Episode-8
----------------
பூமி பட்டால் அவள் பாதம் நோகுமென்று ,மரங்கள் தமக்குள் கூடிப் பேசி ,அவள் வரும் பாதையில் பூக்கள் உதிர்த்தனவோ..மஞ்சள் மெத்தை விரிப்பு போலே பூக்கள் கிடந்த வழியில் ,அவளது வருகை பூவின் வருகையோ..
ஒரு வாரம் முன்பு வரை , இப்படித்தான் அவளை பார்க்கும் போதெல்லாம் கவிதைகளாய் கிறுக்கி வந்தான்....இன்றோ..அதோ வருகிறாள் அவள்..
மஞ்சள் சுடிதாரில் ,மஞ்சள் நிற பூ போல...அவனோ பார்த்தும் பார்க்காதது போல் சட்டென்று திரும்பிக் கொள்கிறான்.."மச்சி உன் ஆளு டா .." என்ற நண்பனின் வார்த்தைகள் காதில் விழாதது போல்..
கார்த்தி, தேவிக்கு நடுவுல அப்டி என்ன தான் நடந்திருக்கும்???ம்ம்...கதைன்னா சஸ்பென்ஸ் இருக்கணும்னு சிலர் சொன்னதால முதல்ல இத எழுதிட்டேன்..என் கூட வாங்க..ஒரு வாரம் முன்னாடி, அப்டி என்ன தான் நடந்துச்சுன்னு பார்த்துட்டு வருவோம்..
----------------------------
ஐந்து நிமிடங்களாய் காலிங் பெல் ஒலித்துக் கொண்டே இருந்தது..
ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள் தேவி..
"ஹே கார்த்தி..இதோ வர்றேன்.." என்றபடி கதவை திறந்தாள்..
அப்போது தான் குளித்திருப்பாள் போல் தெரிந்தது..தன் நீளமான கூந்தலை டவெலுக்குள் அடக்கி வைக்க முயற்சித்துக்கொண்டிருந்தாள்...அணிந்திருந்தது சுடிதார் டாப் மட்டும் என்பதால் ,இரு புறமும் இருக்கும் சைடு ஓபன் வழியாக தொடை தெரியாமலிருக்க, ஒரு டவ்வலை இடையில் உடுத்திருந்தாள்..
"பாட்டி இல்லையா??" என்ற கார்த்தியிடம்,
"டெல்லி மாமா வீட்டுக்கு போயிருக்காங்கடா..உட்காரு...வந்துடுறேன்.." என்று சோபாவை காண்பித்துவிட்டு உள்ளே சென்றவள், தன் அறை கதவை தாழிட்டாள்..
தன் இடையில் இருந்த துண்டை அவிழ்த்துவிட்டு.,ஒரு கருப்பு நிற பேன்ட்டை அணிந்து கொண்டாள்..பின்னர்,தன் மேஜை மேலிருந்த பைலை எடுத்துக்கொண்டாள்..
வெளியே செல்ல முற்பட்ட போது தான் டிஜிட்டல் கேமரா கண்ணில் பட்டது..
"அட ..இத கார்த்தி கிட்ட காட்டவே இல்லையே.." என்று லேசாக முணுமுணுத்தபடி, கேமராவையும் கையில் எடுத்துக் கொண்டாள்..
ஹாலில் ஷோ கேஸ் பொம்மைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தான் கார்த்தி..
"இதோ பாருடா..இதான் லாஸ்ட் ..இன்னொரு முறை அசைன்மெண்டு எழுதி குடுன்னு என்கிட்டே குடுத்த கொன்னுடுவேன்.." என்றபடி பைலை நீட்டினாள்..
அவனுக்கொன்றும் அது புதிதில்லை..இது தான் லாஸ்ட் என்பது அவள் ஒவ்வொரு முறையும் சொல்லும் டயலாக் தான்..எனவே எப்போதும் போல், "ஓகே.ஓகே.." என்றபடி தலையாட்டினான்..
"அது என்ன??" அவள் கையில் இருந்த கேமராவை நோக்கி கை நீட்டினான்..
"உன் கிட்ட காட்ட தான் கொண்டு வந்தேன்..இரு.." என்றபடி சோபாவில் அவனருகே அமர்ந்து கொண்டாள்..
" இதோ பார்த்தியா..டெல்லி மாமா வீட்ல வச்சு எடுத்த போட்டோ.."
"ம்ம்..நல்லாருக்கு..ஆனா அந்த பாப்பாவ என்ன பண்ணின ??ஏன் அழுதுட்டிருக்க்கு??
"அது வந்து...அந்த பொண்ணுக்கு ஒரு குட்டி ட்ரைசைக்கிள் இருந்துச்சா..அதுல வந்து..நான் உட்கார்ந்து பார்த்தேனா..அவ சைக்கிள்ள நான் உட்கார்ந்தேன்னு அழ ஆரம்பிச்சுட்டா.."
"அடிப் பாவி..எரும மாடு மாதிரி வளர்ந்துட்டு குட்டி பாப்பா சைக்கிள்ள ..ஐயோ கடவுளே.." என்ற படி அவள் தலையில் லேசாக குட்டினான்..
அவனது மோதிரம் அவள் கூந்தல் மறைத்த டவ்வலில் சிக்கிக் கொண்டது..இழுத்த போது அவள், "ஆ...இரு ..இரு...: என்றபடி டவ்வலை அவிழ்த்தாள்..
இப்போது சிக்கலில் சிக்கியிருந்த கை என்னவோ விடுபட்டு விட்டது..மனம் தான் தாறுமாறாய் சிக்கிக் கொண்டது..
"அவள் ஈரக்கூந்தல் துவட்டி முடித்தாள் உதிர்ந்தன முத்துக்கள்.." கவிதை சொல்ல மனம் எத்தனித்தது..அவளை அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தான்..மனம் தன் நிலைப்பாட்டை விட்டு கொஞ்சம் நகர்ந்திருந்தது..
அவன் பார்வையை கவனித்தவள், தானும் சற்று குழம்பினாள்..அவன் அருகில் இருந்தபடியே வேறு ஏதாவது பேச நினைத்தவள் ,கொஞ்சம் உளறிவிட்டாள்..ஆம்..அதை அவள் சொல்லியிருக்க வேண்டாம்..
கார்த்தி..டெல்லி மாமா ஒரு சோப்பு குடுத்தாரு ..செம வாசன டா...இங்க பாரேன் என்று அவன் முகத்தருகே தன் கன்னத்தை நீட்டினாள்..
சோப்பு வாசனைய பாரு என்று தான் காதலிக்கும் அழகுபதுமை கன்னத்தை நீட்டினால்..ஒரு நல்ல ஆண் மகன் முகர்ந்து பார்ப்பானா முத்தமிடுவானா ???
அவன் நிலைகுலைந்தான்..அடுத்த நொடி, அவன் இதழ்கள் அவளது கன்னத்தில் பதிந்தது..அதிர்ச்சியில் விலகியவளின் கைகளை பற்றிக் கொண்டான்..அவளது இதயம் படபடத்தது..நெற்றி வியர்த்தது...அவனோ இன்னும் நிதானத்திற்கு வந்ததாக தெரியவில்லை..அவள் வலது கையை மீண்டும் தன் இதழருகே கொண்டு சென்றான்..
அவன் கைகளை உதறி தள்ளியவள், சற்றும் யோசிக்காமல், அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள்..
வேறேதோ உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவன், பூமிக்கு திரும்பினான்..இளமையின் வேகத்தில்,உணர்ச்சியின் பிடியில் சிக்கி தான் செய்ததை நினைத்து வருந்தினான்..
தன் இரு கைகளாலும் தன் முகத்தை ஒரு முறை துடைப்பது போல் பாவனை செய்து விட்டு,
"சாரி" என்றான்..
அவளோ அவன் பேசுவதை கேட்க தயாராக இல்லை..
"ஜஸ்ட் லீவ்...இன்னொரு முறை என்கிட்டே பேசாத.." என்று திரும்பிக்கொண்டாள்..
அவனோ தலைகுனிந்தபடி, தன் செய்கையை நினைத்து தானே நொந்த படி, அவ்விடம் விட்டு நகர்ந்தான்..அசைன்மெண்ட் பைல் சோபாவிலேயே கிடந்தது..
---------------------------------
இதய திருட்டுக்கு முத்த தண்டனை என்பார்கள் ..இங்கே முத்தமே தண்டனையாக மாறிப் போனது..
"இன்னும் காதலை கூட சொல்லவில்லை, அதற்குள் கால காலமாய் இருந்த நட்பையும் கொலை செய்துவிட்டேனே.." என்று தன் அறையில் அமர்ந்து கண்ணீர் சிந்தினான்..
"நான் எப்டி..இப்டி.." என்று மீண்டும் மீண்டும் தன்னையே கேள்விகள் கேட்டு, தன்னை தானே வார்த்தைகளால் சித்ரவதை செய்து கொண்டான்..
அவன் ஒன்றும் பெண் பித்தன் இல்லை,காம வெறியனும் இல்லை..பாவம்..நொடிப் பொழுதின் உணர்ச்சி தடுமாற்றத்தால் ஏற்பட்ட விபரீதம் அது...மனிதன் தானே ..அதற்கு அவன் மட்டுமே காரணம் என்று குற்றம் சாட்டுவதில் நியாயமுமில்லை..
(தொடரும்...)
No comments:
Post a Comment