Thursday, 25 October 2012

நூறு ரூபாய்

"முதல் மாச சம்பளத்தில் நீ செய்த முதல் செலவு என்ன? "என்றாள் தோழி.நான் பதில் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தேன் ."உன் சிரிப்புக்கு பின்னாடி பெரிய கதை இருக்கும் போல இருக்கே..எனக்கும் சொல்லேன் "என்றாள் தோழி.நானும் சொல்ல தொடங்கினேன்.

"அப்போது நான் ஆந்திராவில் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன்.அந்த விடுதியில் சமையல்கார பாட்டி ஒருத்தி இருந்தாள்.முதலில் அந்த பாட்டியை பற்றி சொல்லியாகனும்.அவளுக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும்.கண்ணில் ஒரு பெரிய கண்ணாடி போட்டிருப்பாள்..அருமையாக சமைப்பாள்..முகத்தில் எப்போதும் புன்னகை இருக்கும்.எல்லோரும் அவளை பாமா என்று அழைப்பார்கள்.நானும் அப்படி தான் அழைப்பேன்.சுடு தண்ணீர் வேண்டும் என்றால் "பாமா கொஞ்சம் வேதி நீலு காவாலி" என்பேன் .அவளும் முகம் கோணாமல் விரிந்த புன்னகையோடு நான் கேட்டதை கொடுப்பாள்.

முதல் மாத சம்பளம் கையில் கிடைத்த போது ,அந்த பாட்டிக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் போல் தோன்றியது.அதிகம் இல்லை.வெறும் நூறு ரூபாய் தான்.விடுதியை நடத்துபவர் பார்த்தால் அந்த  பணம் கூட பாட்டிக்கு கிடைக்காது  என்று எனக்கு நன்றாக தெரியும்.அதனால் அவரை தனியாக அழைத்து பேசி அந்த நூறு ரூபாயை கொடுக்க முடிவு செய்தேன்.அதற்காக தெலுங்கில் நான்கு வரிகள் கற்று கொண்டேன்.அன்று இரவு கையில் பணத்துடன் அந்த பாட்டியிடம் சென்றேன்."பாமா மீதோ கொஞ்சம் மாட்லாடாலி.பைட்ட கி ஒஸ்தாரா "என்று அவரை வெளியில் வரும்படி சொன்னேன்.பாட்டி வெளியில் வந்து ஒரு படிக்கட்டுக்கு அருகில் நின்றிருந்தாள்.அவளிடம் சென்றேன்.

 அந்த நூறு ரூபாயை கொடுத்தேன்.அவளோ அதை வாங்கவில்லை .மிகவும் கட்டாயபடுத்தி அதை அவள் கைகளில் திணித்தேன்.அத்துடன் விடவில்லை."இன்று தான் என் முதல் மாத சம்பளம் கிடைத்தது.உங்களை பார்த்தால் என் பாட்டி என் நினைவுக்கு வருகிறாள்.என்னை ஆசிர்வதியுங்கள் ."என்று எனக்கு தெரிந்த தெலுங்கில் உளறியபடி அவள் காலில் விழுந்துவிட்டேன்.அவளோ என் தலையில் தன கையை வைத்து ஏதேதோ சொன்னாள்.அவள் சொன்னதில் பாதி எனக்கு புரியவில்லை .ஆனால்  என்னை ஆசிர்வதிக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.எழுந்து பார்த்த போது அவள் தன் பெரிய கண்ணாடியை கழற்றி தன் கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்துக்கொண்டிருந்தாள்."இந்த வாரம் என் பேத்திக்கு கல்யாணம்.நான் கூட ஊருக்கு போறேன் .நீ நல்லா இரும்மா " என்று என் தலையில் கை வைத்த படி மீண்டும் சொன்னாள்.என் முதல் மாச சம்பளத்தில் நான் செய்த முதல் செலவு அந்த நூறு ரூபாய் தான்."என்று என் புன்னகைக்கு பின்னால் இருந்த அந்த பெரிய கதையை சொல்லி  முடித்தேன்.


"அப்போ ஒரு வயசான பாட்டிய வெறும் நூறு ரூபாய் குடுத்து அழ வச்சிருக்க அப்டி தானே ?"என்று மீண்டும் கேள்வி கேட்டாள் தோழி."ம்ம்ம்ம்.ஆனால் அது அழுகை அல்ல ஆனந்த கண்ணீர்.பதினெட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய எனக்கு நூறு ரூபாய் சிறியது தான்.ஆனால் வயதான காலத்தில் சமையல் வேலை செய்து பிழைக்கும் அந்த பாட்டிக்கு நூறு ரூபாய் நிச்சயமா ரொம்ப ரொம்ப பெருசு.அது மட்டுமில்ல.எவ்ளோ குடுக்குறோம் அப்டிங்கறது முக்கியம் இல்லை.எவ்வளவு அன்போடு கொடுத்தோம் என்பது தான் முக்கியம்.ராமர் கிட்ட சிவதனுசை உடைக்க சொல்லவில்லை.அனால் அவர் பலம் தாங்க  முடியாமல் தனுசு உடைந்து விட்டது.அது மாதிரி தான்.நான் அந்த பாட்டியை சந்தோஷ படுத்த வேண்டும் என்று மட்டும் தான் நினைத்தேன் .ஆனால் என் அன்பின் சக்தி தாங்க முடியாமல் பாட்டி கண்ணீர் விட்டு விட்டாள். அது எப்படி குற்றமாகும்??"என்று தோழியிடம் கேட்டேன்.அவள் பதில் ஒன்றும் சொல்ல முடியாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள் .எனக்கோ அந்த பாட்டியின் புன்னகை நிறைந்த முகம் கண் முன்னே நிழலாடியது...

1 comment: