல Dr .பரவாயில்லை.." என்றபடி

ஒரு முறை சுற்றுமுற்றும் பார்த்தாள் ..அது ஒரு சிறிய அறை ..சுவரின் ஒரு ஓரத்தில்  கருப்பு வெள்ளை  கோடுகளுடன் கூடிய ஒரு போர்டு இருந்தது..எதிரில் இருந்த மேஜையில்  மஞ்சள் பூக்கள் நிறைந்த flower  vase  ஒரு புறமும் , மத்தியில் "டாக்டர் சுபா சத்தியநாதன்,சைக்காத்ரிஸ்ட் ",என்ற பெயர் பலகையும் இருந்தன..


Dr .சுபா சத்தியநாதன்...நீல நிற காட்டன் புடவை, தலையில் எட்டி பார்க்கும் வெள்ளிக் கம்பிகள், தங்க நிறத்தில் ஒரு நடுத்தர வயது பெண்மணி..மிகச் சிறந்த மனோதத்துவ நிபுணர்..

"உன் பேரு என்ன மா?"

"ராதிகா"

"வயசு"

"25"

டாக்டர் தன் நோட் பேடில் குறித்துக்கொண்டார்..

"ம்ம்..இப்போ சொல்லு மா..என்ன பிரச்சன??"

"பிரச்சினை....ம்ம்ம்..எல்லாமே பிரச்சினை தான் டாக்டர்..எல்லா பிரச்சினைக்கும் மூல காரணம் கண்ணன் தான் டாக்டர்.." என்று தலைகுனிந்தவள் சற்று தயக்கத்தோடு,,

"நான் கண்ணனை லவ் பண்றேன் ...அவன் கிட்ட எத்தனை முறை என் லவ்வ சொன்னேன் தெரியுமா???ஆனா அவன் அக்செப்ட் பண்ணவே இல்ல.."

"ம்ம்..காதல் தோல்வி..." என்ற Dr  சுபாவிற்கு அது ஒன்றும் பெரிய விஷயமாகவே தோன்றவில்லை..கடந்த பதினைந்து ஆண்டுகளில் இது மாதிரி எத்தனையோ கேஸ்களை பார்த்திருக்கிறார்..

ராதிகாவோ,

"சாதாரண தோல்வி இல்லை டாக்டர்..வெற்றிகரமான தோல்வி.." என்றாள்

"அப்டின்னா??"

"அப்டின்னா..ஒரு முறை காதலை சொல்லி அது மறுக்கப் பட்டால் ..அதை தோல்வின்னு சொல்லலாம்...ஒரு பெண் தன் காதலை ஒரு முறை சொல்வதே அநாகரிகம் என்பார்கள்..நானோ அந்த அநாகரிகத்தை 16 முறை செய்திருக்கிறேன்..பதினாறு முறை காதலை சொல்லி ஒவ்வொரு முறையும் பல்பு வாங்கினேன் டாக்டர்.."

வலி நிறைந்த ஒரு விஷயத்தை சிரித்தபடியே ராதிகா சொன்ன போது,டாக்டருக்கு அவளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது...

"ம்ம்..நார்மலா ஒரு முறை reject பண்ணினாலே depress  ஆயிடுவாங்க..நீங்க  எப்டி..???"

"விழாமல் சைக்கிள் ஓட்டி கத்துக்க முடியுமா டாக்டர்..இந்த காதல் தோல்விய நான் அப்டி தான் எடுத்துகிட்டேன்.அவன் ஒவ்வொரு முறை மறுத்த போதும் அவன இம்ப்ரெஸ் பண்ண புதுசா என்ன பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுடுவேன்.."

""வெரி குட்..உங்க attitude  எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...கண்ணன் எப்போ முதல்ல மீட் பண்ணீங்க??எத்தன நாளா லவ் பண்றீங்க??

"ஐயோ நாள் இல்ல டாக்டர்..வருஷம்...

அப்போ எனக்கு ஏழு வயசு தான் இருக்கும்..

என் வீட்டு ஜன்னல் வழியே வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்....அங்கே கண்ணன் ராக்கியோடு விளையாடிக் கொண்டிருந்தான்...ராக்கின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் .." என்று அவள் முடிப்பதற்குள்..

"ஓ..கண்ணனுக்கு முன்னாடி உங்களுக்கு ராக்கிய ரொம்ப புடிச்சிருந்தது..அப்டி தானே.." என்றார் டாக்டர்..

"ஐயோ ராக்கி அவனோட நாய்க் குட்டி டாக்டர்.."

"ஒ..சாரி மா..நீங்க சொல்லுங்க" என்று புன்னகையோடு டாக்டர் சொன்னதும் மீண்டும் தொடர்ந்தாள்..

"ராக்கிய பார்த்ததும் எனக்கும் அவன் கூட விளையாடனும் போல இருந்துச்சு..அதனால் கண்ணன் கிட்ட போனேன்..கண்ணனுக்கு என்னை  
விட ஒரு வயசு தான் அதிகம் இருக்கும்..

அவனிடம் "ராக்கிய என் கிட்டே குடேன்.." என்றேன்..

"ம்ஹூம்..என்னால முடியாது..."என்றான் அவன்..

"ப்ளீஸ் .."என்று நான் கெஞ்சுவதை பார்த்து..

"சரி..கலர் விளையாட்டு விளையாடுவோம்...நீ ஜெயிச்சுட்டா ராக்கிய தர்றேன்.." என்று அவன் சொன்னதால் நானும் ஒப்புக் கொண்டேன்..

"சரி...ஆனா எனக்கு விளையாட தெரியாதே.."

"நான் தான் கேச்சர்..நான் என்ன கலர் சொல்றேனோ அந்த கலரை நீ தொட்டிருந்தா உன்னை நான் பிடிக்க முடியாது ..ஓகே வா  "

சரி" என்று நான் சொல்ல , 
விளையாட்டு தொடங்கியது..

"டிக் டிக் "

"யாரது?"

"திருடன்"

"என்ன வேணும் ?"

"நகை வேணும்.."

"என்ன நகை"

"கலர் நகை"

"என்ன கலர்"

"பச்சை " என்று கண்ணன் சொல்ல..

சுற்றி நிற்கும் இலை தழை எல்லாம் என் கண்ணில் படவில்லை..கண்ணன் மட்டுமே தெரிந்தான்..அவன் பச்சை கலர் சட்டை போட்டிருந்தான்..அவன் என்னை பிடிப்பதற்காக என்னை நோக்கி ஓடி வந்தான்...நானோ அவன் சட்டையை தொடுவதற்காக அவனை நோக்கி ஓடினேன்.அவன் என்னை தொட வந்தான் ..நான் அவனை இறுக பற்றிக் கொண்டேன்..

"நான் புடிச்சுட்டேன்.." என்றான் அவன்

நான் புடிச்சுட்டேன்...என்றேன் நான்..

"நீ அவுட்டு.."

"இல்ல..நான் தான் பச்ச கலர் புடிச்சுட்டேனே "

"லூசு ..நான் தான் catcher .."

"நீ தானே பச்ச கலர பிடிக்கணும்னு சொன்ன.."என்ற படி அவனை இறுக பிடித்து ..நான் அவுட் இல்ல " என்றேன்..

"ஐயோ உனக்கு விளையாட்டே தெரியல..என்ன விடு டி.."என்ற படி என்னை பிடித்து தள்ளினான்...கீழே விழுந்ததில் என் கால் முட்டியில் சிறிய உராய்வு ஏற்பட்டு ரத்தம் கசிந்தது..நடந்ததை பார்த்துக் கொண்டிருந்த அம்மா ஓடி வந்து..தர தரவென்று என்னை இழுத்துக்கொண்டு போக..நானோ,

"அம்மா..ராக்கி வேணும்மா..என்று அழுத படியே  கண்ணனை பார்த்தேன்...அவனோ பரிதாபமாக என்னை பார்த்தான்..

அடுத்த நாள் காலையில், 

யாரோ வீட்டு வாசலில் என்னை அழைப்பது போல் இருந்தது...

வெளியே பார்த்த போது கையில் ராக்கியோடு கண்ணன் நின்று கொண்டிருந்தான்...

"இந்தா வச்சுக்கோ...இனிமே அழாத.." என்று ராக்கியை என் கையில் கொடுத்தான்..

நானோ ராக்கியை மறந்து கண்ணனை பார்த்துக் கொண்டிருந்தேன்..

"ம்ம்..சின்ன வயசுல இருந்தே விரும்புறீங்க...ஆனா நீங்க சொல்றத வச்சு பார்க்கும் போது ,அந்த பையனுக்கும் உங்கள பிடிக்கும்னு தான் தோணுது.."

"அவனுக்கு என்ன பிடிக்கும் டாக்டர்..பிடிக்கல பிடிக்கலன்னு பொய் சொல்றான்.."

"ம்ம்..பிடிக்கும்..பிடிக்கல..புரியலையே மா"

பல வருடங்கள் காதல் எனும் கருவை மனதில் சுமந்து, மேலும்  சுமக்கும் வலிமை தீர்ந்து,வலி தாளாமல் ஒரு நாள் பிரசவித்து , தன் காதல் எனும் குழந்தை இறந்தே பிறந்தது என்று தெரிந்தும், அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் ,இறந்த அக்குழந்தைக்கு பால் கொடுக்க மார்பு தடவும் பேதை தாயின் தாய்மை  உள்ளத்தோடு காதலிக்கும் தனக்கே தன் காதல் தோல்விக்கு காரணம் புரியாத போது ,இந்த டாக்டருக்கு எப்படி புரிய போகிறது என்று உள்ளூர எண்ணியவள்,

இப்போ அது கூட பிரச்சன இல்ல டாக்டர் ...வீட்ல..." என்று எதையோ பேச தொடங்கினாள்..

(தொடரும்....)