Episode-2
அந்த வார இறுதியில் நந்தினியும் ராதாவும் சசி வீட்டிற்கு புறப்பட தயாரானார்கள் .
அந்த வார இறுதியில் நந்தினியும் ராதாவும் சசி வீட்டிற்கு புறப்பட தயாரானார்கள் .
இரயில் நிலையத்தில் ,
" நாளைக்கு காலைல ரெண்டு பேரும் அரக்கோணம் போய் சேர்ந்துடுவீங்க.அங்கிருந்து சசி வீட்டுக்கு கூட்டிட்டு போக யார் வருவா ??சசி வருவாங்களா ?" என்றான் அருண்.
"ம்ம்...ஆமாங்க..சசி வருவா .நாளைக்கு ஒரு நாள் மட்டும் அவ வீட்ல தங்குவோம் .இன்னைக்கு வெள்ளிக்கிழமை தானே..திங்கட்கிழமை காலைல வீட்டுக்கு வந்துடுவோம்..
நான் இல்லைங்கறதால நீங்க அங்க இங்கன்னு சுத்திட்டு இருக்காதீங்க ..நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடு !!ஒழுங்க சாப்பிடு !!எப்போவும் டிவிலே இருக்காத .ராத்திரிக்கு தோசை மாவு வச்சிருக்கேன்..அப்றோம் "என்று மேலும் ஏதோ சொல்லப்போனவளை அவன் பார்வை தடுத்தது..
அவள் இப்படித்தான் கொதிக்கும் எண்ணெயில் போட்ட கடுகு போல் பட பட பட பட என்று பேசிக்கொண்டே போவாள் என்று அருணுக்கு நன்றாக தெரியும்..தன் கணவனை பொது இடங்களில் வா,போ என்று அழைக்க கூடாது என்பதற்காக "ங்க" என்று அவள் தன் பேச்சில் சேர்க்க முயல்வதும் ,முடியாமல் தோற்று போவதும் ,அவனை பொருத்தவரை ரசனைக்குரிய விஷயம் தான்.
தன் மனைவி பேசும் விதத்தை ரசித்தபடி ,
"சரி சரி !இங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்..நீ பத்திரமா போயிட்டு வா " என்றான்..
பிரியும் வேளையில் மீண்டும் ஒரு பார்வை பரிமாற்றம்..
அவன் பார்வை ,"நீ கண்டிப்பா போகனுமா நந்து !!பேசாம வீட்டுக்கு போயிடுவோமா?" என்பது போல் இருந்தது .அவளுக்கு அவன் பார்வை சொல்லும் வார்த்தைகள் தெள்ள தெளிவாய் புரிந்ததாலோ என்னவோ
"ப்ளீஸ் டா" என்னும் பாவனையில் தன் புருவங்களை சற்று சுருக்கியபடி கெஞ்சலாய் ஒரு பார்வை பார்த்தாள்.
நான்கு விழிகள் மெளனமாக பேசிக்கொள்ளும், இந்த கவித்துவமான உரையாடலை கேட்கச் சகியாமலோ என்னவோ
"ம்க்கும் " என்று லேசாக செறுமினாள் ராதா..
சட்டென்று சுயநினைவிற்கு வந்தவனாய் , தன் பார்வையை வேறு பக்கமாய் திருப்பிக்கொண்டான் அருண்..
"அண்ணா!!ரெண்டு நாள் தானே !!சமாளிச்சுக்கோங்க ..உங்க மனைவிய பத்திரமா உங்க கிட்ட கொண்டு வந்து சேர்த்துடுறேன்.." " என்று சொல்லியபடி முறுவலித்தாள் ராதா.
அவனும் தலையசைத்தான்..
இரயில் புறப்பட்டது .அடுத்த நாள் காலையில் அரக்கோணத்தில் இறங்கியதும்,
"ஏண்டி உன் வீட்டுக்காரர்கிட்ட அப்டி சொன்ன?" என்றாள் ராதா
"எப்டி சொன்னேன் ?" என்றாள் நந்தினி..
அவர்கள் உரையாடல் தொடர்ந்தது..
"நம்மை இங்கிருந்து கூட்டிட்டு போக சசி வர்றதா சொல்லவே இல்லையே ..அப்றோம் ஏன் உன் வீட்டுக்காரர் கிட்ட சசி வருவான்னு சொன்ன?உண்மைய சொல்ல வேண்டியது தானே..
"ம்ம்..உண்மைய சொல்லியிருந்தா ரெண்டு வண்டி மூணு வண்டி பிடிச்சு நீ தனியா எங்கேயும் போக வேண்டாம்னு சொல்லி, என்னை அப்படியே வீட்டுக்கு இழுத்துட்டு போயிருப்பார்..நான் தனியா எங்காச்சு போய் ஏதாவது பிரச்சனைல மாட்டிக்குவேனொன்னு அவருக்கு பயம்.ஏன் தெரியுமா ? because he loves me truly " என்றாள் நந்தினி .
தன் தோள்பட்டையை மோவாயால் இடித்தபடி ," ம்க்கும் ..மை வீட்டுக்காரர் also loves me " என்றாள் ராதா ..அத்துடன் நிறுத்தாமல் ," தேவதை மாதிரி ஒரு பொண்ணு என் பக்கத்துல நின்னுட்டிருந்தா கூட ,என் வீட்டுக்காரர் அந்த தேவதையை பார்க்க மாட்டார் ..என்னை தான் பார்ப்பார் ,..தெரியுமா?" என்றாள்..
பெண்மைக்கே உரித்தான ஆற்றாமையும் பொறாமையும் அவள் பேச்சில் வெளிப்பட்டது..
"ஏன் ..உன் வீட்டுக்காரர் ரசனை அவ்ளோ மோசமா இருக்குமா??" என்றபடி சிரித்தாள் நந்தினி..
" ஹலோ !!என்ன நக்கலா?? நீ பக்கத்துல இருக்கும் பொது அருண் அண்ணா உன்னை விட்டுட்டு வேற யாராவது அழகான பெண்ணை பார்த்துகிட்டிருந்தா உனக்கு கோபம் வராதா ?" என்று சற்று கோபமாகவே கேட்டாள் ராதா .
" ம்ஹூம் கோபம் எல்லாம் வராது ..""ஹே !! சைட் அடிக்கிறியா ? அப்டின்னு கேட்டு அவன் தோளில் லேசா ஒரே ஒரு தட்டு தட்டுவேன்..அப்றோம் ரெண்டு பேரும் சேர்ந்தே சைட் அடிப்போம்..அழகை ரசிக்கிறது தப்பு இல்லை ராதா.அருணை பற்றி எனக்கு நல்லா தெரியும் .அவரு கண்ணு யார வேணும்னாலும் பார்க்கலாம் ..ஆனா அவர் மனசு மட்டும் எனக்கு தான் சொந்தம் .எனக்கு மட்டும் தான் சொந்தம்.."
" ஓஹோ !!அழகை ரசிக்கிறது தப்பு இல்லையா..??அப்போ நீ அழகா இருக்குறதா நெனச்சு ,உன்னை யாரவது ரசிச்சு பார்த்தா உன் வீட்டுக்காரர் ஒன்னும் சொல்ல மாட்டாரு ..அப்படித்தானே.." என்ற ராதாவின் குரலில் கோபம் சற்று தூக்கலாகவே இருந்தது..
நீ கூட அழகா தான் இருக்குற என்று அவள் சொல்லியிருக்கலாம்..அனால் அவளோ " நீ அழகா இருக்குறதா நெனச்சு " என்று சொன்ன ஒற்றை வரியிலேயே பெண்மைக்கான இலக்கணத்தை காட்டி விட்டாள்."
ராதாவின் கோபத்தை சற்றும் பொருட்படுத்தாமல் ,
" ம்ம்ம்..உண்மை தான் .வாயை திறந்து ஒன்னும் சொல்ல மாட்டாரு..அவர் பார்வை ஒன்றே போதும்..ஒருமுறை என்னாச்சு தெரியுமா??நானும் அருணும் பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டிருந்தோம் ..அவர் என்னை விட்டு ரெண்டு அடி தள்ளி நின்று யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தார்..அங்க ஒருத்தன் என்னை ரொம்ப நேரமா பார்த்துகிட்டே இருந்தான்..அது சாதாரண பார்வை இல்ல..கழுகு பார்வை..பெண்ணை வெறும் சதை பிண்டமாக மட்டும் பார்க்கும் மிருகத்தனமான பார்வை.கொஞ்சம் நேரம் பொறுமையாய் இருந்தேன்..அந்த மனிதனின் செயல்கள் எல்லை மீறிக்கொண்டே போனது.அவன் தன் உதடுகளை நாவால் ஈரப்படுத்தினான்.,பின்னர் தன் கீழுதட்டை பற்களால் கடித்துக்கொண்டான்.கண் சிமிட்டினான்..சைகையால் "தனியா போலாமா ?" என்றான்." சீ சீ !!அக்கா தங்கையோடு பிறந்திருக்க மாட்டான் போலும் .பெண்ணை இதற்கு முன் பார்த்திருக்கவே மாட்டான் போலும் ! என்று என்னென்னவோ மனதில் தோன்றியது..
ஒரு கட்டத்தில் ரொம்பவே பயந்துட்டேன்..வேகமாய் நகர்ந்து, அருண் பக்கத்துல போய் அவர் கையை இறுக்கமாய் பிடித்துக்கொண்டேன்..என் நடுக்கத்தை வைத்தே,என் பயத்தை புரிந்து கொண்ட அவர் ,கைபேசி இணைப்பை துண்டித்து விட்டு ,தன் புருவத்தை உயர்த்தியபடி ,"என்னாச்சு ?" என்றார் .
நான் லேசா தலையை திருப்பி அந்த ஆளை ஒரு முறை பார்த்து விட்டு ,அருணை ஒரு முறை பார்த்தேன்..அப்றோம் திரும்பவும் அவர் கைய இறுக்கமா பிடிச்சுக்கிட்டேன்.அவர் என் கையை உதறி விட்டு விட்டு அந்த ஆளு சட்டய புடிச்சு சண்டை போடுவார் அப்டின்னு எதிர்பார்த்தேன்..ஆனா அவர் அப்டி எதுவும் செய்யல ..அவர் அவனை கோபமாய் முறைத்து பார்த்துகிட்டே இருந்தார்..அவர் பார்வையிலேயே அந்த ஆளு பயந்துட்டான்..மெதுவா தயங்கி தயங்கி எங்களை நெருங்கி வந்தான்..வந்து என்ன சொன்னான் தெரியுமா??"அண்ணே !!இந்த தேர்தலில் சுத்தியல் அரிவாள் சின்னத்துக்கே உங்க ஓட்ட போடுங்க !!" அப்டின்னான்..நான் வாய வச்சுகிட்டு சும்மா இருக்காமல் ,
"யோவ் !!சுத்தியல தூக்கி உன் மண்டையில போட்டுடுவேன் ..ஒழுங்க ஓடி போயிடு !!" அப்டின்னு சொன்னேன்..அருண் அந்த ஆளோட பேச்சை காதுல வாங்காம முறைத்துக்கிட்டே இருந்தார்..அவர் பார்வைக்கு பயந்தே அந்த ஆளு மெதுவா அங்கிருந்து நழுவிட்டான்..."
அப்றோம் என்னாச்சு தெரியுமா?"
"வேண்டாம்..சொல்லாதே அப்டின்னு சொன்னா நீ விடவா போற..சொல்லு..அப்றோம் என்னாச்சு.."
" அப்றோம்..அருணோட கோபமான பார்வை என் பக்கம் திரும்புச்ச்சு..
இப்போ என்னை எதுக்கு முறைக்கிறீங்க ? அப்டின்னு கேட்டேன்..
அதுக்கு ,"எந்த பிரச்சனையா இருந்தாலும் நம்மால முடிஞ்ச அளவு ஒதுங்கி போகணும். நாமே தலைய குடுத்து "இந்தாவெட்டுங்க வெட்டுங்க " அப்டின்னு சொல்றது முட்டாள் தனம்.நான் தான் உன் பக்கத்துலையே இருக்குரேனே..அப்றோம் நீ எதுக்கு தேவை இல்லாம அந்த ஆளுக்கெல்லாம் பதில் சொல்ற.." அப்டின்னு ஒரு பெரிய பிரசங்கமே பண்ணினாரு...
"நீங்க என் கூட இருக்குற தைரியத்துல தான் அப்டி சொன்னேன்.." அப்டின்னேன்..அதுக்கு அவர்," இப்போ நான் உன் கூட இருந்தேன்..இதே மாதிரி எப்பவும் என்னால உன் கூட இருக்க முடியுமா ?"என்றார்..உடனே என் புருவங்களை சுருக்கிக்கொண்டு சின்னஞ்சிறு குழந்தை போல் முகத்தை வைத்துக்கொண்டு ,
"ஏன் ? எப்பவும் என் கூட இருக்க மாட்டியா?" என்றேன்..நான் கேட்ட அந்த ஒற்றை கேள்வியிலேயே அவர் கோபம் எல்லாம் மாயமா போச்சு.சிரித்தபடியே ,என் தலைல லேசா ஒரு தட்டு தட்டினார்.." சரியான இம்சை டி நீ " அப்டின்னார்..
நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலியே..இருப்பியா ? இல்லையா ?" என்று மீண்டும் கேட்டேன்..
அவருக்கே உரிய பாணியில் மெல்ல தலையசைத்தபடி,
" ம்ம்..இருப்பேன்..என் வேலை வெட்டி எல்லாத்தையும் விட்டுட்டு எப்பவும் உன் கூடவே தான் இருப்பேன் ..சரியா ?" என்றபடி சிரித்தார்..நானும் சிரித்துக்கொண்டேன்..."
என்று ஒரு பெரிய கதையை சொல்லி முடித்தாள் நந்தினி..அத்துடன் நிறுத்தாமல் தன் கையில் இருந்த பையை கீழே வைத்து விட்டு, தனது கை விரல்கள் பத்தையும் ஒன்றோடொன்று கோர்த்து ,உடலை ஒருவாறு நெளித்தபடி..
"அருண் என் ஹீரோ டி " என்றாள்..
தனது தோழியின் காதல் புராணத்தை கேட்கச் சகியாதவளாய்,
"போதும்!போதும்!!வடக்கம்பட்டுக்கு எத்தனை மணிக்கு பஸ் இருக்குன்னு யாரையாச்சு கேட்கலாம் வா!!" என்று நந்தினியின் வாயை மூட பேச்சை பேருந்தின் பக்கமாய் திருப்பினாள் ராதா.
(தொடரும்...)
No comments:
Post a Comment