Friday 28 June 2013

நினைவெல்லாம் அருண்

Episode 3



ராதாவின் வார்த்தைகளை காதில் வாங்கிக்கொள்ளாமல் ,

"அரக்கோணம் ரயில் நிலையம்  ஆங்கிலேயர் காலத்திலேயே கட்டப்பட்டது தெரியுமா ?" என்றாள் நந்தினி.

ராதவோ ,"அதெல்லாம் இருக்கட்டும்.முதல்ல அந்த ஆட்டோகாரர் கிட்ட வடக்கம்பட்டுக்கு இப்போ பஸ் இருக்கான்னு கேளு " என்றாள்.

"பேசாம சசிக்கே போன் பண்ணி கேக்கலாம் ."

"அதெல்லாம் எதுக்கு ?அவ தான் தன்னோட வீட்டுக்கு வர தெளிவா வழி சொல்லி இருக்காளே !!முதல்ல வடக்கம்பட்டுக்கு பஸ்ல போகணும்.அப்றோம் அங்கிருந்து தலைவேட்டான்பட்டிக்கு அடுத்த வண்டி பிடிக்கணும்..ஊருக்குள்ள போனதும் மிட்டாய்க்கார சுப்பண்ணா வீடுன்னு கேட்டா போதுமாம்"

"மிட்டாய்க்கார சுப்பன்னாவா ?"

"ம்ம்..அவங்க அப்பா முன்னாடி மிட்டாய் கடை வச்சிருந்தாராம் .ஆனால் அந்த தொழிலில் அவருக்கு பயங்கர நஷ்டமாம்.அப்றோம் வேறு ஏதேதோ கூலித்தொழில் எல்லாம் பார்த்து ,அவளை கஷ்டப்பட்டு படிக்க வைத்தாராம்.அந்த 'மிட்டாய் ' என்ற வார்த்தை மட்டும் அவர் பெயரோடு ஒட்டிக்கொண்டதாம்."என்று ராதா சொன்னதை கேட்டு சிரித்தவாறு

"ம்ம் ..மிட்டாய்க்கார சுப்..பண்..ணா" என்று இழுத்து சொல்லி பார்த்த படி ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தாள் நந்தினி.

அங்கிருந்த ஆட்டோக்காரரிடம்.
"அண்ணே !!வடக்கம்பட்டுக்கு இப்போ பஸ் இருக்கா?" என்றாள்.

பின்புறமாய் திரும்பி நின்ற ஆட்டோக்காரர் ,தன்னிடம் ஒரு பெண் பேசும் குரலைக் கேட்டு சட்டென்று திரும்பினார்.அவரது ஒரு கண் முழுவதும் பூ படர்ந்திருந்தது.முகமோ குண்டும் குழியுமாய் விகாரமாய் இருந்தது.

நந்தினி சற்று பயந்து பின் நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாள்.

"வடக்கம்பட்டா ?அங்கே யாரை பார்க்கணும் ?"என்றார் ஆட்டோக்காரர்.

"அது வந்து.."என்று தொடங்கிய நந்தினியை பேச விடாமல் குறுக்கிட்டு..

"அது உங்களுக்கு தேவை இல்லை .வடக்கம்பட்டுக்கு இப்போ பஸ் இருக்கானு மட்டும் சொல்லுங்க !"என்றாள் ராதா.

அங்கிருந்த மற்றொரு ஆட்டோக்காரர்,

"ம்ம்..இருக்கும்மா ...ஆனா அரை மணி நேரம் ஆகும்.'APN  travels னு ஒரு மினி பஸ் வரும் "என்றார்.


சுமார் ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பின் பேருந்து வந்தது..
 இருவரும் ஏறிக்கொண்டனர்.

ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியே தரிசிக்கும் உலகம் மிகவும் அபரிமிதமானது.அதை ஒரு வித வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி..

தார்சாலைகளும் சாலையோர மரங்களும் பின் நோக்கி ஓட பேருந்தின் வேகம் அதிகமானது.ஒட்டு வீடுகளும் ,குடிசை வீடுகளும் நிறைந்த பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தது.அங்கே வேறு எதையோ பார்த்துவிட்டு,

"ராத!!..நம்ம ஊருல ஆடு,மாடு, கோழி,நாய் இதையெல்லாம் தானே வீட்டில் வளர்ப்போம் ..இங்கே எல்லா வீடுகளிலும் என்னென்ன வளர்க்கிறார்கள் பாரேன் !" என்று அருகில் இருந்த ராதாவின் தோளை பிடித்து உலுக்கினாள் நந்தினி..
இவள் என்ன உளருகிறாள் என்று உள்ளூர எண்ணிய படி ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தாள் ராதா.அங்கே சில பன்றிகள் மேய்ந்து கொண்டிருந்தன..ஆங்காங்கே சில வீடுகளின் வாசலில், நாய்க்குட்டியை கட்டி வைப்பது போல் ,பன்றிகளை கட்டி வைத்திருந்தனர்..

"ம்ம்..நாய்க்கு பதிலா பன்றி வளர்க்கிறாங்க "என்றாள் ராதா ,சற்று சிரித்தபடி..

பேருந்து ,வீடுகள் இருந்த பகுதிகளை கடந்து இப்போது எதோ காட்டு வழியில் போய்க்கொண்டிருந்தது .சுற்றிலும் பொட்டல் வெளிகளும்,முட் காடுகளுமே தென்பட்டன..அங்கிருந்த முட்புதர்களை சிலர் கழிப்பறையாக பயன் படுத்திக்கொண்டிருந்தனர்.அந்த பொட்டல் வெளிகளையும் ரியல் எஸ்டேட் காரர்கள் விட்டு வைக்க வில்லை ..ஆங்காங்கே பிளாட்டுகள் பிரிக்கப்பட்டு ரியல் எஸ்டேட் போர்டுகள் நட்டு வைக்கப்பட்டிருந்தன..

"நாம சரியான ரூட்ல தானே வந்துட்டிருக்கோம் ..எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு ..ஏதோ காட்டுக்குள் நுழைவது போல் ஒரு உணர்வு..சசிக்கு போன் பண்ணி பார்த்தேன் .அவள் கைபேசி அனைத்து வைக்கப்பட்டிருக்காம்..."என்றாள் நந்தினி..

ராதவோ பதில் ஏதும் சொல்லாமல் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

ஒரு மணி நேர பேருந்து பயணத்தின் முடிவில்.

"இந்தாம்மா..வடக்கம்பட்டு ...நீ தானே கேட்டா ..அடுத்து வர்றது தான் வடக்கம்பட்டு.."என்றார் நடத்துனர்..

வடக்கம்பட்டில் இறங்கியதும்,

"ரொம்ப பசிக்குது ராதா .பக்கத்துல எதாச்சு ஹோட்டல் இருந்தா சாப்டுட்டு போகலாம்..மணி இப்போவே பத்தாச்சு .."என்றாள் நந்தினி..

ராதா தன் தலையை திருப்பி சுட்டறு முற்றும் ஒரு முறை பார்த்து விட்டு,"இந்த காட்டுல ஹோட்டலுக்கு எங்கே போறது..அதோ பாரு அங்க ஒரு டீக்கடை இருக்கு..ரொம்ப பசிக்குதுன்னா பிரெட்டொ பிஸ்கட்டோ வாங்கிக்கலாம் வா" என்றாள்..
இருவரும் தங்கள் பைகளை தூக்கிக்கொண்டு டீக்கடையை நோக்கி நடந்தனர்..
டீக்கடையில்,

ஒரு பாக்கெட் ப்ரெட்டை வாங்கி, அதில் ஆளுக்கு இரண்டு துண்டுகளை மட்டும் சாப்பிட்டு விட்டு, அந்த இடத்தை விட்டு நகரும் முன்,

"அண்ணே !!தலைவெட்டான்பட்டிக்கு இப்போ பஸ் இருக்கா ?"என்று கடைக்கார பெரியவரிடம்    விசாரித்தால்   ராதா.

அவரோ சிரிக்க தொடங்கி விட்டார்..தன் கைகளை மட்டும் இலை என்பது போல் அசைத்தார்.அனால் கெக்க பெக்க என்று தன் வெற்றிலை கரை படிந்த பற்கள் தெரியும் வண்ணம் சிரித்துக்கொண்டே இருந்தார்..

ராதாவுக்கோ கோபம் வந்தது..

"அப்டி நான் என்ன தப்பா கேட்டுட்டேன்னு சிரிக்குறீங்க?"என்றாள் அவள்.

அதற்கு அந்த பெரியவர், தன்னுள்ளிருந்து பொங்கி வரும் சிரிப்பை கொஞ்சம் அடக்கியவாறு,

"தலைவெட்டான்பட்டிக்கு மனுஷன் போவானா? அந்த ஊருக்கு பஸ் இருக்கான்னு கேட்டியே !அத நெனச்சு சிரிச்சேன்.."என்றார்..

"ஏன் அங்க வாழுறவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா ?" என்று சீற்றத்துடன் பேசிய ராதாவின் தோளில் கை வைத்து அவளை அமைதியாக்க முயற்சித்தவளாய்,

"பஸ் இல்லீங்களா ?அப்போ அந்த ஊருக்கு எப்டி போறது? என்று கடைக்காரரிடம் கேட்டாள் நந்தினி..

"இந்த மண்சாலையை கடந்து நேரா போனா ஒரு வற்றிய குளம் வரும் .அதிலிருந்து இடது  பக்கமா திரும்பினா அங்க காத்தமுத்துன்னு ஒரு வண்டிக்காரர் நிற்பார்..அவரு கிட்ட சொன்னா கொண்டு போய் விடுவாரு.."

"வண்டிக்காரரா ? என்ன வண்டி ?"

"இந்த கிராமத்துல வேறென்ன வண்டி இருக்கும் கண்ணு..மாட்டு வண்டி தான்" என்றார் பெரியவர்..

"மாட்டு வண்டியா  ?" என்று வாயை பிளந்த ராதாவை சோகமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு, கடைக்காரரை நோக்கி
" ஆட்டோ எதுவும் இல்லீங்களா?"என்றாள் நந்தினி..

"ராசையான்னு ஒரு புள்ள ஆட்டோ ஓட்டும் ..அது இன்னைக்கு அரக்கோணம் போயிருக்கு .."என்றார் பெரியவர்.

வேறு வழியில்லாமல் ."வா!வண்டியை பிடிக்கலாம் என்றபடி நடக்க தொடங்கினால் நந்தினி..

ராதாவோ ,"ஏதோ காட்டுக்குள் வந்து மாட்டிகிட்டோமே !!" என்று புலம்பியபடியே நடந்தாள்...

கொஞ்சம் தூரம் நடந்த பிறகு,

"நந்தினி!!இந்த சசி பொண்ணு வண்டில வரணும்னு சொன்னா ..ஆனா மாட்டு வண்டின்னு சொல்லவே இல்லியே டி.."என்றாள் ராதா..

நந்தினி தன் பின்னால் தான் வருவதாக எண்ணி பேசிக்கொண்டே வந்தவள், " ஏண்டி !பேசாமல் வர்ற ?" என்றபடி லேசாக திரும்பி பார்த்தாள்..அங்கே நந்தினி இல்லை..

"நந்தினி!!நந்தினி!!"என்ற ராதாவின் சத்தத்தை கேட்டு..

"இதோ..வர்றேன் ராதா "என்று சில அடி தூரம் பின்னால் இருக்கும் ஒரு முட்செடியின் மறைவில் இருந்து குரல் கொடுத்தாள் நந்தினி..அவள் முகத்தில் ஏதோ ஏமாற்றம் தென்பட்டது..
"ஹே !நந்து..அங்க என்னடி பண்ற ?நீ என் பின்னாடி தான் வர்றன்னு நெனச்சு நான் தனியா பேசிகிட்டே நடக்குறேன்..வா!!"என்று சத்தமாய்ச் சொன்னாள் ராதா..
"வர்..ரே..ரே..ன் " என்றபடி தன் கையில் இருந்த பையோடு ஓட்டமும் நடையுமாய் ஓடி வந்தாள் நந்தினி..
"இந்த ஆளரவம் இல்ல ஊரில் தனியா நடக்க எவ்ளோ பயமா இருக்கு தெரியுமா? நீ அங்க என்ன பண்ணிட்டிருந்த ?" என்று கோபமாய் கேட்டாள் ராதா..

"அது வந்து...சாலையோரமா வளந்திருந்த அந்த செடி தொட்டச்சினுங்கின்னு நெனச்சு தொட்டு தொட்டு பார்த்தேன்...ஆனா அது சிணுங்கவே இல்ல ...அதான் யோசிச்சிட்டிருந்தேன்.." என்று குழந்தை போல் பதில் சொன்னால் நந்தினி..

நந்தினி எப்போதும் இப்படித்தான்..இவளது குழந்தை தனம் ராதாவிற்கு எரிச்சலையே கொடுத்தது..

"அந்த மனுஷன் எப்டி தான் உன்ன வச்சு காலம் தள்ளுராரோ.." என்று லேசாக முணுமுணுத்துக் கொண்டாள்.

ஒரு வழியாக வண்டி நிற்கும் இடத்தை அடைந்தனர்..வைக்கோல் ஏற்றிச் செல்ல பயன் படும் மாட்டு வண்டி அது..

"ஏண்டி !!இதுலயா நாம போகணும் " என்றாள் ராதா..

"வேற எப்டி போறதாம்? நடந்து போ ன்னு சொல்லாம ஏதோ ஒரு வண்டி கொடுத்தார்களே !!இதுவே போதும் ..பேசாமல் வா!!" என்றபடி வண்டியில் ஏறிக்கொண்டாள் நந்தினி..

சற்று கடுகடுத்தபடி ராதாவும் ஏறிக்கொண்டாள்..

பல முறை முயற்சி செய்தும் சசியை தொடர்பு கொள்ள முடியாதது ராதாவிற்கு மேலும் எரிச்சலையே கொடுத்தது...

கொஞ்சம் நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே இருந்தனர்..ஆனால் நந்தினியால் பேசாமல் இருக்க முடியவில்லை..

"ராதா !!சசி நம்மை விட ரெண்டு வயசு பெரியவள் தானே !!அவளுக்கு அவ வீட்ல வரன் தேடுறாங்களா இல்லையா " என்றாள் நந்தினி...

ம்ம்..பார்க்குறாங்களாம்..ஆனா ஜாதக பொருத்தம் இல்லையாம் "
என்றாள் ராதா.

"ஜாதகமா ? அதெல்லாம் பார்ப்பது வீண் வேலை.."

"ஏன்? உனக்கு நம்பிக்கை இல்லையா ?"

"நம்பிக்கை இருக்கு..அதனால தான் சொல்றேன்..!!விதிப்படி ஒரு விஷயம் நடக்கனும்னு இருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது ராதா.."

"விதியை மதியால் வெல்லலாம்.."

"ம்ஹூம் ..நிச்சயமா முடியாது..இதுக்கு ஒரு கதை கூட சொல்வாங்க...முன்னொரு காலத்தில பாச்கராச்சரியார் என்றொரு பெரிய கணித மேதை இருந்தாராம்..அவர் தன் மகள் லீலாவதிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தாராம்..ஆனால் அவள் ஜாதகப்படி அவளை மணக்கும் மனிதன் இறந்து விடுவான்..இதை கணித்த பாஸ்கராச்சரியார் தன் மகளுக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை மிக துல்லியமாக கணித்தார்..சரியாக அவர் கணித்த நேரத்தில் திருமணம்  நடந்தால் அவர் மாப்பிள்ளை உயிருக்கு ஆபத்து கிடையாது..அப்படி துல்லியமாக நேரத்தை கணிப்பதற்காக ,தன் வீட்டில் இரண்டு பானைகளை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்தார்..மேலே இருக்கும் பானையில் ஒரு சிறிய துளை இட்டு அதில் தண்ணீரை நிரப்பி வைத்திருந்தார்..அந்த பானையில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதை வைத்து  நேரத்தை மிக துல்லியமாக கணக்கிட்டு, அவர் குறித்த நேரத்திலேயே தன் மகளின் திருமணத்தை நடத்தி வைத்தார்..பார்த்து பார்த்து எல்லாம் செய்தும், லீலாவதியின் கணவன் திருமணமான கொஞ்சம் நாட்களிலேயே இறந்து போனான்.அந்த கணித மேதைக்கு காரணம் புரியவில்லை .குழப்பத்தோடு தன் இல்லத்தில் நேரம் கணக்கிட தான் வைத்திருந்த பானையை  ஒரு முறை எட்டி பார்த்தார்.உள்ளே முத்து ஓன்று பானையின் துளையை லேசாக அடைத்திருந்தது..தான் கணித்த நேரம் தவறியதற்கான காரணம் அப்போது தான் அவருக்கு புரிந்தது.முத்து எப்படி பானைக்கு சென்றது என்று தன் மகளிடம் வினவினார் .."அப்பா பானையில எதுக்காக தண்ணி வச்சிருந்தீங்க? ஒரு நாள் நீரில் தெரியும் என் முக பிம்பத்தை பார்ப்பதற்காக பானைக்குள் எட்டி பார்த்தேன்..என் கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையின் முத்து தவறி உள்ளே விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன்.." என்றாளாம்..பாஸ்கராச்சரியார் தன் தலையில் அடித்துக்கொண்டார்..விதி முத்து ரூபத்தில் வந்து லீலாவதியின் வாழ்க்கையோடு விளையாடியது..விதி வலியது ராதா ..அதை மதியால் வெல்வது நிச்சயமா முடியாது.."என்று நந்தினி சொல்லி முடித்த போது

"அம்மா..இதுக்கு மேல வண்டி போகாது ..நடந்து தான் போகணும் "என்றார் வண்டிக்காரர்.

"நடந்தா?நடந்து போனா எவ்ளோ நேரம் ஆகும் ?"

"வேகமா நடந்தா அரை மணி நேரத்தில் போயிடலாம்..வழியில தலையெல்லாம் சடை பிடிச்சு ,துணியெல்லாம் கிழிச்சுகிட்டு காத்தயின்னு ஒரு கிழவி இருக்கும்..அது கிட்ட மட்டும் பேச்சு கொடுக்காதீங்க ..அது ஒரு காதல் பைத்தியம் .."என்றார் வண்டிக்காரர்..

இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமுறை பார்த்துக்கொண்டு,
"சரிங்க!ரொம்ப நன்றி !" என்று கொஞ்சம் சில்லறையை அவர் கையில் கொடுத்து விட்டு நடக்க தொடங்கினர்...

நடக்கும் வழியில் ,ஒரு சிறிய கல்லை தன் காலால் எட்டி உதைத்தாள் நந்தினி ..
"என்னடி இது கால் பந்து ஆடிகிட்டே வர்ற ?" என்றாள் ராதா..

சிரித்தபடி," இது ஒரு விளையாட்டு ராதா "என்றாள் நந்தினி..

"விளையாட்டா?"

"ம்ம்,,விளையாட்டு தான்..உனக்கொரு விஷயம் தெரியுமா?கல்யாணத்துக்கு முன்னாடியே அருணை ரொம்ப நேசிச்சேன்.அவரு கிட்ட என் காதலை சொன்ன போது அவரு ஏத்துக்கவே இல்ல...கற்பனையிலேயே இருக்காத..நீ நெனக்கிறது நடக்காது அப்டின்னார்..தன் மனதை துறவு நிலையில் வைத்திருந்தார்..பொதுவாகவே அவருக்கு யார் மீதும் நம்பிக்கை கிடையாது..அதுவும் குறிப்பா பெண்கள் மீது சுத்தமா நம்பிக்கை கிடையாது..அவர் மனதுக்குள் நுழைய ஒரு சிறிய வாய்ப்பாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு பல காலம் தவமாய் தவமிருந்தேன்..

கோயில்களுக்கு போவேன்.."இறைவா என் அருண் மனசுல எனக்காக ஒரு சின்ன இடத்தை மட்டும் வாங்கி கொடேன் " என்று வேண்டலாம்னு நெனைப்பேன்..ஆனா எதுவும் வேண்டாமல் திரும்ப வந்து விடுவேன்.

ஒரு முறை  காளி தேவி கோயில் ஒன்றுக்கு போயிருந்தேன்.பிரார்த்தனை சீட்டில் உங்கள் மனதில் உள்ள ஆசையை  எழுதி அம்பாள் பாதத்தில் வைத்தாள் ,நீங்கள் வேண்டியது நிச்சயம் பலிக்கும் என்றார்கள்.பத்து ரூபாய் செலவு செய்து ஒரு பிரார்த்தனை சீட்டை வாங்கி அதில் என் வேண்டுதலை எழுதலாம் என்று நினைத்தேன்.ஆனால் எழுத மனம் வரவில்லை..'எல்லாம் உனக்கு தெரியும்..நீயே பார்த்துக்கோம்மா.' என்று மட்டும் எழுதி அதை அம்பாள் காலடியில் வைத்தேன்..அப்போதெல்லாம் இப்படித்தான் கல்லை தட்டி விளையாடி என் காதலின் வெற்றியை கணிப்பேன்..

நான் தட்டி விடும் கல் நான் நினைக்கும் கோட்டை தாண்டி விட்டால்,என் அருண் எனக்கு தான்..ஒருவேளை தாண்டாவிட்டால் அந்த கல்லின் மீது எனக்கு பயங்கரமா கோபம் வரும் .வேகமாக நடந்து சென்று அந்த கல்லை அருகில் இருக்கும் ஏதாவது சாக்கடையில் தள்ளி விட்டு விடுவேன்..என் பேச்சை மதிக்காத கல்லுக்கு மரண தண்டனை கொடுத்ததாக நினைத்து உள்ளூர மகிழ்ந்து கொள்வேன்.."என்று நந்தினியை சற்று வியப்போடு பார்த்த படி..,

"அடி பாவி !!கோயிலுக்கு போவாளாம்..வேண்ட மாட்டாளாம்..ஆனால் கல்லை தட்டி காதலை கணிப்பாலாம் ..சரியான பைத்தியம் நீ..!"என்றாள் ராதா..

"ம்ம்...பைத்தியம் தான்...வெறும் பைத்தியம் இல்லை ..அருண் பைத்தியம்..!!உன் காதலுக்கு தூதாக நான் வேணும்னா போகட்டுமா என்று அந்த கடவுளே என்னிடம் கேட்டிருந்தால் கூட 'இல்லை வேண்டாம் 'என்று மறுத்திருப்பேன்..ஏன் தெரியுமா?காதல் ரொம்ப அழகான உணர்வு ராதா..அதை கட்டாயப்படுத்தி வாங்கி விட முடியாது..அது தானா வரணும்..நான் ஒன்றும் கல்லை காதலிக்கவில்லையே .ஒரு பெண்ணின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தியுள்ள ஒரு மனிதனை தானே காதலித்தேன்..அதனால் தான் அவர் மனமும் ஒரு நாள் கனியும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன்.

"சரி!சரி! அப்றோம் எப்டி தான் அவர் ஒத்துகிட்டார்?"

அத ஏன் கேக்குற ராதா..கவிதை கவிதையா எழுதி அவருக்கு அனுப்பிகிட்டிருந்தேன்.."என்று நந்தினி முழுமையாய் சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்ட  ராதா..

"உன் கவிதைகளை படித்து மயங்கிட்டாரா?" என்றாள்.

"இல்ல..பயந்துட்டார்"

"என்னடி சொல்ற??"

"ம்ம்...
உன்ன விரும்புது பொண்ணு 
ப்ளீஸ் ஒத்துக்கோடா கண்ணு 
கடலும் நீளமும் ஒண்ணு
நீ இல்லன்ன நான் மண்ணு 

இந்த மாதிரி கன்னா பின்னான்னு கவிதைகள் எழுதி அவருக்கு அனுப்பிகிட்டேயிருந்தேன்..ஒரு நாள் போன் பண்ணினார்..உன்னை நேரில் பார்க்கணும் அப்டின்னார்..அவர் சொன்ன இடத்துக்கு நானும் போனேன்..அங்கே அவர் காத்திருந்தார்...

நான் போய் பத்து நிமிடங்கள் ஆகியும் அவர் ஒரு வார்த்தை கூட பேசல..

"பேசணும்னு வர சொல்லிட்டு இப்டி பேசாமலே இருந்தா என்ன அர்த்தம்?" அப்டின்னேன் ..

"பேச்சு வரலேன்னு அர்த்தம் "என்றார் அவர்..

எனக்கு கோபம் வந்து விட்டது..சுற்று முற்றும் ஒரு முறை பார்த்துக்கொண்டேன்..சட்டென்று இருக்கையை விட்டு எழுந்து 

"நான் கெளம்புறேன் " என்றேன்..

அவர் என் கையை பற்றிக்கொண்டார் ..அவரை ஒரு முறை பார்த்தேன்..அவர் தன் பார்வையை இருக்கையின் புறமாய் செலுத்தி 'உட்காரு' என்பதை பார்வையிலேயே சொன்னார்..முதல் முதலாய் அவர் கை பிடிக்குள் இருப்பது ஒரு வித பயத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது..

என்னால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை..பேசாமல் தலை குனிந்தபடி உட்கார்ந்து கொண்டேன்..

"நந்தினி!" என்றார் அவர்..

என் நெஞ்சத்து ஏக்கத்தை எல்லாம் கண்களில் தேக்கியபடி அவரை ஒரே ஒரு பார்வை பார்த்தேன்..

அவரோ தன் கண்களால் என் கண்களை பருகியபடி..

"வில் யு மேரி மீ ?"என்றார்..

"என்ன திடீர் ஞானோதயம் ?"என்றேன்..

"கேட்கனும்னு தோனுச்சு "அப்டின்னார்.

அத்துடன் அவர் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை..அவரோ..

"ஆனா ..ஒரே ஒரு கண்டிஷன் "என்றார்..

என்ன கண்டிஷனா இருக்கும் என்று உள்ளூர நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே..

"இனிமே கவிதை எழுதுறேன் அப்டின்குற பேர்ல தமிழை கொலை பண்ண கூடாது சரியா?" என்றார்..
அவர் என் காதலை ஏற்றுக்கொண்டது அளப்பரிய மகிழ்ச்சியை கொடுத்தது.என் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாய் கொட்டியது..கொஞ்சம் சந்தோஷம்ன சிரிக்கலாம் ..அளவுக்க அதிகமான சந்தோஷம்னா அழுகை தானே வரும்..நான் என் உள்ளங்கையில் முகம் புதைத்து தேம்பி தேம்பி அழுதேன்..

அதை அவர் தவறாக புரிந்து கொண்டார்..

"ஏய் !!ப்ளீஸ் !ப்ளீஸ்!அழாத..கவிதை எழுதனும்னா தாராளமா எழுது நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்" என்றார்..

எனக்கோ சிரிப்பு வந்து விட்டது..கன்னம் வழி கண்ணீர் வழிந்தோட..சிரிப்பு ஒரு புறம் தாண்டவமாட...அப்பப்பா அந்த நிமிஷத்தை விவரிக்க வார்த்தையே கிடையாது.."

என்றபடி தன் காலில் தட்டு பட்ட ஒரு சிறிய கல்லை வேகமாக எட்டி உதைத்தாள் நந்தினி..பேச்சு சுவாரஸ்யத்தில்  தன் எதிரில் இருந்த பெரிய கருங்கல்லை அவள் கவனிக்கவில்லை...அவளது வலது கால் அந்த கல்லில் மோதியதில் கட்டை விரலில் பலத்த அடி ஏற்பட்டு இரத்தம் பீறிட்டது..

(தொடரும்...)