episode -6
-----------
அங்கே சடை பிடித்த தலையுடன் காத்தாயி நின்று கொண்டிருந்தாள்.
தன் தலையை கையால் சொறிந்தபடி,
"ஹி!ஹி !ஹி!!" என்று சிரிக்க தொடங்கினாள் காத்தாயி..
நந்தினியின் அலறல் சத்தம் சற்று தொலைவில் சென்று கொண்டிருந்த சசி மற்றும் ராதாவின் காதுகளை எட்டியது..
"நந்து !!" என்ற படி இருவரும் திரும்பி பார்த்த போது அங்கே நந்தினி இல்லை ...அவளோ சற்று தொலைவில் காத்தாயியை பார்த்து பயந்து ,முகம் எல்லாம் வியர்வை சொட்ட பேயறைந்தது போல் நின்று கொண்டிருந்தாள்..
அவள் இருந்த பக்கமாய் டார்ச் அடித்து பார்த்தாள் சசி..
பார்த்தவள்,
" ஹே !!காத்தாயியா ??பயப்படாத நந்து !!அவ ஒன்னும் செய்ய மாட்டா !!ஆனா ஓடாத ..அங்கேயே நில்லு.." என்றாள் சத்தமாக..
" ஏன் ஓடினால் என்ன?" என்ற ராதாவிடம்,
" ஐயோ!!ஓட தொடங்கினால் அந்த பைத்தியம் விடாம துரத்தும் ...கடைசியா எங்காச்சு தள்ளி விட்டுடும்.." என்றாள்..
மீண்டும் காத்தாயியை பார்த்து,
" காத்தாயி பாட்டி!!உன்ன ராமையா தேடிட்டு இருந்தாரு..நீ இங்க என்ன பண்ற??" என்றாள்..
" என்னது?? என் சாமி என்ன தேடுச்சா?" என்று கேட்டு அடுத்த நொடியே ,சிட்டாய் மறைந்தாள் காத்தாயி ..
அதிர்ச்சியில் உறைந்தவளாய் அந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றாள் நந்தினி..
" ஏய் நந்து! அந்த காத்தாயி போயிடுச்சு..நீ வா!!" என்றதும் அதிர்ச்சி களைந்து வேக வேகமாய் தன் தோழிகளை நோக்கி நடந்தாள் நந்தினி..
ஒரு வழியாக ஒற்றை அடி பாதையை மூவரும் கடந்தனர்..
" நான் இதுக்கு மேல வர முடியாதும்மா !! நீங்க பத்திரமா பார்த்து போங்க !! இந்தா இந்த டார்ச் லைட்ட பிடி!! எனக்கிது பழக்கப்பட்ட பாதை தான்.கைபேசி வெளிச்சத்தை வச்சு வேகமா ஓடிடுவேன்.." என்று விடை பெற்றுக்கொண்டாள் சசி..
சசியிடமிருந்து டார்ச் லைட்டை வாங்கி கொண்டாள் ராதா .நந்தினியோ ஒரு வித அச்சத்துடனேயே காணப்பட்டாள்..
"வா நந்து!! வேகமா நடந்துடலாம் " என்று காலையில் வந்த வழி பார்த்து இருவரும் நடக்க தொடங்கினர்..
வழியில் மூன்று இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்..அதில் ஒருவன் ராதாவின் முகத்தில் டார்ச் லைட்டை அடித்த படி, " என்னம்மா !!தனியாவா?? நான் வேணும்னா துணைக்கு வரட்டுமா??"
என்றான்..
அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல் , எதையும் யோசிக்க சக்தியற்றவளாய் , மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்த நந்தினியின் கையை பற்றி இழுத்தபடி தனது நடையின் வேகத்தை கூட்டினாள் ராதா.
அந்த மனிதர்களும் விடுவதாயில்லை ..அவர்களும் தங்கள் நடையின் வேகத்தை கூட்டி இருவரையும் பின் தொடர்ந்தனர்..
ஓட்டமும் நடையுமாய் ஒரு வழியாக காலையில் அமர்ந்திருந்த கல்லறையை தாண்டி , மாட்டு வண்டிக்காரர் இறக்கி விட்ட இடத்தை அடைந்தனர்..
கட்டை விரலுக்கு மட்டும் ஒரு பிரத்யேக குணம் உண்டு..ஒரு முறை அடி பட்ட இடத்தில் மீண்டும் அடி பட்டே தீரும்..அப்படித்தான் மீண்டும் நந்தினிக்கு வலது கால் கட்டை விரலில் அடிபட்டது..வழியில் கிடந்த கல்லை கவனிக்காமல் ஓடியதில், கால் இடறி கீழே விழுந்தாள்..
அவளை எழுப்ப முயற்சிப்பதற்குள், அவர்கள் நம்மை நெருங்கி விடுவார்களோ என்றோர் அச்சம் ராதாவிற்கு..இதற்கு மேல் சத்தம் இல்லாமல் ஓடுவதில் அர்த்தம் இல்லை என்று நினைத்த தாலோ என்னவோ ,
" யாராவது இருக்கீங்களா??காப்பாத்துங்க காப்பாத்துங்க ...!!"என்று கத்த தொடங்கி விட்டாள்..
இவள் இப்படி சத்தம் போடுவாள் என்று எதிர்பார்க்காத அந்த இளைஞர்கள்,
" இல்ல வேண்டாம் டா..போயிடலாம் " என்று தங்களுக்குள் சொல்லியபடி வந்த வழியே திரும்பினர்...
அதில் ஒருவன் மட்டும் திரும்பி திரும்பி பார்த்த படியே சென்று கொண்டிருந்தான்..
ராதாவின் கூக்குரல் கேட்டு, அருகில் இருந்த ஒரு குடிசையில் இருந்து கிழவி ஒருத்தி பதற்றத்தோடு வெளியே வந்தாள்..கீழே விழுந்திருந்த நந்தினியை எழுப்ப முயற்சித்துக்கொண்டிருந்த ராதாவின் முகத்தில் பெட்ரோ மாக்ஸ் லைட்டின் வெளிச்சம் அடித்தது..சற்று பயந்து திரும்பிய ராதாவிடம்..
" யாரும்மா நீங்க?? இந்த நேரத்துல இப்டி தனியா வர்றீங்களே !!" என்றாள் அந்த கிழவி..
ஏற்கனவே அரண்டு போயிருந்த நந்தினி, மேலும் பயன்திருந்ததால் பேச நா எழவில்லை.ராதாவே எல்லா விபரங்களையும் அந்த பாட்டியிடம் சொன்னாள்..
அதை கேட்ட பாட்டி.." ம்ம்..என்ன மனுஷங்களோ??இப்டி ராத்திரி வேளையில பொட்ட புள்ளைகள தனியா அனுப்பியிருக்காங்களே..!!கொஞ்சம் பொறுங்க மா...என் புள்ள ராசையா உங்கள ஆட்டோல கொண்டு போயி வடக்கம்பட்டுல விட்டுடுவான்.." என்றபடி..
"அய்யா ராசு!!" என்று அழைத்தாள் பாட்டி..
குடிசையின் உள்ளே சாப்பிட்டு கொண்டிருந்த நடுத்தர வயது மனிதர் ஒருவர் தன் கைகளை கழுவி விட்டு வெளியே வந்தார்..இருட்டில் அவர் முகம் சரியாக தெரியவில்லை..
அந்த பாட்டி பெட்ரோமாக்ஸ் லைட்டை தன் மகனின் புறமாய் தூக்கி காட்டினாள்..வெளிச்சத்தில் அந்த மனிதரின் முகத்தை பார்த்த போது மேலும் அதிர்ச்சியை இருந்தது..
காலையில் அரக்கோணத்தில் பார்த்த அதே விகாரமான முகம்..அந்த கிழவி தன் மகனிடம் அவர்களின் நிலையை விளக்கி அவர்களை வடக்கம்பட்டு வரை கொண்டு விடும்படி சொன்னாள்..
வேறு வழியில்லாமல் இருவரும் ஒப்புக்கொண்டனர்..
ஆட்டோ கிளம்பியது..
நந்தினி ஆட்டோவின் பின் இருக்கையில் நன்கு சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள்...அவளது வலது கால் வலித்தது..அதனால் தனது வலது காலை மெல்ல தூக்கி தன் இடது தொடை மேல் வைத்துக் கொண்டாள்..பின்னர் தனது கைகளால் தன் காலை லேசாக அழுத்திக்கொண்டாள்..சட்டென்று அதிர்ந்தாள்..அவளது வலது கால் கொலுசை காணவில்லை..எங்கோ விழுந்து விட்டது போலும்..
பதற்றத்துடன் ராதாவிடம்,
" ராதா ..என் கொலுசு..என் கொலுசை காணோம்.." என்றாள்..ராதவோ,
"இப்போ என்ன பண்ண சொல்ற?ஆட்டோவ வேணும்னா திருப்ப சொல்லட்டுமா???வாய மூடிட்டு சும்மா இரு.." என்று சற்று கோபத்துடன் கூறினாள்..
(இந்த காட்டை விட்டு உசிரோட திரும்புவோம??மானத்தோட திரும்புவோமா??என்று ஒவ்வொரு நிமிஷமும் பயந்துகிட்டு இருக்கேன்..இவளுக்கு கொலுசு வேணுமாம் கொலுசு .." என்று முனு முனுத்தாள் ராதா..
அவள் கோபத்தை புரிந்து கொண்ட நந்தினியோ ஆட்டோவில் நன்கு சாய்ந்து அமர்ந்தபடி.."என் கொலுசு..என் கொலுசு.." என்று லேசாக முனுமுனுத்தாள் ..
முன்பு ஒரு நாள் நடந்த சம்பவம் ஓன்று அவள் நினைவிற்கு வந்தது..
அன்று காலையில் அவள் தன் படுக்கையை விட்டு எழுந்த போது தான் கவனித்தாள்..அவளது வலது கால் கொலுசை காணவில்லை..
தன் படுக்கை முழுவதும் தட்டி கொலுசு இருக்கிறதா என்று தேடி பார்த்து கொண்டிருந்தாள்..அப்போது தான் அருண் கையில் செய்தி தாளுடன் அறைக்குள் வந்தான்..வந்தவன்,
" வேணும்னா பாரு நந்து, இந்த தேர்தலில் நிச்சயமா ஊழல் இல்லாத நல்லாட்சி தான் அமையும்..மக்கள் விழித்துக் கொண்டார்கள்..நல்ல மனிதர்கள் ஆட்சிக்கு வருவார்கள் " என்று சொல்லிக் கொண்டே போனான்..
அதற்கு அவளோ,
" யாரு வேணும்னாலும் வரட்டும்..வர்றவங்க என் கொலுச கண்டுபிடிச்சு கொடுப்பாங்களா?" என்றாள்..
" ம்ம்..உனக்கு உன் பிரச்சன.."
" ஆமா எனக்கு என் கொலுசு தான் முக்கியம்"
"அப்போ !!அதை வாங்கி தந்த நான் முக்கியம் இல்ல அப்டி தானே.."
"வாங்கி தந்தது நீ என்பதால் தான் அது எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.."மறந்துட்டியா ??கல்யாணம் முடிஞ்ச பிறகு முதல் முதலா நீ எனக்கு கொடுத்த பரிசு அது.."
" சரி விடு!!சாதா கொலுசு தானே..அதுக்கு போயி ஏன் இவ்ளோ பீல் பண்ற??"
" சாதா கொலுசு???.ம்ம் ...அதெல்லாம் உனக்கு புரியாது அருண்.."
"சொன்னா தானே புரியும் ..சொல்லு புரிஞ்சுக்குறேன்.."என்று அவன் எகத்தாளமாய் சொன்னதும் அவனை ஒரு முறை முறைத்து பார்த்து,
" போ டா!!"
என்றபடி தன் தேடுதலை மீண்டும் தொடர்ந்தாள்..
அவனோ,
" ம்ம்..உயிரில்லாத பொருட்களுக்கு கொடுக்கும் மரியாதையை கூட உயிருள்ள புருஷனுக்கு கொடுக்க மாட்டீங்க..கேட்டா ..அதெல்லாம் உனக்கு புரியாதுன்னு சொல்ல வேண்டியது.." என்று சொல்லியபடி பேப்பரில் மூழ்கினான்..
கொஞ்சம் நேரம் கழித்து அவள் அருகே சென்று,
அவள் கண்களை தன் கண்களால் ஊடுருவி..
" தேடி முடிச்சுட்டியா??இத தானே இவ்ளோ நேரமா தேடின?? "
என்று தன் சட்டை பைக்குள் கைவிட்டு கொலுசை எடுத்து அவள் கண் முன்னாள் ஆட்டினான்..
சில நிமிட ஊடலுக்கும் அதை தொடர்ந்து வந்த காதலுக்கும் பின்னணியை இருந்த அதே கொலுசு தான் இன்று நிஜமாகவே தொலைந்து போயி விட்டது..
முதலில் "கொலுசு..என் கொலுசு.." என்று முனுமுனுக்க தொடங்கிய நந்தினி இப்போது.." அருண்..என் அருண்.." என்று முனுமுனுக்க தொடங்கி விட்டாள்..
அந்த நேரத்தில் வீசிய காற்று கூட பயமுறுத்த வந்த பேய் போல் தோன்றியது.." இந்த ஆளு நம்மை பத்திரமா கொண்டு போய் விடுவானா இல்லையா ? என்ற சந்தேகத்தோடு ராதாவும், " நான் என் அருண் கிட்ட போகணும்..நான் என் அருணை பார்க்கணும் " என்ற மன புலம்பலோடு நந்தினியும் அமர்ந்திருந்தனர்..
ஒரு வழியாக வடக்கம்பட்டி அடைந்த போது காலையில் பார்த்த டீ கடைக்காரர் தன் கடையை அடைத்துக் கொண்டிருந்தார்..அவரை நோக்கி,
" ராமண்ணே !!அரக்கோணம் பஸ் போயிருச்சா என்றார் ஆட்டோக்காரர்..
"அது போயி பத்து நிமிஷம் ஆச்சு ராசு " என்றார் கடைக்காரர்..
ராதாவை நோக்கி," இந்தாமா ..கடைசி பஸ் போயிருச்சாம் ..நீங்க சம்மதிச்சா நானே உங்கள அரக்கொனத்துல விட்டுடுறேன்.." என்றார் ஆட்டோக்காரர்..
ராதா நந்தினியை ஒரு முறை பார்த்துக் கொண்டாள் ..நந்தினியோ பிரமை பிடித்தவள் போல் "அருண்..அருண்.." என்று முனு முணுத்தபடி அமர்ந்திருந்தாள்..
இப்போது எதை கேட்டாலும் பதில் சொல்லும் நிலையில் நந்தினி இல்லை என்பது ராதாவிற்கு நன்றாகவே புரிந்தது..
அதனால் ஆட்டோக்காரரை நோக்கி
"அரக்கோனத்துலையே விட்டுடுங்கண்ணே.." என்றாள்..
அரக்கோணத்தை அடைந்த போது மணி பத்து ஆகி இருந்தது ..தங்களை பத்திரமாக ரயில் நிலையத்தில் கொண்டு சேர்த்த ஆட்டோக்காரரிடம்,
" அண்ணே!!மன்னிச்சுக்கோங்க " என்றாள் ராதா..ஒரு நல்ல மனிதனை சந்தேகப்பட்டு விட்டோமே என்ற வருத்தம் அவளுக்குள் இருந்தது..அதற்கு அந்த ஆட்டோக்காரர்,
"எதுக்கு மா மன்னிப்பெல்லாம்??உங்கள எப்டியாவது பத்திரமா கொண்டு வந்து செர்த்துடனும்னு நான் கூட பயந்து கிட்டே தாம்மா வண்டி ஓட்டினேன்..என் வீடு வடக்கம்பட்டு கிட்ட இருக்குறதால தான், காலைல ,உங்களுக்கு அங்க யாரை பார்க்கனும்னு கேட்டேன்..ஒரு மனிதனின் முகத்தை வைத்து அவன் நல்லவனா கெட்டவனான்னு முடிவு செய்யாதீங்கம்மா.." என்றார்..
"ம்ம்.." என்று ஆமொதித்தவள் ,அவர் கையில் ஆட்டோவிர்கான பணத்தை கொடுத்து விட்டு நன்றி கூறி அனுப்பி வைத்தாள்..
சுமார் ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பின் , ரயில் வந்தது.
இருவரும் ஏறிக்கொண்டனர்...காலையில் கோயம்புத்தூர் நெருங்கியதும் , அருணுக்கு போன் செய்தாள் ராதா.நந்தினியோ ஜன்னல் வழி வெளியே பார்த்த படி , " நான் என் அருண் கிட்ட போகணும் .." என்று லேசாக முணுமுணுத்து கொண்டே இருந்தாள்..சுற்றி நடக்கும் எதையும் ஏற்றுக் கொள்ளும் , புரிந்து கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை..
ராதாவை பாராட்டியே ஆக வேண்டும்..இவ்வளவு தூரம் அவள் நந்தினியை இழுத்துக் கொண்டு வந்ததே பெரிய விஷயம் தான்..
ரயில் கோயம்புத்தூரை அடைந்த போது அங்கே அருண் காத்துக்கொண்டிருந்தான்..
"என்ன பிரச்சனையா இருக்கும்?நாளைக்கு தானே வர்றதா இருந்தாங்க.." என்று உள்ளூர எண்ணியபடி ரயிலை விட்டு இறங்கிய ராதாவின் அருகில் வந்தான்..
" என்னாச்சு? நந்து எங்கே?" என்ற அருணிடம்
"அதோ" என்று கைகளை இடது பக்கமாய் நீட்டினாள் ராதா..
நந்தினி இறங்காமல் ரயில் பெட்டியின் வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள்..
(தொடரும்...)