Saturday, 6 December 2014

என் காதல் சொல்ல தேவையில்லை-3


"இப்போ அது கூட பிரச்சின இல்ல டாக்டர்..வீட்ல.." என்று பேச தொடங்கினாள் ராதிகா..

இரண்டு வாரங்களுக்கு முன் 

"இன்னுமா தூங்குற ..ஆபீஸ் போக வேண்டாமா??ஏதோ ட்ரெய்னிங் கடைசி நாள் ..பரீட்சை இருக்குன்னு வேற சொன்ன..கதவை திற ராதிகா..."விஜி அக்கா கதவை ஓயாமல் தட்டிக் கொண்டிருந்தாள்..

கட்டிலில் கண் விழித்துக் கிடந்தபடி ,கூரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அக்காவின் குரல் கேட்காமல் இல்லை..

எழுந்து போக மனமற்றவளாய் ,தன் அறையை சுற்றி நோட்டம் விட்டாள் ராதிகா..

படிக்க முடியாமல் கிழித்து போட்ட  புத்தகங்கள் ஒரு புறம் குப்பையாய் கிடந்தது, மறுபுறம் மனமோ,

"யார் அந்த பெண் ??அவள் சொன்னது உண்மையாக இருக்குமோ??சீ சீ..இருக்காது..ஒருவேளை உண்மையாக இருந்தால்..???ஐயோ...நினைத்து பார்க்கவே கொடுமையாக இருந்தது..உள்ளுக்குள் கைவிட்டு, இதயத்தை மட்டும் உருவி எடுத்து, அதை ஓர் அரிவாள் முனையில் வைத்து சின்ன சின்ன துண்டுகளாய் நறுக்கி..அப்பப்பா அப்படியொரு வலி...

"கதவை திற டி..மணி எட்டு ஆக போகுது..."விஜி மீண்டும் குரல் கொடுத்தாள்..

வேறு வழியில்லாமல் கதவை திறந்தவள்,

"நான் எங்கயும் போகல .."என்றாள்..

"லூசா நீ..இன்னைக்கு தான் கடைசி நாள் ட்ரெய்னிங் ..பரீட்சை இருக்கு அது இதுன்னு சொன்ன....நீயும் உன்னோட எக்ஸாம் பீவரும்.....போ போயி கெளம்புற வழிய பாரு .." என்று அங்கிருந்து நகர்ந்தாள்  விஜி...

அக்கா..பெரியம்மா மகள்...நல்லவள் தான்..ஆனால் மனதின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தி அவளுக்கு இல்லை..வேறு வழியில்லாமல் அலுவலகம் கிளம்பி ,ஏனோ தானோ என்று பரீட்சை எழுதி வருத்தத்தோடு வீடு திரும்பிய போது அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது ராதிகாவிற்கு..

"இந்த ஞாயிற்று கிழமை பொண்ணு பார்க்க வர்றாங்க டி."

"யார ?"

"வேற யாரு ??உன்னை தான்...மாமாவே எல்லா ஏற்பாடையும் பண்ணிட்டாரு..உனக்கு வேற யாரு இருக்கா??"அக்கா சொன்ன போது தூக்கி வாரி போட்டது..

ஒன்றும் சொல்லாமல் தன் அறைக்குள் நுழைந்தாள்..நேற்று நடந்த சம்பவத்தின் வலி ஒரு புறம்,பெண் பார்க்கும் படலம் மறு புறம்..இறைவா இது என்ன சோதனை??தப்பிக்க வழி தான் என்ன..??

இரவு முழுவதும் யோசித்தாள்."கல்யாணமும் வேண்டாம்..ஒரு மண்ணும் வேண்டாம்..என்னை யாரும் பார்க்க வரவும்  வேண்டாம்..அது இது ..." என்று வீட்டில் எல்லோரிடமும் சண்டை போடும் மனநிலையில் தான் இல்லை என்பதை உணர்ந்தாள்...பின்னர் அந்த முடிவினை எடுத்தாள்..

"நாம அழகா தான் இருக்கோமா??" சிறிய சந்தேகம் உள்ளுக்குள்..

பீரோவில் இருந்த பெரிய கண்ணாடிக்கு முன்னால் போய் நின்று கொண்டாள்..

பின்னியிருந்த தன் நீளமான கூந்தலை அவிழ்த்து விட்டாள் ..சுருள் சுருளாய் கொஞ்சம் முடிக் கற்றைகள் அவள் கண்களில் விழ,தன் வலது கையால் அதனை அகற்றினாள்..தன் முகத்தை உற்று பார்த்தாள்..

சிலர் கண்கள் பேசும் என்பார்களே..அவள் கண்கள் அந்த ரகத்தை சேர்ந்தவை..வண்டை உண்ணும் பூக்கள் என்று கண்களை வர்ணித்த கவிஞன், அந்த வரியை எழுதுவதற்கு முன் ஒருவேளை அவளை பார்த்திருக்க கூடும்...

மாநிறம் தான்..அதனால் என்ன??அழகி கிளியோபாட்ரா கருப்பு தான்..அவளை விட எனக்கு நிறம் அதிகம்..நானும் அழகி தான் ..பேரழகி..
தனக்குள் சொல்லி கொண்டாள்.

தன் நீண்ட கூந்தலை ஒரு முறை முன்னும் பின்னும் திரும்பி ரசித்து பார்த்தாள்..

அட..எனக்கென்ன குறை..நல்லா தானே இருக்கேன்..என்னை ஏன் பிடிக்கல பிடிக்கலங்குறான்..மடையன்...ஒருவேளை அந்த பெண் சொன்னது உண்மையாக இருக்குமோ??இருந்து விட்டு தான் போகட்டுமே...ஆனால் தற்போதைய என் நிலைக்கு இந்த முடிவு சரி தான்.." என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டாள்..

அன்று விடியற்காலையில் யாருக்கும் தெரியாமல் வெளியே சென்றவள்..
சில மணி நேரத்தில் திரும்பி வந்த போது,

"ஐயோ என்ன கோலம் டி இது..என்ன பண்ணிட்டு வந்திருக்க??" அதிர்ச்சியுற்றாள் விஜி..

தொடரும் ..

No comments:

Post a Comment