Sunday, 21 December 2014

என் காதல் சொல்ல தேவையில்லை-4





யாரோ கேட்டை திறப்பது போல் இருந்தது..நிச்சயம் தேவியா தான் இருக்கும் ..மனதுக்குள் நினைத்துக் கொண்டான் கார்த்திக்..

"ஆம் அவள் தான்..ஆனால் இப்படி பரீட்சையில் தோற்று விட்டு ,ஒரு தோத்தான்கொல்லியா அவள் முகத்தில் விழிக்க வேண்டுமா.பரிகசிக்க மாட்டாள் ..ஆனாலும்..."
ஏதேதோ நினைத்து குழம்பி, மொட்டை மாடி மதில் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்து கொண்டான்..

"கழுத..என் கனவு எல்லாத்தையும் கலச்சிடுச்சு..அப்பன் குடிகாரன்..ஓடி போயிட்டான்..இவனாச்சு படிச்சு பெரிய மனுஷன் ஆவான்னு நம்பினேன்.ஆனா கண்ட கண்ட அனாத கழுதைகள் கூட சேர்ந்து சுத்தி இப்போ பிளஸ் டூ பரீட்சையில் கோட்டை விட்டுட்டு  நிக்குது...எல்லாம் போச்சு..."சாந்தி புலம்பி தள்ளினாள் ..அந்த புலம்பல் அதிகமானது என்னவோ தேவியின் வருகையால் தான்..

தேவி எதையும் கண்டு கொள்ள வில்லை ..கார்த்தி இப்போது மாடியில் தான் இருப்பான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்..பேசாமல் படி ஏறினாள்..

அங்கே தனிமையில் இருந்தவனிடம் ,
"கார்த்தி.." என்பதற்குள் அவனோ கண்ணீர் சிந்த தொடங்கி விட்டான்..

அவளிடம் "நீ போ..என் கிட்ட வராதே போ .." என்று முகத்தை திருப்பிக் கொண்டான்..
அவளாவது செல்வதாவது..அங்கேயே நின்றாள்..



ஆறாவது படிக்கும் போது அம்மாவும் அப்பாவும் ஒரே விபத்தில் இறந்து போனார்கள்..."எனக்கு இனி  யாருமே இல்ல .நான் அநாதை ஆயிட்டேன்..என்னை ஏன் மா தனியா விட்டுட்டு போன ??."என்று கதறி கதறி அழுத போது அருகில் வந்து,

"அப்டி சொல்லாத தேவி..உனக்கு நான் இருக்கேன் " என்று அழுதபடியே ஆறுதல் சொன்னான் கார்த்திக்..

"எனக்கு நீ ஒன்னும் தேவையில்லை ..எனக்கு என் அம்மா அப்பா தான் வேணும் " என்று அருகில் நின்றவனை தள்ளியதில் அவன் கீழே விழுந்தான்.அப்போது அவனும் சிறுவன் தான்..ஆனால் அவளது வலியை புரிந்து கொண்டதால் மீண்டும் அவள் அருகே வந்து, அவள் தோளில் கை வைத்து ஆறுதலாய் நின்றான்.. 

அந்த கார்த்திக்கை ,இப்படி ஒரு வலி நிறைந்த தருணத்தில் தனியே விட்டு விடுவாளா தேவி..

அவன் போ என்று சொல்லியும் ,அதை பொருட்படுத்தாமல் அவன் அருகே சென்றாள்..

"என் கிட்ட வராத..எல்லாம் போச்சு ..நான் சாக போறேன்..

"லூசா டா நீ??எக்சாம்ல பெயில் ஆனா வாழ்க்கையில பெயில் ஆனதா அர்த்தம் கிடையாது..ஒரு சப்ஜெக்ட் தானே ..எழுதி எடுத்துடலாம்..அதுக்கு போயி கன்னா பின்னான்னு உளறாத..உனக்கு தெரியுமா சச்சின் டெண்டுல்கர், பில் கேட்ஸ் மாதிரி வாழ்க்கையில சாதிச்ச நெறைய பேர் பத்தாவது பெயில் ஆனவங்க தான்...ஆனா நீ தான் பத்தாவதுல ஸ்கூல் பர்ஸ்ட் ஆச்சே...அப்றோம் ஏன் கவலை படுற??நீ அவங்கள விட பெரிய ஆள் ஆவ..ஒரு பெரிய பங்களா..பெரிய கார்.....உன் கார்ல எனக்கும் இடம் கொடுப்ப இல்ல??"
அவனை பார்த்து குழந்தை போல் கேட்டாள் தேவி..

உடை பட்ட அணை விட்டு பாயும் வெள்ளம் போல் அவன் கண்களில்  இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வழிய, மெல்ல அவள் புறம் திரும்பி லேசாக புன்னகைத்தான்..

"ஐயோ..ஆம்பள பசங்க அழக் கூடாது டா.." என்ற படி அவன் கண்களில் வழிந்த கண்ணீர் துடைத்தாள் தேவி..

சரி இனிமே அழல..ஆனா தயவு செய்து என் அம்மா மாதிரி லெக்சர் குடுக்காத. தாங்க முடில ..."என்று சிரித்தான்..

"எரும ..பெயில் ஆனாலும் உன் நக்கல் மட்டும் குறையல பாரு..நான் கெளம்புறேன் " என்று கோபமாக  கிளம்பினாள் தேவி..

"ஹே தேவி..கோச்சுகிட்டியா??சரி சரி கோச்சுக்கோ" என்ற படி  அவள் போகும் திசையில் பார்வையை வீசினான்..அம்மா பின்னால் ஓடும் குழந்தை போல் அவள் பின்னால்  அவன் மனம் ஓடுவதை, முதல் முறையாய் உணர்ந்தான்..

தொடரும்...

Saturday, 6 December 2014

என் காதல் சொல்ல தேவையில்லை-3


"இப்போ அது கூட பிரச்சின இல்ல டாக்டர்..வீட்ல.." என்று பேச தொடங்கினாள் ராதிகா..

இரண்டு வாரங்களுக்கு முன் 

"இன்னுமா தூங்குற ..ஆபீஸ் போக வேண்டாமா??ஏதோ ட்ரெய்னிங் கடைசி நாள் ..பரீட்சை இருக்குன்னு வேற சொன்ன..கதவை திற ராதிகா..."விஜி அக்கா கதவை ஓயாமல் தட்டிக் கொண்டிருந்தாள்..

கட்டிலில் கண் விழித்துக் கிடந்தபடி ,கூரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அக்காவின் குரல் கேட்காமல் இல்லை..

எழுந்து போக மனமற்றவளாய் ,தன் அறையை சுற்றி நோட்டம் விட்டாள் ராதிகா..

படிக்க முடியாமல் கிழித்து போட்ட  புத்தகங்கள் ஒரு புறம் குப்பையாய் கிடந்தது, மறுபுறம் மனமோ,

"யார் அந்த பெண் ??அவள் சொன்னது உண்மையாக இருக்குமோ??சீ சீ..இருக்காது..ஒருவேளை உண்மையாக இருந்தால்..???ஐயோ...நினைத்து பார்க்கவே கொடுமையாக இருந்தது..உள்ளுக்குள் கைவிட்டு, இதயத்தை மட்டும் உருவி எடுத்து, அதை ஓர் அரிவாள் முனையில் வைத்து சின்ன சின்ன துண்டுகளாய் நறுக்கி..அப்பப்பா அப்படியொரு வலி...

"கதவை திற டி..மணி எட்டு ஆக போகுது..."விஜி மீண்டும் குரல் கொடுத்தாள்..

வேறு வழியில்லாமல் கதவை திறந்தவள்,

"நான் எங்கயும் போகல .."என்றாள்..

"லூசா நீ..இன்னைக்கு தான் கடைசி நாள் ட்ரெய்னிங் ..பரீட்சை இருக்கு அது இதுன்னு சொன்ன....நீயும் உன்னோட எக்ஸாம் பீவரும்.....போ போயி கெளம்புற வழிய பாரு .." என்று அங்கிருந்து நகர்ந்தாள்  விஜி...

அக்கா..பெரியம்மா மகள்...நல்லவள் தான்..ஆனால் மனதின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தி அவளுக்கு இல்லை..வேறு வழியில்லாமல் அலுவலகம் கிளம்பி ,ஏனோ தானோ என்று பரீட்சை எழுதி வருத்தத்தோடு வீடு திரும்பிய போது அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது ராதிகாவிற்கு..

"இந்த ஞாயிற்று கிழமை பொண்ணு பார்க்க வர்றாங்க டி."

"யார ?"

"வேற யாரு ??உன்னை தான்...மாமாவே எல்லா ஏற்பாடையும் பண்ணிட்டாரு..உனக்கு வேற யாரு இருக்கா??"அக்கா சொன்ன போது தூக்கி வாரி போட்டது..

ஒன்றும் சொல்லாமல் தன் அறைக்குள் நுழைந்தாள்..நேற்று நடந்த சம்பவத்தின் வலி ஒரு புறம்,பெண் பார்க்கும் படலம் மறு புறம்..இறைவா இது என்ன சோதனை??தப்பிக்க வழி தான் என்ன..??

இரவு முழுவதும் யோசித்தாள்."கல்யாணமும் வேண்டாம்..ஒரு மண்ணும் வேண்டாம்..என்னை யாரும் பார்க்க வரவும்  வேண்டாம்..அது இது ..." என்று வீட்டில் எல்லோரிடமும் சண்டை போடும் மனநிலையில் தான் இல்லை என்பதை உணர்ந்தாள்...பின்னர் அந்த முடிவினை எடுத்தாள்..

"நாம அழகா தான் இருக்கோமா??" சிறிய சந்தேகம் உள்ளுக்குள்..

பீரோவில் இருந்த பெரிய கண்ணாடிக்கு முன்னால் போய் நின்று கொண்டாள்..

பின்னியிருந்த தன் நீளமான கூந்தலை அவிழ்த்து விட்டாள் ..சுருள் சுருளாய் கொஞ்சம் முடிக் கற்றைகள் அவள் கண்களில் விழ,தன் வலது கையால் அதனை அகற்றினாள்..தன் முகத்தை உற்று பார்த்தாள்..

சிலர் கண்கள் பேசும் என்பார்களே..அவள் கண்கள் அந்த ரகத்தை சேர்ந்தவை..வண்டை உண்ணும் பூக்கள் என்று கண்களை வர்ணித்த கவிஞன், அந்த வரியை எழுதுவதற்கு முன் ஒருவேளை அவளை பார்த்திருக்க கூடும்...

மாநிறம் தான்..அதனால் என்ன??அழகி கிளியோபாட்ரா கருப்பு தான்..அவளை விட எனக்கு நிறம் அதிகம்..நானும் அழகி தான் ..பேரழகி..
தனக்குள் சொல்லி கொண்டாள்.

தன் நீண்ட கூந்தலை ஒரு முறை முன்னும் பின்னும் திரும்பி ரசித்து பார்த்தாள்..

அட..எனக்கென்ன குறை..நல்லா தானே இருக்கேன்..என்னை ஏன் பிடிக்கல பிடிக்கலங்குறான்..மடையன்...ஒருவேளை அந்த பெண் சொன்னது உண்மையாக இருக்குமோ??இருந்து விட்டு தான் போகட்டுமே...ஆனால் தற்போதைய என் நிலைக்கு இந்த முடிவு சரி தான்.." என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டாள்..

அன்று விடியற்காலையில் யாருக்கும் தெரியாமல் வெளியே சென்றவள்..
சில மணி நேரத்தில் திரும்பி வந்த போது,

"ஐயோ என்ன கோலம் டி இது..என்ன பண்ணிட்டு வந்திருக்க??" அதிர்ச்சியுற்றாள் விஜி..

தொடரும் ..