Saturday 31 August 2013

நினைவெல்லாம் அருண்..

episode -5
................


சற்று தொலைவில் தலை வெட்டான் பட்டி என்ற போர்டு தெரிந்தது..

அதை பார்த்ததும்,

"ஏய் நந்து!! சக்சஸ் !!ஒரு வழியா சசி ஊருக்கு வந்துட்டோம்.." என்ற ராதாவின் குரலில் ,ஏதோ பெரிதாய் சாதித்து விட்டது போன்றதொரு மகிழ்ச்சி வெளிப்பட்டது..

ஊருக்குள் நுழைந்ததும் அங்கே விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனிடம்..

" மிட்டாய் கார சுப்பண்ணா வீடு எது தம்பி?" என்று ராதா கேட்ட பொது அவன் வேகமாய் ஓடிச்சென்று ஒரு ஓலை குடிசைக்குள் மறைந்து கொண்டான் ..இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்..அப்போது அந்த சிறுவன் ஒளிந்து கொண்ட குடிசையில் இருந்து கிழவி ஒருத்தி வெளியே வந்தாள்..

"என்ன வேண்டும்?" என்று இருவரையும் பார்த்து கேட்டாள்..

விவரத்தை நந்தினி சொன்ன போது..

"ஓ! மிட்டாய் காரர் வீடா??அந்த இறக்கத்துல அஞ்சாவது வீடு..." என்று தன் கையை இடது புறமாய் காட்டினாள்..

இருவரும் இடது புறம் ஒரு முறை திரும்பி பார்த்தனர்..

அங்கே மண் சாலை சரிந்து, ஒரு பள்ளமான பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது..

அந்த கிழவியிடம் நன்றி சொல்லி விட்டு இருவரும் அந்த வழியே நடக்க தொடங்கினர்..அந்த சாலையில் நடப்பது ஏதோ மலைச்சரிவில் நடப்பது போலிருந்தது..

"ராதா!!அந்த பாட்டி பள்ளத்தை தான் இறக்கம்னு சொன்னாங்கன்னு நெனக்கிறேன்.." என்ற நந்தினியிடம் பதில் ஏதும் சொல்லாமல்,

"ஒன்னு ...,ரெண்டு..." என்று எண்ணியபடி நடந்தாள் ராதா..

கொஞ்சம் தூரம் நடந்தவள்,

"ஏய் நந்து!! பாட்டி சொன்ன அஞ்சாவது வீடு வந்துடுச்சு...இந்த வீடா தான் இருக்கும்னு நெனக்கிறேன் .." என்றாள்..
அது ஒரு பழங்கால ஓட்டு வீடு போல் இருந்தது..காம்பவுண்டு சுவரோ ,முன் கேட்டோ இல்லாமல் இருந்த தனி வீடு அது..அந்த வீட்டு வாசலில் நின்று ..

"சசி!!சசி!!" என்று குரல் கொடுத்தாள் ராதா..யாரும் வெளியே வருவதை தெரியவில்லை...
மீண்டும் நந்தினி ஒரு முறை 'சசி!!சசி' என்று அழைத்துப் பார்த்தாள்..

போதா குறைக்கு தன் கைபேசியில் இருந்து சசியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தாள்..அதுவும் பலனளிக்கவில்லை...

சில நிமிட காத்திருப்பிற்கு பின் அடைத்திருந்த கதவு ஒரு வழியாக திறக்கப்பட்டது..

அங்கே ஒரு கிழவி நின்று கொண்டிருந்தாள்..

"யாரு வேணும்..??" என்ற கிழவியிடம்..

"இது மிட்டாய் கார சுப்பண்ணா வீடு தானே.." என்றாள் ராதா.

அதற்கு.."ஆமா!!நீங்க யாரு ?" என்ற கேள்வி வந்தது..

"நாங்க சசியோட பிரெண்ட்ஸ் ..சசிய பாக்குறதுக்காக வந்திருக்கோம் ..அவ இருக்காளா ??" என்றாள் நந்தினி..

இரண்டு பெண்களையும் மேலும் கீழுமாக ஒரு முறை பார்த்துவிட்டு..

" எந்த ஊர்ல இருந்து வர்றீங்க ?" என்றாள் கிழவி..

" எங்களுக்கு கோயம்புத்தூர் பக்கம் .." என்றாள் நந்தினி..

"ஓஹோ!! அவ்ளோ தொலவுல இருந்து தனியாவா வர்றீங்க??கல்யாணம் ஆயிடுச்சா??" என்று தன் கேள்வி கணைகளை ஒன்றன் பின் ஒன்றாக தொடுத்துக் கொண்டே போனாள் கிழவி..

ராதாவிற்கோ கோபம் வந்தது..

" ஏன் பாட்டி..??கல்யாணம் ஆனா தான் வீட்டுக்குள்ள சேர்ப்பீங்களா ??சசி இருக்காளா இல்லையா?"

"ம்க்கும் " என்று தன் தோளை முகவாயில் இடித்தபடி ..

"சசி வெளியில போயிருக்கு ..வர நேரமாகும் " என்றவள் வேறொன்றும் சொல்லாமல் வீட்டுக்குள் போய்விட்டாள்.

" என்னடி ..இந்த பாட்டி வீட்டுக்குள்ள வான்னு ஒரு வார்த்தை கூட சொல்லாம உள்ள போயிடுச்சு.." என்று அப்பாவி போல் கேட்டாள் நந்தினி..

ராதா பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாயிருந்தாள்..

அப்போது மதியம் பன்னிரண்டு மணி ஆகியிருந்தது..

சசி வீட்டு வாசலிலேயே இருவரும் காத்திருந்தனர்..

"பேசாம திரும்ப போயிடுவோமா?" என்ற ராதாவிடம்,

"இவ்ளோ கஷ்டப்பட்டு வந்திருக்கோம் ..அவள பார்த்துட்டு போகலாமே.." என்றாள் நந்தினி..

அவர்கள் இப்படி பேசிக்கொண்டிருந்த போது..அங்கே வெள்ளை வேட்டி சட்டையுடன், கருத்த தடிமனான முறுக்கு மீசை காரர் ஒருவர் வந்தார்..அவருக்கு குறைந்தது ஐம்பது வயதாவது இருக்கும் ..


சசி வீட்டு வாசற்படியில் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்து..

" யாரும்மா நீங்க..?? வாசலில் உட்கார்ந்திருக்கீங்க..."என்று அவர் கேட்ட போது விவரத்தை சொன்னாள் நந்தினி..
"ஓ!" சசி பிரெண்ட்சா??வாங்கம்மா !!வீட்டுக்குள்ள வாங்க ...சசி வெளிய போயிருக்கு..சாயங்காலம் வந்துடும் " என்றார் அவர்.

இருவருமாய் வீட்டுக்குள் நுழைந்தனர்..

அங்கே முதலில் கதவை திறந்த அந்த கிழவியை தவிர..

இரண்டு பெண்களும்,இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர்..

அந்த பெண்களில் ஒருத்திக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும்..அவள் தான் சசியோட அம்மாவாம்..அந்த இன்னொரு பெண்ணுக்கு சுமார் நாற்பது வயது இருக்கலாம்..

அங்கே யாருமே வரவேற்க தயாராயில்லை..

அந்த கருப்பு மனிதர் சசிக்கு மாமாவாம் ..அந்த மனிதரிடம் இருந்த குறைந்த பட்ச கருணை கூட அங்கே எந்த பெண்ணிடமும் இருந்ததை தெரியவில்லை..

" இப்டி உட்காருங்கம்மா.." என்று இரண்டு நாற்காலிகளை இழுத்து போட்டார் மாமா ..

பின்னர்.." அக்கா!!இவுங்க சசிக்கு பிரெண்ட்சாம்..சசிய பார்க்க வந்திருக்காங்க..!" என்றார் மாமா..சசியின் அம்மாவிடம்..

அந்த அம்மா பதில் ஏதும் சொல்லாமல் தோளை குலுக்கி கொண்டாள்..

பின்னர் அந்த மனிதர்,
"இங்கேயே இருங்கம்மா..சசி வந்துடுவா..எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு ..நான் கெளம்பனும்" என்றார்..

சரிங்க !!ஒன்னும் பிரச்சன இல்ல..நாங்க வெயிட் பண்றோம்!!" என்றாள் நந்தினி..

அவர் போன பிறகு நந்தினியும் ராதாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த படி அப்படியே அமர்ந்திருந்தனர்..

அழைப்பில்லாத திருமணத்திற்கு போயி முதல் வரிசையில் அமர்ந்திருப்பது போல் இருந்தது இருவருக்கும்..
அந்த பெண்களோ குழந்தைகளோ இவர்களை ஒரு பொருட்டாக கூட கருதவில்லை..

கிழவி மட்டும்.."ம்ம்..கண்ணாலம் ஆயிடுச்சாம்..ஆனா ஆமுடயான் இல்லாம ஊர் சுத்துராளுங்க..!!கலி முத்தி போச்சு டா சாமி!!" என்று முனு முணுத்துக் கொண்டிருந்தாள் ..

நந்திநிக்கோ கிழவியின் வார்த்தைகள் நெஞ்சில் ஈட்டி போல் தைத்தது..

அருணை ஒரு முறை நினைத்துக் கொண்டாள் ..பசி வேறு வயிற்றைக் கிள்ளியது..

" பசிக்குது ராதா."..என்று மெல்லிய குரலில் சொன்னாள் நந்தினி..

"ஒரு நாள் சாப்பிடலேன்னா..செத்து போயிட மாட்டோம் ..கொஞ்சம் பேசாமலிரு.." என்று கோபமாய் பதிலளித்தாள் ராதா.

சசி வீட்டார் மீதுள்ள கோபத்தை தான் தன் மீது காட்டுகிறாள் தோழி என்று புரிந்து கொண்டதால் அமைதியானாள் நந்தினி..

நேரம் போய்க்கொண்டிருந்தது..அந்த வீட்டுக்குள் நுழைந்து ஐந்து மணி நேரம் ஆகியும் பச்சை தண்ணீர் கூட யாரும் கொடுக்கவில்லை..

இந்நிலையில்.,

" யாரு வந்திருக்கா??வாசலில் ரெண்டு ஜோடி செருப்பு கிடக்குது " என்றபடி வீட்டுக்குள் நுழைந்தால் சசி..

உள்ளே  நந்தினியும் ராதாவும் இருப்பதை பார்த்து சற்று அதிர்ச்சியோடு..

" ஹே !!நீங்க எப்டி வந்தீங்க??" என்றாள்..

" வர்றதுக்கு தானே வழி கேட்டோம்!! வா வான்னு வெற்றிலை பாக்கு வச்சு அழைச்சுட்டு எப்டி வந்தீங்கன்னு கேட்டா என்ன அர்த்தம் ?" என்று சீறினாள் ராதா..


"இல்ல ..சும்மா தான் கேட்டீங்கன்னு நெனச்சேன்..ரொம்ப சந்தோஷமா இருக்கு " என்று பேச தொடங்கினாள் சசி..

மீண்டும் நந்தினியும் ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்..
அவர்களது பார்வை.." அட கடவுளே!!!இதற்கு வராமலே இருந்திருக்கலாம்.." என்பது போல் இருந்தது..

" அம்மா..அக்கா..பாட்டி ..எல்லாரையும் பார்த்தீங்களா ?" என்றாள் சசி..

"ம்ம்...என்றபடி இருவரும் தலையசைத்தனர்

" இதோ ஒரு நிமிஷத்துல வந்துடுறேன்.." என்றபடி வேகமாய் அடுக்களைக்குள் நுழைந்தாள் சசி..

அங்கிருந்த அம்மாவிடம்.." அம்மா!! அவங்களுக்கு காபி கொண்டு வாயேன்.." என்றாள்..

அம்மாவோ கோபமாய் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு..

" ம்..ம்ம்." என்றாள்..

சற்று நேரத்தில் இரண்டு பெரிய டம்ளர்களில் காபியோடு வந்தாள் சசி..

சில பேர் கோபம் வந்தால் வீட்டு பாத்திரங்களை போட்டு உடைப்பார்களாம்..அவர்கள் வீட்டில் எல்லோருமே கோபக்காரர்கள் தான் போலும்..
அவள் காபி கொண்டு வந்த பித்தளை டம்ளர்கள் இரண்டும் சப்பி சதைந்து இருந்தன..

பால் சேர்க்கப்படாத அந்த கருப்பு காபியை மடக் மடக் என குடித்து முடித்தாள் நந்தினி..

ராதாவோ ,"இதை குடிக்கிறதுக்கு குடிக்காமலே இருக்கலாம்.." என்று உள்ளூர எண்ணியபடி நந்தினியை ஒரு முறை பார்த்தாள்..

" சாரி மா!!இங்கே இந்த நேரத்துக்கு பால் கிடைக்காது..அதனால தான் " என்று சற்று இழுத்தபடியே சசி சொன்னதும் ,

" ஏய் !! அதெல்லாம் பரவாயில்லை ..எனக்கு கருப்பு காபி ரொம்ப பிடிக்கும் " என்றபடி ஒரே இழுப்பில் காபியை குடித்து முடித்தாள் ராதா..

ராதாவின் இந்த பதில் நந்தினிக்கு சிரிப்பை கொடுத்தது..இதழோர புன்னகையோடு அவளை ஒரு தரம் பார்த்துக் கொண்டாள்..

" ஆமா..எங்க போயிருந்த ?" என்று நந்தினி கேட்ட போது..சுற்று முற்றும் பார்த்துக் கொண்டாள் சசி..

" வாங்க .." என்று இருவரையும் அழைத்துக் கொண்டு ஒரு சிறு அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டாள்..

ஒரு புறம் துணிக் கூட்டமும் ..மறு புறம் குப்பை கூலமுமாய் கிடந்த அறை அது..அங்கே இருந்த ஒரு மரக்கட்டிலில் இருவரையும் அமர செய்து தானும் அமர்ந்து கொண்டாள்..
ராதாவோ அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்து ,அங்கிருந்த குப்பையை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள்..

சசி மெல்ல பேச தொடங்கினாள்..


" மேல் படிப்புக்கு பாரம் வாங்கனும்னு பொய் சொல்லிட்டு வெளியே போயிருந்தேன்..வீட்ல என்னை எங்க மாமாவுக்கே இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு பேசிட்டிருக்காங்க.."

" யாரு ??குட்டையா கருப்பா முறுக்கு மீசையோட இருப்பாரே ஒரு பெரியவர் அந்த மாமாவுக்கா?"

" ஓ! மாமாவை பார்தீங்களா? அவருக்கு தான் என்னை கல்யாணம் பண்ணி குடுக்க போறாங்களாம்..

எல்லாத்துக்கும் காரணம் எங்க வீட்டு கிழவி தான்..அது என் அம்மா மனசையும் மாத்தி வச்சிருக்கு...எங்க அம்மா கூட இன்னொருத்தங்க இருந்தாங்களே அவங்க தான் என் மாமாவோட மனைவி..ஒரு வகையில் என்னோட பெரியம்மா மகள்..ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவங்க..எங்க வீட்டு கிழவிய பார்த்து பயந்துகிட்டு இருக்காங்க..தன்னுடைய வாழ்க்கையை எங்கே நான் பிடுங்கிக் கொள்வேனோ என்ற பயத்தால் தன் குழந்தைகளை கூட என்னிடம் நெருங்க விடுவதில்லை..என் மாமா ஒரு முரட்டு ஆசாமி ..இவங்க மத்தியில நான் படுற பாடு இருக்கே  ."..என்று சொல்ல தொடங்கியவளின் கண்கள் லேசாக பனித்தது.

இருவரும் அவள் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்..நேரம் நன்கு இருட்டி விட்டதால் எப்படியும் இங்கே தானே தங்க போகிறோம் என்ற அசட்டு தைரியம் அவர்களை பதற்றப் படாமல் அமர வைத்திருந்தது..

" உங்க அப்பா..."என்று இழுத்தாள் ராதா..

"அவரு இவங்க எல்லாருக்கும் மேல..எனக்காக ஒரு குடிகார மாப்பிள்ளையை பார்த்து கிட்டு வந்தார்..இவங்களையே நம்பிகிட்டு இருந்தா என் வாழ்க்கையையே சின்ன பின்னம் ஆக்கிடுவாங்க..அதனால தான் என் வாழ்க்கையை நானே தீர்மாநிக்கலாம்னு முடிவு பண்ணினேன்..இன்னக்கி அதுக்காக தான் வெளியே போயிருந்தேன்..எனக்கும் என் கூட வேலை பார்க்குற விசுவுக்கும் அடுத்த மாசம் கல்யாணம்..ரெஜிஸ்டர் ஆபீஸ்ல ..
உங்களை எல்லாம் அழைக்கணும்னு ஆசை தான் ..ஆனா நான் எப்படி இங்கிருந்து தப்பிக்க போறேன்னே எனக்கு தெரியல "என்று சசி சொன்ன போது அவளை பார்க்க பரிதாபமாக இருந்தது..அதற்குள் அறை கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டது..

வேகமாக கதவை திறந்தாள் சசி..அங்கே கிழவி நின்று கொண்டிருந்தாள் ..சசியிடம் ஏதோ முனு முனுத்தாள்..
பின்னர்..

" ஏய்!! பொண்ணுங்களா ...இன்னும் கேளம்பலியா??இப்ப போனா கடைசி பஸ்ஸ புடுச்சிடலாம் .." என்றாள்..

நந்தினிக்கும் ராதாவிற்கும் தூக்கி வாரி போட்டது..
சசியோ..தன் பார்வையால் இருவரிடமும் மன்னிப்பு வேண்டினாள்..தன் தோழியின் நிலையை புரிந்து கொண்ட இருவரும் சட்டென்று எழுந்து கொண்டனர்...

"ஒன்னும் இல்ல சசி நாங்க போயிடுவோம்.." என்றாள் ராதா..நந்தினியும் தலையாட்டினாள்..

"ஒத்தையடி பாதை முடியுற வரைக்கும் நான் துணைக்கு வர்றேன் " என்றபடி இவர்கள் பதிலுக்கு காத்திருக்காமல்..

"அம்மா!!அந்த டார்ச் லைட்ட குடு .." என்றாள் சசி..

மூவருமாய் வீட்டை விட்டு கிளம்பினர்..

" எத்தனை முறை அருண் சொன்னார்...போகாத நந்து போகதேன்னு..நான் கேட்டேனா...நம் வீட்டிற்கு எதிராளி வந்தால் கூட வரவேற்பில் குறை வைக்க கூடாது என்று அம்மா சொல்வாளே!!!இந்த வீட்டில் உள்ள மனிதர்களுக்கு விருந்தோம்பல் என்றாள் என்னவென்று தெரியவே தெரியாது போலும்" என்று உள்ளூர என்னென்னவோ எண்ணியபடி நடந்து கொண்டிருந்தாள் நந்தினி..

ஒத்தையடி பாதையில் சசி முன்னே செல்ல இருவரும் பின் தொடர்ந்தனர்..

ராதாவின் பின்னால் வந்த நந்திநிக்கோ கால் வலிக்க தொடங்கியது..

காலையில் கை குட்டையை வைத்து கட்டிய கட்டு லேசாக அவிழ்ந்திருன்தது..சரியாக கட்டலாம் என்று குனிந்து அந்த கைக்குட்டையை அவிழ்த்துவிட்டு மீண்டும் கட்டிக் கொண்டிருந்தாள்..

இவள் பின்னால் தான் வருவதாக எண்ணி சசியும் ராதாவும் நடந்து கொண்டேயிருந்தனர்..

நிசப்தமான இரவு அது ..பௌர்ணமி முடிந்து சில நாட்கள் ஆகியிருந்ததால் தேய்ந்து வரும் நிலவு மிக மெல்லிய வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது..

குனிந்திருந்த நந்தினியின் தோளில் யாரோ கை வைத்தது போல் இருந்தது..சட்டென்று திரும்பினாள் நந்தினி..திரும்பியவள் அதிர்ச்சியுற்றாள்..

"ஆ..ஆ.. " என்று அலறினாள்..


இந்த அலறல் சத்தம் அருணை பொருத்தவரை பழக்கப்பட்ட விஷயம் தான்..முதலில் ஓரிரு முறை அவனும் ஏமாந்திருக்கிறான்..என்னவோ ஏதோ என்று பதட்ற்றப்பட்டு ஓடி வந்து பார்த்தால், அவள் தன் கையில் ஏதாவது பழைய பத்திரிகையை வைத்துக்கொண்டு சுவர் ஓரமாய் நின்று,அண்ணார்ந்து பார்த்த படி  "சூ ..சூ.." என்று சொல்லி கொண்டிருப்பாள்..

"என்னாச்சு ? எதுக்கு கத்தின??" என்பான் அவன்..

அவள் தன் தலையை குனித்து வலது கையை உயர்த்தி , சுவரில் ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லியை காட்டுவாள்..

"ஐயோ !!சாதாரண பல்லி தானே !! அதுக்கு ஏன் பாம்பை பார்த்தது மாதிரி கத்துற? " என்று சலித்துக் கொள்வான் அவன்..

இப்படி ஓரிரு முறை ஏமாந்திருக்கிறான்..பின்னர் அதுவே பழகிப் போனது..சின்னஞ்சிறு பூச்சி முதல் சகலத்துக்கும் அவள் பயப்படுவாள் என்பது அருணுக்கு நன்றாகவே தெரியும்..

இரவில் உறக்கத்தில் 'ஆ '..என்ற அலறல் சத்தத்தோடு எழுந்து அமர்ந்து கொள்வாள் அவள்..

" என்னாச்சு?" என்று அருண் கேட்டால்,

"அது.....அது.....வந்து....ஒரு...ஒரு..பெரிய கருப்பு உருவம் "

"ம்..." என்று மூச்சிரைக்க சொல்லி விட்டு..

அவனை பார்த்து ," ...நான்....பயந்துட்டேன்..."என்பாள்..அவள் பார்வையில் மானின் மருட்சி தெரியும்,..

தன் கையை தலையில் வைத்தபடி " உனக்கு நாய்க்கும் பயம் பேய்க்கும் பயம்..!!கனவு தானே !!பேசாம தூங்கு நந்து..நாளைக்கு வேற எனக்கு மீட்டிங் இருக்கு " என்று அவளை சற்று கடிந்து கொள்வான் அவன்..


அவள் அதே மருட்சியோடு படுத்துக்கொள்வாள்..அவளுக்கு உறக்கம் வந்து விடும்.. ஆனால் அதற்கு மேல் அவனால் உறங்க முடியாது..லேசாக கண் அயர்வான்..மீண்டும் விழித்துக்கொள்வான்..அவளை ஒரு முறை பார்ப்பான்..பயப்படாமல் உறங்குகிறாளா இல்லையா என்று அவ்வப்போது எழுந்து உறுதி படுத்திக் கொள்வான்..

அவன் ஆறடி உயர ஆண்மைக்குள் ,ஒரு மென்மையான பெண்மை உண்டு..அது அவ்வப்போது தாய்மையாய் வெளிப்படுவதும் உண்டு...தான் என்னவோ அம்மா போலவும், அவள் என்னவோ தான் பெற்ற குழந்தை போலவும் பாவித்து அவள் புறமாய் சரிந்து படுத்து , அவளை தன் அரவணைப்பில் வைத்துக்கொண்ட பின் தான் ,அவனால் நிம்மதியாக உறங்க முடியும்..

இப்படி தன் மனைவி எல்லாவற்றிற்கும் அஞ்சுவாள் என்று தெளிவாக உணர்ந்ததால் தானோ என்னவோ , அவள் தலை வெட்டான் பட்டிக்கு போகிறேன் என்றபோது அவனால் முழு மனதோடு ஒப்புக்கொள்ள முடியவில்லை...

கனவில் கருப்பு உருவம் பார்த்து அலறியவள் இன்று நிஜமாகவே காரிருளில் ஒரு கோர உருவம் தன் தோளில் கை வைத்தால் ,அலறாமல் என்ன செய்வாள் ..

"ஆ"...என்று மீண்டும் அலறினாள் நந்தினி..

(தொடரும்..)