Sunday, 1 March 2015

என் காதல் சொல்ல தேவையில்லை .-5


Episode -5
----------------



"ஏண்டி பைத்தியமா உனக்கு??வயசு பொண்ணு யாராச்சு மொட்டை அடிச்சுக்குவாளா ??" விஜி அக்கா ராதிகாவை அடிக்க தொடங்கினாள்..

ஆம்..பைத்தியம் தான்..அவனுக்கு பிடிக்காத உருவத்தின் நிழல் என்று, தன் நிழலை தானே கல் எறிந்த பைத்தியக்காரி ..என்று உள்ளூர எண்ணிய ராதிகா ,

"இப்போ என்ன ஆயிடுச்சுன்னு அடிக்குற??மொட்டை அடிச்சா முடி வளரும்னு நீ தானே சொன்ன??" என்றாள்..

பின்னர்,அவளை அடிப்பதை நிறுத்தி விட்டு, தன் தலையில் தானே அடித்துக் கொண்டாள் விஜி..

..........................
"ஓ...அப்றோம் என்னாச்சு???" ஆர்வத்தோடு டாக்டர் கேட்க,

"ஐயோ அதுக்கப்புறம் தான் பெரிய சிக்கலே ஆரம்பிச்சுது டாக்டர்.."என்று மீண்டும் தொடர்ந்தாள் ராதிகா..

.............................
ஒரு பெரிய பங்களாவிற்கு ராதிகாவை அழைத்து சென்றாள் விஜி...அங்கே தாடியுடன் ஒரு முதியவர் வரவேற்றார்..ஒரு இஸ்லாமியர் என்பது புரிந்தது..

"தம்பி சொன்ன பொண்ணு இது தானா??"

"ஆமா பாய்"

"பயப்படாதீங்க சரி பண்ணிடலாம்.."

"என்க்கு ஒன்னும் இல்லக்கா ...எதுக்கு என்ன இங்க கூட்டிட்டு வந்திருக்க ??" என்று ராதிகா கேட்பதை  பொருட்படுத்தாமல்,


"நல்ல பொண்ணு பாய் ..இப்போ தான் கொஞ்ச நாளா இப்டி இருக்கா.." என்றாள் விஜி ,அந்த முதியவரிடம்..

அந்த அறையில் சாம்பிராணி புகை காட்டப்பட்டது..பின்னர் அந்த முதியவர் ,ராதிகாவை ஒரு  நாற்காலியில் அமர வைத்து, தன் கட்டைவிரலை அவளது நெற்றியில்  வைத்து அழுத்தி ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தார்..பின்னர் விஜியை பார்த்து,

நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு.உங்க பொண்ணு,.ராத்திரி வேளையில தனியா வரும்போது ஏதோ பிடிக்ககூடாதது பிடிச்சிடுச்சு..இத சரி செய்ய முடியும் என்ற படி கொஞ்சம் எலுமிச்சம் பழங்களை கொடுத்தார்..ஒரு காகிதத்தில் ஏதேதோ மந்திரங்கள் எழுதி அதையும் கொடுத்தார்..

"விடியற்காலை நாலு மணிக்கு பச்ச தண்ணில இந்த காகிதத்தில் ஒண்ணை போட்டு, அதில் இருக்கும் எழுத்துக்கள் நீரில் கரைந்ததும் உங்க பொண்ண அதுல குளிக்க வைக்கணும்..தலையில எலுமிச்சம் பழத்த தேய்க்கணும்..குளிச்சு முடிச்சதும் சாம்பிராணி புகை காட்டணும்..இப்டியே தொடர்ந்து 11 நாள் செய்யணும்..பிடிச்சிருக்குற பேய் இறைவன் அருளால் தானாவே விலகிடும்.." என்றதோடு நிறுத்தாமல்...அதற்கு கட்டணமாக ஆறாயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டார் அந்த முதியவர்..

-----------------------------------
"கடந்த ஒரு வாரமா என்ன இப்டி சித்ரவதை பண்றா எங்க அக்கா..இப்டியே விட்டா நான் நெஜமாவே பைத்தியம் ஆயிடுவேனொன்னு பயமா இருக்கு டாக்டர்.."விவரித்து முடித்தாள் ராதிகா..

ஏம்மா.பொண்ணு பாக்குறது அப்டிங்குறது சாதாரண விஷயம்..அதுக்கு போயி யாராவது மொட்டை அடிச்சுக்குவாங்களா ???இதெல்லாம் பேசியே புரிய வச்சிருக்கலாமே .."

"ம்ம்..புரிய வைக்க முடியாது டாக்டர்..நான் லவ் பண்றேன்..என்னை என் கண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க அப்டின்னு என்னால கேட்க முடியாது..ஏன்னா..கண்ணனுக்கு தான் என்ன பிடிக்கலியே..என்னோடயது ஒரு தலை காதல்  தான்... ஆனா அதுவும்  காதல் தானே..என்னால இன்னொரு ஆணின் பார்வையை கூட ஏற்க முடியாது டாக்டர்..

"வெல்..ஒரு பொண்ணு நடந்து போனா அவளை பசங்க திரும்பி பார்க்குறதும்..ஒரு ஆணை பெண் திரும்பி பார்ப்பதும் இயல்பு..எந்த ஆணும் என்னை பார்க்கவே கூடாதுன்னு சொல்ற அளவுக்கு மனச குழப்பி வச்சிருக்கீங்க ...ரெண்டு கை தட்டினா தான் சத்தம் வரும்..காதலும் அப்டி தான்...ஒரு தலை காதலுக்கெல்லாம் இவ்ளோ feel பண்ணினா ஆபத்து உனக்கு தான்..."இன்னும் என்னென்னவோ அறிவுரை சொன்னார் டாக்டர்..

காதலுக்கு கண் இருக்கோ இல்லையோ ...நிச்சயம் காதுகள் கிடையாது..யாரவது அறிவுரை சொல்ல வந்தால் ,உண்மையான காதல் மட்டும் காதுகளை கழற்றி ஒரு ஓரமாய் வைத்து விட்டு தான் அறிவுரை கேட்கும்....தொட்ட பின் பாம்பென்றும் சுட்ட பின் நெருப்பென்றும் ,பட்ட பின் தெரிந்து கொண்டேன் என்று கண்ணதாசன் சொன்னது காதலுக்கும் பொருந்தும்..சோ, பட்டு திருந்துவது காதலுக்கு அழகு...
காதல் ஒரு வேளை காரண பெயராக கூட இருக்கலாம்..காது+இல் என்பது தமிழ் இலக்கணப்படி ஒரு வேளை 'இ'கரம் 'அ'கரமாகி த்+உ வில் ஈறு கெட்டு...ஐயோ இது என்ன தமிழ் கொலை ...தமிழறிஞர்கள் படித்தால் எனக்கு தூக்கு தண்டனை கிடைக்குமோ???

எது எப்படியோ டாக்டர் சொன்ன அறிவுரை எதுவும் ராதிகாவை அடையவில்லை..

"இங்க பாரும்மா..இப்போதைய சூழ்நிலையில் நீங்க உங்க அக்காவ விட்டு தனியா இருக்குறது தான் நல்லது..ஆபீஸ்ல ட்ரெய்னிங் ஓவர் ..சோ போஸ்டிங் எங்க?"

"ஹைதராபாத் " டாக்டர்..

"ம்ம்ம்..தேட் இஸ் பெட்டெர் ....இந்த விசிடிங் கார்ட வச்சுக்கோங்க ..ஹைதராபாத் குக்கட்பள்ளில என் அண்ணா ஒருத்தர் ஸ்கூல் நடத்துறார்..அங்கே பேயிங் கெஸ்டா நீங்க வேணும்னா தங்கிக்கோங்க..நான் அவரு கிட்ட சொல்லி வக்கிறேன்..எதாச்சு ஹெல்ப் வேணும்னா என்னை காண்டாக்ட் பண்ணுங்க.."

"தேங்க்ஸ் "டாக்டர்..

.........................................................

தொடரும்..

Sunday, 21 December 2014

என் காதல் சொல்ல தேவையில்லை-4





யாரோ கேட்டை திறப்பது போல் இருந்தது..நிச்சயம் தேவியா தான் இருக்கும் ..மனதுக்குள் நினைத்துக் கொண்டான் கார்த்திக்..

"ஆம் அவள் தான்..ஆனால் இப்படி பரீட்சையில் தோற்று விட்டு ,ஒரு தோத்தான்கொல்லியா அவள் முகத்தில் விழிக்க வேண்டுமா.பரிகசிக்க மாட்டாள் ..ஆனாலும்..."
ஏதேதோ நினைத்து குழம்பி, மொட்டை மாடி மதில் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்து கொண்டான்..

"கழுத..என் கனவு எல்லாத்தையும் கலச்சிடுச்சு..அப்பன் குடிகாரன்..ஓடி போயிட்டான்..இவனாச்சு படிச்சு பெரிய மனுஷன் ஆவான்னு நம்பினேன்.ஆனா கண்ட கண்ட அனாத கழுதைகள் கூட சேர்ந்து சுத்தி இப்போ பிளஸ் டூ பரீட்சையில் கோட்டை விட்டுட்டு  நிக்குது...எல்லாம் போச்சு..."சாந்தி புலம்பி தள்ளினாள் ..அந்த புலம்பல் அதிகமானது என்னவோ தேவியின் வருகையால் தான்..

தேவி எதையும் கண்டு கொள்ள வில்லை ..கார்த்தி இப்போது மாடியில் தான் இருப்பான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்..பேசாமல் படி ஏறினாள்..

அங்கே தனிமையில் இருந்தவனிடம் ,
"கார்த்தி.." என்பதற்குள் அவனோ கண்ணீர் சிந்த தொடங்கி விட்டான்..

அவளிடம் "நீ போ..என் கிட்ட வராதே போ .." என்று முகத்தை திருப்பிக் கொண்டான்..
அவளாவது செல்வதாவது..அங்கேயே நின்றாள்..



ஆறாவது படிக்கும் போது அம்மாவும் அப்பாவும் ஒரே விபத்தில் இறந்து போனார்கள்..."எனக்கு இனி  யாருமே இல்ல .நான் அநாதை ஆயிட்டேன்..என்னை ஏன் மா தனியா விட்டுட்டு போன ??."என்று கதறி கதறி அழுத போது அருகில் வந்து,

"அப்டி சொல்லாத தேவி..உனக்கு நான் இருக்கேன் " என்று அழுதபடியே ஆறுதல் சொன்னான் கார்த்திக்..

"எனக்கு நீ ஒன்னும் தேவையில்லை ..எனக்கு என் அம்மா அப்பா தான் வேணும் " என்று அருகில் நின்றவனை தள்ளியதில் அவன் கீழே விழுந்தான்.அப்போது அவனும் சிறுவன் தான்..ஆனால் அவளது வலியை புரிந்து கொண்டதால் மீண்டும் அவள் அருகே வந்து, அவள் தோளில் கை வைத்து ஆறுதலாய் நின்றான்.. 

அந்த கார்த்திக்கை ,இப்படி ஒரு வலி நிறைந்த தருணத்தில் தனியே விட்டு விடுவாளா தேவி..

அவன் போ என்று சொல்லியும் ,அதை பொருட்படுத்தாமல் அவன் அருகே சென்றாள்..

"என் கிட்ட வராத..எல்லாம் போச்சு ..நான் சாக போறேன்..

"லூசா டா நீ??எக்சாம்ல பெயில் ஆனா வாழ்க்கையில பெயில் ஆனதா அர்த்தம் கிடையாது..ஒரு சப்ஜெக்ட் தானே ..எழுதி எடுத்துடலாம்..அதுக்கு போயி கன்னா பின்னான்னு உளறாத..உனக்கு தெரியுமா சச்சின் டெண்டுல்கர், பில் கேட்ஸ் மாதிரி வாழ்க்கையில சாதிச்ச நெறைய பேர் பத்தாவது பெயில் ஆனவங்க தான்...ஆனா நீ தான் பத்தாவதுல ஸ்கூல் பர்ஸ்ட் ஆச்சே...அப்றோம் ஏன் கவலை படுற??நீ அவங்கள விட பெரிய ஆள் ஆவ..ஒரு பெரிய பங்களா..பெரிய கார்.....உன் கார்ல எனக்கும் இடம் கொடுப்ப இல்ல??"
அவனை பார்த்து குழந்தை போல் கேட்டாள் தேவி..

உடை பட்ட அணை விட்டு பாயும் வெள்ளம் போல் அவன் கண்களில்  இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வழிய, மெல்ல அவள் புறம் திரும்பி லேசாக புன்னகைத்தான்..

"ஐயோ..ஆம்பள பசங்க அழக் கூடாது டா.." என்ற படி அவன் கண்களில் வழிந்த கண்ணீர் துடைத்தாள் தேவி..

சரி இனிமே அழல..ஆனா தயவு செய்து என் அம்மா மாதிரி லெக்சர் குடுக்காத. தாங்க முடில ..."என்று சிரித்தான்..

"எரும ..பெயில் ஆனாலும் உன் நக்கல் மட்டும் குறையல பாரு..நான் கெளம்புறேன் " என்று கோபமாக  கிளம்பினாள் தேவி..

"ஹே தேவி..கோச்சுகிட்டியா??சரி சரி கோச்சுக்கோ" என்ற படி  அவள் போகும் திசையில் பார்வையை வீசினான்..அம்மா பின்னால் ஓடும் குழந்தை போல் அவள் பின்னால்  அவன் மனம் ஓடுவதை, முதல் முறையாய் உணர்ந்தான்..

தொடரும்...

Saturday, 6 December 2014

என் காதல் சொல்ல தேவையில்லை-3


"இப்போ அது கூட பிரச்சின இல்ல டாக்டர்..வீட்ல.." என்று பேச தொடங்கினாள் ராதிகா..

இரண்டு வாரங்களுக்கு முன் 

"இன்னுமா தூங்குற ..ஆபீஸ் போக வேண்டாமா??ஏதோ ட்ரெய்னிங் கடைசி நாள் ..பரீட்சை இருக்குன்னு வேற சொன்ன..கதவை திற ராதிகா..."விஜி அக்கா கதவை ஓயாமல் தட்டிக் கொண்டிருந்தாள்..

கட்டிலில் கண் விழித்துக் கிடந்தபடி ,கூரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அக்காவின் குரல் கேட்காமல் இல்லை..

எழுந்து போக மனமற்றவளாய் ,தன் அறையை சுற்றி நோட்டம் விட்டாள் ராதிகா..

படிக்க முடியாமல் கிழித்து போட்ட  புத்தகங்கள் ஒரு புறம் குப்பையாய் கிடந்தது, மறுபுறம் மனமோ,

"யார் அந்த பெண் ??அவள் சொன்னது உண்மையாக இருக்குமோ??சீ சீ..இருக்காது..ஒருவேளை உண்மையாக இருந்தால்..???ஐயோ...நினைத்து பார்க்கவே கொடுமையாக இருந்தது..உள்ளுக்குள் கைவிட்டு, இதயத்தை மட்டும் உருவி எடுத்து, அதை ஓர் அரிவாள் முனையில் வைத்து சின்ன சின்ன துண்டுகளாய் நறுக்கி..அப்பப்பா அப்படியொரு வலி...

"கதவை திற டி..மணி எட்டு ஆக போகுது..."விஜி மீண்டும் குரல் கொடுத்தாள்..

வேறு வழியில்லாமல் கதவை திறந்தவள்,

"நான் எங்கயும் போகல .."என்றாள்..

"லூசா நீ..இன்னைக்கு தான் கடைசி நாள் ட்ரெய்னிங் ..பரீட்சை இருக்கு அது இதுன்னு சொன்ன....நீயும் உன்னோட எக்ஸாம் பீவரும்.....போ போயி கெளம்புற வழிய பாரு .." என்று அங்கிருந்து நகர்ந்தாள்  விஜி...

அக்கா..பெரியம்மா மகள்...நல்லவள் தான்..ஆனால் மனதின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தி அவளுக்கு இல்லை..வேறு வழியில்லாமல் அலுவலகம் கிளம்பி ,ஏனோ தானோ என்று பரீட்சை எழுதி வருத்தத்தோடு வீடு திரும்பிய போது அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது ராதிகாவிற்கு..

"இந்த ஞாயிற்று கிழமை பொண்ணு பார்க்க வர்றாங்க டி."

"யார ?"

"வேற யாரு ??உன்னை தான்...மாமாவே எல்லா ஏற்பாடையும் பண்ணிட்டாரு..உனக்கு வேற யாரு இருக்கா??"அக்கா சொன்ன போது தூக்கி வாரி போட்டது..

ஒன்றும் சொல்லாமல் தன் அறைக்குள் நுழைந்தாள்..நேற்று நடந்த சம்பவத்தின் வலி ஒரு புறம்,பெண் பார்க்கும் படலம் மறு புறம்..இறைவா இது என்ன சோதனை??தப்பிக்க வழி தான் என்ன..??

இரவு முழுவதும் யோசித்தாள்."கல்யாணமும் வேண்டாம்..ஒரு மண்ணும் வேண்டாம்..என்னை யாரும் பார்க்க வரவும்  வேண்டாம்..அது இது ..." என்று வீட்டில் எல்லோரிடமும் சண்டை போடும் மனநிலையில் தான் இல்லை என்பதை உணர்ந்தாள்...பின்னர் அந்த முடிவினை எடுத்தாள்..

"நாம அழகா தான் இருக்கோமா??" சிறிய சந்தேகம் உள்ளுக்குள்..

பீரோவில் இருந்த பெரிய கண்ணாடிக்கு முன்னால் போய் நின்று கொண்டாள்..

பின்னியிருந்த தன் நீளமான கூந்தலை அவிழ்த்து விட்டாள் ..சுருள் சுருளாய் கொஞ்சம் முடிக் கற்றைகள் அவள் கண்களில் விழ,தன் வலது கையால் அதனை அகற்றினாள்..தன் முகத்தை உற்று பார்த்தாள்..

சிலர் கண்கள் பேசும் என்பார்களே..அவள் கண்கள் அந்த ரகத்தை சேர்ந்தவை..வண்டை உண்ணும் பூக்கள் என்று கண்களை வர்ணித்த கவிஞன், அந்த வரியை எழுதுவதற்கு முன் ஒருவேளை அவளை பார்த்திருக்க கூடும்...

மாநிறம் தான்..அதனால் என்ன??அழகி கிளியோபாட்ரா கருப்பு தான்..அவளை விட எனக்கு நிறம் அதிகம்..நானும் அழகி தான் ..பேரழகி..
தனக்குள் சொல்லி கொண்டாள்.

தன் நீண்ட கூந்தலை ஒரு முறை முன்னும் பின்னும் திரும்பி ரசித்து பார்த்தாள்..

அட..எனக்கென்ன குறை..நல்லா தானே இருக்கேன்..என்னை ஏன் பிடிக்கல பிடிக்கலங்குறான்..மடையன்...ஒருவேளை அந்த பெண் சொன்னது உண்மையாக இருக்குமோ??இருந்து விட்டு தான் போகட்டுமே...ஆனால் தற்போதைய என் நிலைக்கு இந்த முடிவு சரி தான்.." என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டாள்..

அன்று விடியற்காலையில் யாருக்கும் தெரியாமல் வெளியே சென்றவள்..
சில மணி நேரத்தில் திரும்பி வந்த போது,

"ஐயோ என்ன கோலம் டி இது..என்ன பண்ணிட்டு வந்திருக்க??" அதிர்ச்சியுற்றாள் விஜி..

தொடரும் ..

Saturday, 22 November 2014

என் காதல் சொல்ல தேவையில்லை -2

Episode 2
----------

கடற்கரை ஓரமாய் நடந்து கொண்டிருந்தான் கார்த்திக் ..பொங்கி வரும் அலையின் எழிலை, கடல் பெண் மல்லாந்து கிடந்தது  தூக்கி தூக்கி எறியும் அவள் சுருண்ட குழலை,அதில் சூடியிருக்கும் நுரை பூவின் அழகை ரசிக்க மனமில்லாமல், 

"அட நாம எப்டி இங்க வந்தோம்..இது எந்த ஊர்?" என்ற குழப்பத்தோடு சுற்று முற்றும் பார்த்தான்..

கொஞ்சம் தூரத்தில் தென்னந்தோப்பு தெரிந்தது..அந்த தோப்பை கடந்து சற்று தூரம் சென்ற போது மண் சாலை ஒன்று தென்பட்டது...ஆங்காங்கே வண்டிச்சக்கரங்கள் புதையுண்ட தடையமும் , குதிரையின் குளம்படி தடையமும்  தெரிந்தது...

இன்னும் சற்று தொலைவில், கையில் வேலும், தலையில் தொப்பியும், வயிற்றில் தொப்பையுமாய் ஒருவர் நின்று கொண்டிருக்க, அங்கிருந்த கருங்கல்லில் ,அவரிடம் பேசி சிரித்த படியே இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர்..

வியப்பில் ஆழ்ந்தான் கார்த்திக்..

"என்ன இது??இந்தாளுங்க சரித்திர கதைகளில் வரும் காவலாளிகள் மாதிரி ட்ரெஸ் போட்டிருக்காங்க..ஒருவேளை நாடக ஒத்திகை ஏதாவது??மீண்டும் சுற்று முற்றும் பார்த்தான்..நாகரிகத்தின் சுவடே தெரியவில்லை..இருபத்தொன்றாம் நூற்றாண்டு தானா??மாட்டு வண்டி, குதிரை வண்டி, கையில் வேலுடன் ஆண்கள் , கண்ணுக்கு புலப்படாத பெண்கள்,கடல், பனை, தென்னை ....எந்த ஊர் இது ??எங்க இருக்கேன் இப்போ??பேசாமல் கேட்டு விடலாம்..." என்றெண்ணிய படியே நேராக நடந்தான்..

நின்று கொண்டிருந்த தொப்பை ஆசாமியிடம் ,

"excuse me  சார் ..இது எந்த ஊரு?" என்று கேட்க,

அவரும் மற்ற இருவரும் கார்த்திக்கை மேலும் கீழும் ஒரு முறை பார்த்தனர்..

அழகிய உருவம்..நல்ல உயரம்..ஒருவேளை ஆறடிக்கு ஓரிரு இஞ்ச்கள் குறைவாக இருக்கலாம்..வசீகரமான கண்கள் ,கண்ணில் கண்ணாடி, நீல நிற ஜீன்ஸ் ,ஊதா நிற முழுக்கை டி ஷர்ட் ..அதன் காலர் மட்டும் வெள்ளை..கார்த்திக்கின் உருவமும் உடையும் அந்த மனிதர்களுக்கு விநோதமாய் தெரிந்தது..

"தம்பி ஏது நாடா??சோழ நாடாணோ??" என்று மலையாளம் கலந்த தமிழில் கேட்க..

அவன் ஒன்றும்  புரியாமல் தலையசைத்து விட்டு...

"இது எந்த ஊரு ?" என்றான்..

இது கோலோச்சல்..."என்று ஒருவன் சொல்ல..

"உங்க நாட்ல இப்டி தான் வஸ்திரம் இடுவியளா ?" என்று இன்னொருவன் கேட்டு சிரித்தான்..

இவன் மீண்டும் தலையசைத்து விட்டு ...

"கோலோச்சலா ??அப்டின்னா.."

"அப்டின்னா..எங்கள் நாட்டை கைப்பற்ற இவ்விடம் வந்த வெள்ளையனை ஓட ஓட விரட்டி எங்கள் மன்னன் மார்த்தாண்டன் கோலோச்சிய இடம் என்பதால் இந்த இடத்துக்கு கோலோச்சல் என்று பெயர்.."

"ஓ!!அப்ப இங்க பெரிய போர் நடந்துச்சா ?" என்று கார்த்திக் கேட்க ,

"இல்ல பிள்ளே !!வெள்ளையன் தன் கடற்படையோடு வந்து கொண்டிருந்தான்..நாங்களோ நிறைய பனை மரங்களை வெட்டி ,எங்கள் வண்டிகளை கடற்கரையோரம் வரிசையாய் நிற்க வைத்து ,ஒவ்வொரு வண்டியின் மீதும் ஒவ்வொரு பனையை சரித்து வைத்து ,அதற்கு கருத்த சாயமும் பூசினோம்..தூரத்தில் வந்த போதே தன் தொலைநோக்கி கொண்டு கடற்கரையை பார்த்த வெள்ளையன் அதிர்ச்சியடைந்தான்..இங்கே வரிசையாய் நிறுத்தி வைத்திருப்பதெல்லாம் பீரங்கி என்றெண்ணி வந்த வழியே ஓட்டம் பிடித்தான்.."

"ம்ம்..சம ஐடியாவா இருக்கே!!"

"என்ன?"

"நல்ல யோசனை ன்னு சொன்னேன்..இந்த யோசனை யார் கொடுத்தது..?"


"நம்ம இளவரசி அம்மா தான்..வயதை மிஞ்சிய அறிவு..அழகுக்கேற்ற ஞானம்.." என்று ஒருவன் சொல்ல, குதிரையில் அங்கே வந்த ஒருவன்,

"லே!!உன்ன சேனாதிபதி விளிச்சார்.."என்றான் ..

கார்த்திக்கிடம் பேசிக்கொண்டிருந்த மனிதன்,

"தே..வருன்னுன்னு  பற" என்று அவனிடம்  சொல்லிவிட்டு , கார்த்திக்கிடம்,

"நீ எங்க போனும் பிள்ளே..?" என்றார்..

குழப்பத்தில் இருந்த கார்த்திக் இப்போது அந்த இளவரசி எப்படி இருப்பாள் என்று பார்க்கும் ஆர்வத்தில் ,

"இளவரசி.."

"எந்தா?""

"இல்ல ...வந்து..அரண்மனை.."

"ஓ!!அரண்மனைக்கா??நேரா போயி வலத்தொட்டு திரும்பி , ஒரு கல் தூரம் நடக்கணும்.." என்ற அந்த மனிதரிடம் நன்றி சொல்லி புறப்பட்டான்..

அத்தனை காவலையும் மீறி எப்படி அந்த மாளிகைக்குள் நுழைந்தான் என்பது அவனுக்கே புரியவில்லை ..வெள்ளை நிற சலவை கற்களால் கட்டப்பட்ட அழகிய மாளிகை அது..

படிக்கட்டு வழியே மாடியை அடைந்த போது , அங்கே இருந்த ஒற்றை அறையில் ஒற்றையில் இருப்பவள் தான் இளவரசி என்பது புரிந்தது..அவள் முகத்தை தான் பார்க்க முடியவில்லை..

அவளுக்கே தெரியாமல் அவளை பார்ப்பது எப்படி..தன் வலது கையை வாயில் வைத்த படி , பார்வையை மட்டும் அவள் புறம் வீசி,வாசலின் இடமிருந்து வலமும் வலமிருந்து இடமும் இருமுறை நடந்தான்..

"அட நம்ம தேவி!!அவ இங்க என்ன பண்றா?"

என்று இவன் அறை வாசலின் இடது சுவர் ஓரமாய் சாய்ந்தபடி யோசிப்பதற்குள்,

விரிந்த கூந்தலும், ஒளி சிந்தும் கண்களுமாய் வெளியே வந்த அந்த பெண்..

"யார் அது??யார்??" என்று கேட்க,

அவனோ அவளை தன் புறமாய் இழுத்து,சுவரோடு சாய்த்து, வலது கையால் ,அவள் இடைபற்றி , இடது கையால் அவள் வாய் பொத்தி 

"நான் தான் கார்த்திக் டி.." என்று சொல்வதற்குள்,மூர்ச்சையுற்றாள் அவள் ..

தன் தோளில் சாய்ந்தவளை இழுத்தபடியே ,

"ஐயோ..யாராவது பார்த்த அவ்ளோ தான்..." என்று முணுமுணுத்தபடியே அந்த அறைக்குள் நுழைந்து அங்கிருந்த கட்டிலில் அவளை கிடத்தினான்..

பின் பதற்றத்தோடு அறைக் கதவை சாற்றினான்..

விசாலமான அறை அது..சுவர் முழுக்க ஓவியங்கள்..தன்னை விட்டு நழுவும் ஆடையை பற்றிய படி வெட்கி நிற்கும் பெண்ணின் ஓவியத்தை பார்த்த போது , தன்னையுமறியாமல் ஒரு நொடி அப்படியே நின்று விட்டான்..

திடீரென்று ,உள்ளே பொறி தட்ட..

"ஐயோ..தேவி ..நான் கார்த்திக் டி ..என்ன பாரு..." என்று கட்டிலில் ஓவியம் போல் கிடந்த பெண்ணின் காதருகே சென்று சொல்லிப் பார்த்தான்..

அவளோ அசையவில்லை..அவள் அதரங்களில் இருந்து உதிரம் கசிந்தது..அவள் அங்கங்களில் இருந்து ரத்தம் பெருகியது..அவள் ஆடை முழுவதும் ரத்தமாய் ,குருதியில் குளித்தவள் போல் கொடூரமாய் காட்சி தந்தாள்...முகம் மட்டும் பளிங்கு போல் மின்னிக் கொண்டிருந்தது..

"தேவி..என்னாச்சு ..பயப்படாத..எழுந்திரு ..நான் உன் பக்கத்துலையே தான் இருக்கேன்..எழுந்திரு.." என்று சொல்ல சொல்ல தன்னையும் அறியாமல் பொங்கி வரும் விழி நீரை அடக்க முடியாமல் தவித்தான்...

ஒரு துளி நீர் அவள் கன்னங்களில் விழுந்தது..

மெல்ல கண் திறந்தாள்..தன் பார்வையால் சைகை செய்து அவனை தன் அருகே வரும்படி சொன்னாள்..

அவள் ஏதோ சொல்ல விரும்புகிறாள் என நினைத்து , அவள் இதழருகே காது கொடுத்து கேட்க ,

அவளோ அவன் கன்னத்தில் தன் இதழ் பதித்தாள்..அந்த முத்தத்தின் அடையாளமாய் ..அவள் இதழோரம் வழிந்த உதிரம் அவன் கன்னத்தில் ஒட்டிக் கொண்டது..

அந்த முத்தத்தின் ஈரம் துடைத்த படி,

"என்ன ஆச்சு உனக்கு..ஏன் இப்டி..??"என்று கார்த்தி கேட்க,

"டேய் ..லூசு ..நம்பிட்டியா..???இது தக்காளி சட்னி டா" என்றாள் அவள் ..

குழப்பத்தோடு..

"என்ன??" என்று மீண்டும் அவன் கேட்க..

"ஐயோ..லூசு பயலே..அது தக்காளி சட்னி டா.." என்று யாரோ தன்னை அடிக்க அவன் உறக்கம் கலைந்தது..

"எவ்ளோ நேரம் டா தூங்குவ..??ஸ்கூலுக்கு போக வேண்டாமா??தல மாட்டுல தக்காளி சட்னி டா..தக்காளி சட்னி டான்னு எவ்ளோ நேரமா கத்துறேன்..கொஞ்சம் கூட சொரண இல்லாம அதுக்குள்ளே கைய விட்டிருக்க..."என்று அம்மா சொன்ன போது தான் தன் வலது கை ஆள் காட்டி விரலில் இருப்பது ரத்தம் இல்லை என்பதே புரிந்தது...

"ச்சே..கனவு.." மெல்ல முணுமுணுத்தான்..

'ஆனா..தேவி.!!!..ஏன் இப்டி ஒரு கனவு வந்துச்சு.."ஒன்றும் விளங்கவில்லை அவனுக்கு..

"ப்ளஸ் டூ பாடம் தொடங்கியாச்சு..உன் தூக்கத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு..உன்ன டியூஷனுக்கு விட்டா தான் சரிப் படுவ.." அவன் அம்மா சாந்தி புலம்பி தள்ளினாள்..

பள்ளிக்கு கிளம்ப தயாரானான்....வாசலுக்கு வந்து,

"தேவி ..ரெடி ஆயிட்டியா..வா போலாம்..!" என்று இவன் குரல் கொடுக்க,

தனது ரெட்டை ஜடையில் ரிப்பன் வைத்து பின்னியபடி,

"தோ ..அஞ்சு நிமிஷம் ..வந்துடுறேன் டா.." என்றாள் தேவி..

அம்மா ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்..அவன் அவளிடம் "சரி " என்று சொல்லி உள்ளே நுழைந்ததும்,

"அந்த அநாதை கழுத கூட சேராதன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன்.."

"அப்டி சொல்லாதம்மா...அவ பார்வதி அத்தை பொண்ணு..பார்வதி அத்தை உன் friend  தானே.."

"ம்க்கும்..friend  தான் ..உயிருக்கு உயிரான friend ..." என்றவள், வாய்க்குள்,

"துரோகி.." என்று முனுமுனுத்தாள்..

அவள் முனுமுனுப்பு அவன் காதுகளை அடைவதற்குள்,

"கார்த்தி..நான் ரெடி!!வா!!" என்றாள் தேவி..

இருவருமாய் பள்ளி நோக்கி நடந்தனர்..

(தொடரும்..)

Monday, 3 November 2014

"என் காதல் சொல்ல தேவையில்லை.."

ஹலோ...எப்டி இருக்கீங்க??எவ்ளோ நாளாச்சு கதை சொல்லி...திரும்பவும் ஒரு தொடர்கதை..உங்களுக்காக...படியுங்க..மறக்காம கமெண்ட் குடுங்க..அதுக்கு முன்னாடி ..இந்த கதை எதை பத்தின்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா??அதுக்காக ஒரு குட்டி முன்னுரை...

ஒரு பொண்ணு ஒரு பையன் .ரெண்டு பேரும் லவ் பண்றாங்க..பொண்ணு நல்லவ பையனும் நல்லவன்...ரெண்டு பேருக்கும் நடுவுல நல்ல understanding . ஆனாலும் அந்த காதல் ஜெயிக்கல அப்டின்னா அதுக்கு முக்கியமான காரணம் பெண்மையாக தான் இருக்க முடியும்...ஷ்..ஷ்..தாய்க்குலமே..சண்டைக்கு வராதீங்க... முழுசா படியுங்க..

"நீ மட்டும் என்னை அவனுக்கு கட்டி வைக்கலன்னா கத்தி எடுத்து சதக் சதக் னு என்னை நானே குத்திக்குவேன்.." என்றெல்லாம் போராடும் குணம் கொண்ட பெண்கள் இங்கே குறைவு..அடி உதை வாங்கி காதலுக்காக போராடும் அளவுக்கு சாதாரண பெண்மைக்கு சக்தி கிடையாது...ஒரு நல்ல காதல் ஜெயிக்கணும்னா ஆணை விட பெண்ணுக்கு அதிக மனோ தைரியம் தேவை..வைராக்கியம் தேவை..அப்படி அதிக மனோ தைரியம் உள்ள ஒரு பெண்ணின் காதல் கதை..அப்றோம் ..ஒரு முக்கியமான விஷயம்..இந்த கதையில் வரும் சம்பவங்கள் பாத்திரங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே..கதைய படியுங்க கமெண்ட குடுங்க...

."என் காதல் சொல்ல தேவையில்லை...". 

Episode-1
------------


"டாக்டர்..எனக்கு பைத்தியமாம் ..பேய் புடிச்சுருக்காம்..விடியிறதுக்கு முன்னாடியே எழுப்பி என் தலையில எலுமிச்சம் பழத்தை தேய்க்கிறாங்க..நான் பைத்தியம் இல்ல டாக்டர்..நான் பைத்தியம் இல்ல.."பதற்றத்தோடு பேசினாள் ராதிகா..

"முதல்ல உட்காரும்மா...தண்ணி வேணுமா??"என்று டாக்டர் சொன்னதும் சற்று அமைதியானவள் , முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..

"இல்ல Dr .பரவாயில்லை.." என்றபடி

ஒரு முறை சுற்றுமுற்றும் பார்த்தாள் ..அது ஒரு சிறிய அறை ..சுவரின் ஒரு ஓரத்தில்  கருப்பு வெள்ளை  கோடுகளுடன் கூடிய ஒரு போர்டு இருந்தது..எதிரில் இருந்த மேஜையில்  மஞ்சள் பூக்கள் நிறைந்த flower  vase  ஒரு புறமும் , மத்தியில் "டாக்டர் சுபா சத்தியநாதன்,சைக்காத்ரிஸ்ட் ",என்ற பெயர் பலகையும் இருந்தன..


Dr .சுபா சத்தியநாதன்...நீல நிற காட்டன் புடவை, தலையில் எட்டி பார்க்கும் வெள்ளிக் கம்பிகள், தங்க நிறத்தில் ஒரு நடுத்தர வயது பெண்மணி..மிகச் சிறந்த மனோதத்துவ நிபுணர்..

"உன் பேரு என்ன மா?"

"ராதிகா"

"வயசு"

"25"

டாக்டர் தன் நோட் பேடில் குறித்துக்கொண்டார்..

"ம்ம்..இப்போ சொல்லு மா..என்ன பிரச்சன??"

"பிரச்சினை....ம்ம்ம்..எல்லாமே பிரச்சினை தான் டாக்டர்..எல்லா பிரச்சினைக்கும் மூல காரணம் கண்ணன் தான் டாக்டர்.." என்று தலைகுனிந்தவள் சற்று தயக்கத்தோடு,,

"நான் கண்ணனை லவ் பண்றேன் ...அவன் கிட்ட எத்தனை முறை என் லவ்வ சொன்னேன் தெரியுமா???ஆனா அவன் அக்செப்ட் பண்ணவே இல்ல.."

"ம்ம்..காதல் தோல்வி..." என்ற Dr  சுபாவிற்கு அது ஒன்றும் பெரிய விஷயமாகவே தோன்றவில்லை..கடந்த பதினைந்து ஆண்டுகளில் இது மாதிரி எத்தனையோ கேஸ்களை பார்த்திருக்கிறார்..

ராதிகாவோ,

"சாதாரண தோல்வி இல்லை டாக்டர்..வெற்றிகரமான தோல்வி.." என்றாள்

"அப்டின்னா??"

"அப்டின்னா..ஒரு முறை காதலை சொல்லி அது மறுக்கப் பட்டால் ..அதை தோல்வின்னு சொல்லலாம்...ஒரு பெண் தன் காதலை ஒரு முறை சொல்வதே அநாகரிகம் என்பார்கள்..நானோ அந்த அநாகரிகத்தை 16 முறை செய்திருக்கிறேன்..பதினாறு முறை காதலை சொல்லி ஒவ்வொரு முறையும் பல்பு வாங்கினேன் டாக்டர்.."

வலி நிறைந்த ஒரு விஷயத்தை சிரித்தபடியே ராதிகா சொன்ன போது,டாக்டருக்கு அவளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது...

"ம்ம்..நார்மலா ஒரு முறை reject பண்ணினாலே depress  ஆயிடுவாங்க..நீங்க  எப்டி..???"

"விழாமல் சைக்கிள் ஓட்டி கத்துக்க முடியுமா டாக்டர்..இந்த காதல் தோல்விய நான் அப்டி தான் எடுத்துகிட்டேன்.அவன் ஒவ்வொரு முறை மறுத்த போதும் அவன இம்ப்ரெஸ் பண்ண புதுசா என்ன பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுடுவேன்.."

""வெரி குட்..உங்க attitude  எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...கண்ணன் எப்போ முதல்ல மீட் பண்ணீங்க??எத்தன நாளா லவ் பண்றீங்க??

"ஐயோ நாள் இல்ல டாக்டர்..வருஷம்...

அப்போ எனக்கு ஏழு வயசு தான் இருக்கும்..

என் வீட்டு ஜன்னல் வழியே வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்....அங்கே கண்ணன் ராக்கியோடு விளையாடிக் கொண்டிருந்தான்...ராக்கின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் .." என்று அவள் முடிப்பதற்குள்..

"ஓ..கண்ணனுக்கு முன்னாடி உங்களுக்கு ராக்கிய ரொம்ப புடிச்சிருந்தது..அப்டி தானே.." என்றார் டாக்டர்..

"ஐயோ ராக்கி அவனோட நாய்க் குட்டி டாக்டர்.."

"ஒ..சாரி மா..நீங்க சொல்லுங்க" என்று புன்னகையோடு டாக்டர் சொன்னதும் மீண்டும் தொடர்ந்தாள்..

"ராக்கிய பார்த்ததும் எனக்கும் அவன் கூட விளையாடனும் போல இருந்துச்சு..அதனால் கண்ணன் கிட்ட போனேன்..கண்ணனுக்கு என்னை  
விட ஒரு வயசு தான் அதிகம் இருக்கும்..

அவனிடம் "ராக்கிய என் கிட்டே குடேன்.." என்றேன்..

"ம்ஹூம்..என்னால முடியாது..."என்றான் அவன்..

"ப்ளீஸ் .."என்று நான் கெஞ்சுவதை பார்த்து..

"சரி..கலர் விளையாட்டு விளையாடுவோம்...நீ ஜெயிச்சுட்டா ராக்கிய தர்றேன்.." என்று அவன் சொன்னதால் நானும் ஒப்புக் கொண்டேன்..

"சரி...ஆனா எனக்கு விளையாட தெரியாதே.."

"நான் தான் கேச்சர்..நான் என்ன கலர் சொல்றேனோ அந்த கலரை நீ தொட்டிருந்தா உன்னை நான் பிடிக்க முடியாது ..ஓகே வா  "

சரி" என்று நான் சொல்ல , 
விளையாட்டு தொடங்கியது..

"டிக் டிக் "

"யாரது?"

"திருடன்"

"என்ன வேணும் ?"

"நகை வேணும்.."

"என்ன நகை"

"கலர் நகை"

"என்ன கலர்"

"பச்சை " என்று கண்ணன் சொல்ல..

சுற்றி நிற்கும் இலை தழை எல்லாம் என் கண்ணில் படவில்லை..கண்ணன் மட்டுமே தெரிந்தான்..அவன் பச்சை கலர் சட்டை போட்டிருந்தான்..அவன் என்னை பிடிப்பதற்காக என்னை நோக்கி ஓடி வந்தான்...நானோ அவன் சட்டையை தொடுவதற்காக அவனை நோக்கி ஓடினேன்.அவன் என்னை தொட வந்தான் ..நான் அவனை இறுக பற்றிக் கொண்டேன்..

"நான் புடிச்சுட்டேன்.." என்றான் அவன்

நான் புடிச்சுட்டேன்...என்றேன் நான்..

"நீ அவுட்டு.."

"இல்ல..நான் தான் பச்ச கலர் புடிச்சுட்டேனே "

"லூசு ..நான் தான் catcher .."

"நீ தானே பச்ச கலர பிடிக்கணும்னு சொன்ன.."என்ற படி அவனை இறுக பிடித்து ..நான் அவுட் இல்ல " என்றேன்..

"ஐயோ உனக்கு விளையாட்டே தெரியல..என்ன விடு டி.."என்ற படி என்னை பிடித்து தள்ளினான்...கீழே விழுந்ததில் என் கால் முட்டியில் சிறிய உராய்வு ஏற்பட்டு ரத்தம் கசிந்தது..நடந்ததை பார்த்துக் கொண்டிருந்த அம்மா ஓடி வந்து..தர தரவென்று என்னை இழுத்துக்கொண்டு போக..நானோ,

"அம்மா..ராக்கி வேணும்மா..என்று அழுத படியே  கண்ணனை பார்த்தேன்...அவனோ பரிதாபமாக என்னை பார்த்தான்..

அடுத்த நாள் காலையில், 

யாரோ வீட்டு வாசலில் என்னை அழைப்பது போல் இருந்தது...

வெளியே பார்த்த போது கையில் ராக்கியோடு கண்ணன் நின்று கொண்டிருந்தான்...

"இந்தா வச்சுக்கோ...இனிமே அழாத.." என்று ராக்கியை என் கையில் கொடுத்தான்..

நானோ ராக்கியை மறந்து கண்ணனை பார்த்துக் கொண்டிருந்தேன்..

"ம்ம்..சின்ன வயசுல இருந்தே விரும்புறீங்க...ஆனா நீங்க சொல்றத வச்சு பார்க்கும் போது ,அந்த பையனுக்கும் உங்கள பிடிக்கும்னு தான் தோணுது.."

"அவனுக்கு என்ன பிடிக்கும் டாக்டர்..பிடிக்கல பிடிக்கலன்னு பொய் சொல்றான்.."

"ம்ம்..பிடிக்கும்..பிடிக்கல..புரியலையே மா"

பல வருடங்கள் காதல் எனும் கருவை மனதில் சுமந்து, மேலும்  சுமக்கும் வலிமை தீர்ந்து,வலி தாளாமல் ஒரு நாள் பிரசவித்து , தன் காதல் எனும் குழந்தை இறந்தே பிறந்தது என்று தெரிந்தும், அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் ,இறந்த அக்குழந்தைக்கு பால் கொடுக்க மார்பு தடவும் பேதை தாயின் தாய்மை  உள்ளத்தோடு காதலிக்கும் தனக்கே தன் காதல் தோல்விக்கு காரணம் புரியாத போது ,இந்த டாக்டருக்கு எப்படி புரிய போகிறது என்று உள்ளூர எண்ணியவள்,

இப்போ அது கூட பிரச்சன இல்ல டாக்டர் ...வீட்ல..." என்று எதையோ பேச தொடங்கினாள்..

(தொடரும்....)

Friday, 12 September 2014

அன்பே சிவம் !!!


As Parents, we must teach our children to pray...
அவளுக்கு இருபது வயது இருக்கும்.. நிறம் கருப்பு தான்....ஆனால் ரொம்பவே அழகு...அட..மருத்துவமனையில் என்ன செய்கிறாள் என்ற மனதின் கேள்வியோடு அருகில் சென்றேன்.."என்ன பிரச்சன??" என்றேன்..

"ஒன்னும் இல்ல..இதயத்துல அறுவை சிகிச்சை ஆச்சு.." என்று அவள் முடிப்பதற்குள் "இதயத்துல அறுவை சிகிச்சையா??அதுக்கு ஏன் காலில் கட்டு போட்டிருக்காங்க??" என்றேன்.."அத ஏன்மா கேக்குற??ஒரு வருஷம் முன்னாடி இதயத்துல அறுவை சிகிச்சை ஆச்சு..தன்னோட உடம்பு சரி ஆச்சுன்னா பொன்னியம்மாவுக்கு தீ மிதிப்பதா வேண்டிகிச்சாம்...இப்போ தீ மிதிச்சு கால் வெந்து போச்சு...."என்றாள் அவள் அம்மா... 

"சுத்த பத்தமா இருந்தா தானே .." என்று கடிந்து கொண்டாள் அவளது பாட்டி.."இந்த முறை கால் புண் ஆறிடுச்சுன்னா தலையால தீ மிதிப்பேன்னு  வேண்டிக்கோடி" என்று கேலி செய்தாள் அங்கிருந்த பெண் ஒருத்தி.நானோ அந்த பெண்ணின் முட்டாள் தனத்தை நினைத்து உள்ளூர நொந்து கொண்டேன்..என் வேண்டுதல்கள் நினைவுக்கு வந்தன..

நானும் பக்தை தான்..ஆஞ்சநேய பக்தை...கல்லூரியில் ஒவ்வொரு செமஸ்டரின் போதும் ஏதாவது வேண்டிக் கொள்வேன்..முதல் செமஸ்டர் நல்ல எழுதினா.."ஸ்ரீ ராம ஜெயம் " 108 முறை எழுதி அதை மாலையாக கட்டி போடுவதாக நங்கநல்லூர் ஆஞ்சனேயரிடம் வேண்டிக் கொண்டேன்..நிறைவேற்றவும் செய்தேன்..இரண்டாவது செமஸ்டரில் 1008 முறை " ஸ்ரீ ராம ஜெயம்" எழுதி போடுவதாக வேண்டிக் கொண்டேன்..

இப்படியே ஒவ்வொரு செமஸ்டருக்கும் வேண்டுதல் அதிகம் ஆகிக் கொண்டே போனது...ஒரு கட்டத்தில் " ஆஞ்சநேயா எனக்கு தெரிந்த அத்தனை மொழிகளிலும் 1008 முறை "ஸ்ரீ ராம ஜெயம் " எழுதி போடுகிறேன் " என்று வேண்டிக்கொண்டேன்..எனக்கோ ஏழு மொழிகளில் ஸ்ரீ ராம ஜெயம் எழுத தெரியும்..சத்தியமா முடியல..அப்றோம் கடைசியா ஆஞ்சநேயர் கிட்ட போய் "சாரி டா ஹனுமான் ...என்னால என் வேண்டுதல அப்டியே நிறை வேற்ற முடியல..கை வலிச்சுது ..ப்ளீஸ் ப்ளீஸ் 1008 முறைக்கு பதிலா 108 முறை மட்டும் எழுதுறேன்..என்று சொல்லி..அப்றோம் அதையும் முழுசா செய்யாம.."ஸ்ரீ ராம ஜெயம் " என முழுசா எழுதுவதற்கு பதில் "ராமா " என்று மட்டும் எழுதி.. ஒரு வழியா என் வேண்டுதலை பல கோல் மால்கள் பண்ணி நிறை வேற்றினேன்..கடைசியா ஆஞ்சனேயரிடம்.."இதோ பாரு இனிமே இப்டி கஷ்டமான வேண்டுதல் எல்லாம் கண்டிப்பா வேண்டிக்க மாட்டேன்..என் அன்பு உண்மை..சோ இந்த ஒரு வாட்டி என்ன மன்னிச்சுக்கோ .." என்றேன்..பாவம் ஆஞ்சநேயர்..."போடி நீயும் உன் புண்ணாக்கு வேண்டுதலும்..சும்மா கடுப்பேத்திக்கிட்டு" என்று மனதுக்குள் என்னை கடிந்திருப்பார்...

இப்போ என்ன நித்யா சொல்ல வர்றே அப்டின்னு தானே கேக்குறீங்க..சிம்பிள் ...

கடவுள் உங்களிடம் எதிர்பார்ப்பது உங்கள் அன்பை மட்டும் தான்...எவ்ளோ கஷ்டம் வந்தாலும் தீ மிதிக்கிறேன், அலகு குத்திக்கிறேன், என் தலையில பொல பொலன்னு ரத்தம் வழிய தேங்காய் உடச்சுக்கிறேன்...அப்டி இப்டின்னு கொடுமையான வேண்டுதல்களை தயவு செய்து வேண்டிக் கொள்ளாதீர்கள்...அப்படியே வேண்டனும்னு ஆசை பட்டா .."ஒரு அனாதை குழந்தையை படிக்க வைப்பதாக வேண்டிக் கொள்ளுங்கள் ..இல்லாதவர்களுக்கு தானம் செய்வதாக வேண்டிக் கொள்ளுங்கள்..அன்ன தானமோ, கல்வி தானமோ எதுன்னாலும் சரி..வறுமையில் இருப்போருக்கு ஒரு வேளை சோறு போட்டாலும் போதும்..கடவுள் மகிழ்வார்...மாறாக உங்களை நீங்களே காயப் படுத்திக் கொள்வதால் இறைவனும் கண்ணீர் மட்டுமே உதிர்ப்பான்..உலகை படைத்த தந்தையாம் இறைவனை மகிழ்விப்போம்!!!

Life  is  beautiful ..

Friday, 25 October 2013

நினைவெல்லாம் அருண்..

episode 7
----------

"ஏய் நந்து!!!நீ இன்னும் இறங்கலியா ?" என்றபடி அவளை நோக்கி இரண்டடி எடுத்து வைத்து ஒரு வழியாக இறக்கி விட்டாள் ராதா ..

ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்த அருண்..," நந்து!" என்றபடி அவள் அருகில் சென்றான்..

அவளோ " நான் அருண் கிட்ட போகணும்..நான் என் அருண் கிட்ட போகணும்  " என்று அதே வரியை தான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள்..
 அவன் அவள் தோளை பிடித்து உலுக்கினான்..

"நந்து!!அருண் தான் வந்திருக்கேன்!!பார் என்னை!!" என்றான்..

அவளோ ," அருண்..அருண்.." என்றபடி ,அதற்கு மேல் பேச சற்றும் திராணி இல்லாதவளாய் , அவன் நெஞ்சோடு  சாய்ந்தாள்.

மருத்துவமனையில் ,

நடந்ததையெல்லாம் அருணிடம் விவரித்தாள் ராதா ..

நந்திநிக்கோ இன்னும் நினைவு திரும்பவில்லை ..அருண் ராதாவை நோக்கி,

" உன்னை நம்பி தானே அனுப்பி வச்சேன் .." என்றான்..ராதாவுக்கோ கோபம் வந்தது..

" உங்க பயந்தாங்கொள்ளி பொண்டாட்டிய என் தலைல கட்டி அனுப்பி வச்சிட்டு இப்போ பழிய தூக்கி என் மேலே போடுறீங்களா??நேற்று ராத்திரி முதல் இங்க வந்து சேர்வது வரை எப்போவும் ," நான் அருண் கிட்ட போகணும்..நான் அருண் கிட்ட போகணும் னு  புலம்பிகிட்டே இருந்தா ..நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா??அவ்வளவு ஏன்..நேற்று ராத்திரி பத்து மணிக்கெல்லாம் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துட்டோம்..எத்தன முறை அவ கிட்ட சாப்பிடு சாப்பிடுன்னு சொன்னேன் தெரியுமா??காலையில வாங்கின பிரெட் கூட இருந்துச்சு..நான் தோசை வாங்கி சாப்ட்டேன் ..ஆனா அவ...நான் வாங்கி குடுத்த தோசைய தொட்டு கூட பார்க்கல...,சும்மா " நான் அருண் கிட்ட போகணும்னு புலம்பிகிட்டே  இருந்தா..!!!ஒரு நாள் முழுக்க சாப்டாமலே இருந்தா மயக்கம் வராம வேறென்ன பண்ணுமாம்..!!" என்று பேசி முடித்த போது அவள் கண்கள் லேசாக பனித்தது...

அவள் நிலையை புரிந்து கொண்டவன் , சற்று நிதானித்து ." ம்ம்..முதலில் உட்கார்" என்று அருகில் இருந்த நாற்காலியை இழுத்துபோட்டு ,அவளை அமர செய்தான்..

"நந்து பக்கத்துலையே இரு..இதோ வந்துடுறேன்.." என்று அந்த அறையை விட்டு வெளியே சென்றான்..

சில நிமிடங்களில் கையில் ஒரு சிறிய பொட்டலத்தோடு திரும்ப வந்தான்..

" என்ன இது?" என்றாள் ராதா..

"இட்லி வாங்கிட்டு வந்திருக்கேன்..முதல்ல சாப்பிடு " என்று அவள் கையில் அந்த பொட்டலத்தை  கொடுத்தான் ..

அதை வாங்கி கொண்ட ராதா,கையில் தன் கைபேசியை எடுத்துக் கொண்டு..

" இதோ வந்துடுறேன்.."என்றபடி வெளியே சென்றாள்..

அவனோ  படுக்கையில் கண்கள் மூடிய படி கிடந்த தன மனைவியின் அருகில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு , அதில் உட்கார்ந்து கொண்டான்..


அவள் முகத்தையே  பார்த்த படி அமர்ந்திருந்தான்..

என்றோ நடந்த அந்த சம்பவம் அவன் நினைவிற்கு வந்தது..


அன்று இருவருமாய் ஒரு பெரிய ஷாப்பிங் மாலிற்குள் நுழைந்தனர்..

ஏதேதோ சாமான்களை வாங்கிவிட்டு அங்கிருந்த பெண்ணிடம்,

" கண் மை இருக்கா?" என்றாள் நந்தினி..

"ம்ம்..இருக்கு மேடம்...வெறும் 200 ரூபாய் மட்டும் தான் " என்றாள் அந்த பெண்..

"இருநூறு ரூபாயா ?" என்று அதிர்ச்சியோடு கேட்ட அருணிடம்,

" ஆமா சார் ...இந்த கண் மை smudge  ஆகாது ..( கலைந்து போகாது..)அப்டியே கண்ணுக்குள்ளேயே இருக்கும்.." என்றாள் அந்த பெண்..

" இதோ இது எத்தனை ரூபாய் ?" என்று தன கையில் ஒரு சிறிய கண் மை டப்பாவை எடுத்தபடி அந்த பெண்ணிடம் வினவினாள் நந்தினி..

"அது கலைந்து போகும் மேடம் ...அஞ்சு ரூபா தான் " என்றாள் அந்த பெண்..

அதற்கு நந்தினி பதில் சொல்வதற்குள் ,

"யா...அந்த மாதிரி smudge ஆகுற மை தான் வேணும்..." என்றான் அருண்..

பதில் சொல்ல அவன் ஏன் முந்திக்கொண்டான்..???காரணம் இல்லாமல் இல்லை..

அவள் கண்ணில் மை இடுவாள் ..கொஞ்சம் நேரத்தில் அது கலைந்து கண்ணிற்கு வெளியே வந்து விடும்.."ஏ நந்து!!மை கலஞ்சிருக்கு பாரு " என்பான் அவன்..உடனே அவள் தன் வலது கை ஆள்காட்டி விரலால் , தன் கண்ணிற்கு கீழே வழிந்திருக்கும் மையை அழகாக துடைப்பாள்..ஆனாலும் முழுமையாய் துடைத்திருக்க மாட்டாள் ..உடனே அவன் அவள் அருகில் போய் அவள் விழிக்கு வெளியே வழிந்திருக்கும் மையை தன் கையால் துடைப்பான்..இப்படி வெறும் அஞ்சு ரூபாயில் அடிக்கடி நடக்கும் காதல் காட்சியை இருநூறு ரூபாய் கொடுத்து எந்த மடையனாவது தொலைப்பானா???

விற்பனைக்கு நின்ற பெண் வைத்த கண் வாங்காமல் அருணையே பார்த்துக் கொண்டு நின்றாள். 


அதை கவனித்த நந்தினியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன..

"ஹலோ " என்று அவள் சொல்வது கூட தெரியாமல் அந்த பெண் அருணையே பார்த்து கொண்டிருந்தாள் ..

நந்தினி மீண்டும் தன் கையை சொடுக்கி , 

" ஹலோ , உங்கள தான்.." ம்ம்..???" என்று தன் புருவத்தை உயர்த்தியபடி கேட்டாள்..

அதற்கு அந்த பெண்.." மேடம்..யுவர் ஹஸ்பன்ட் இஸ் ரியலி ஹாண்ட்சம்.." என்றாள் ..

அருண் தனக்கு மட்டும் உரிமையானவன் என்பதை அழுத்தமாக சொல்வதற்காகவோ என்னவோ ,நந்தினிஅருனின் கை இடுக்கில் தன் கையை நுழைத்து இறுக பற்றிய படி ,

"ஐ நோ " என்றாள்..

அதற்கு மேல் அவள் அங்கே நிற்கவில்லை ..

"மையும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் !வாங்க போகலாம் !!" என்றபடி  அவனை அப்படியே இழுத்து செல்ல முயன்றாள்..

அவனோ.." ஏன் நந்து..இப்டி பண்ற??உனக்கு வேணும்னா இருநூறு ரூபா மையே வாங்கி தர்றேன்..!!" என்றான்..

அவளோ.."ஒன்னும் தேவையில்ல..வேற கடையில வாங்கிக்கலாம்.." 
என்று பிடிவாதமாய் அவனை இழுத்துச் சென்றாள்..அப்படி போகும் போது,ஒரு முறை திரும்பி விற்பனைக்காக நின்ற அந்த பெண்ணை சுட்டெரித்து விடுவது போல் ஒரு பார்வை பார்த்தாள்..

அந்த கனல் கக்கும் விழிகள் இன்றோ மூடிய நிலையில் ..அருணால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..நெஞ்சொரமாய் வலிப்பது போல் இருந்தது..எப்போது விழிப்பாள் எப்போது பேசுவாள் என்ற ஏக்கத்தோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

சற்று நேரத்தில் விழி மலர் விரிந்தது..அவள் தன் இமை கைகளை தட்டியபடி அவனை ஒரு முறை பார்த்தாள் ..தன் கைகளை மெல்ல நகர்த்தி படுக்கையின் மீதிருந்த அவனது கைகள் மீது வைத்தாள்..

"அருண்.." என்றவளின் மெல்லிய குரல் கேட்டு  அவளை பார்த்தான் அவன்...

அவளோ விம்மி விம்மி,

"என்னை ஏன் தனியா அனுப்பி வச்ச??நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா?? " என்றாள் அவனை நோக்கி..

"நானா போன்னு சொன்னேன்.." என்றான் அவன்..

"நான் என்ன பண்ண??நான் சரின்னு நெனச்சு பண்றது எல்லாமே தப்பாயிடுது..இப்போ பாரு..நீ கூட என்ன திட்டுற..ஏன் அருண்..நான் திரும்பவும் இந்த மாதிரி எதாச்சு தப்பு பண்ணினா நீ என்னை வெறுத்துடுவியா??"

"ம்ம்...அப்போ நீ திரும்பவும் தப்பு பண்ணுவ..அப்டி தானே.." என்றான் அவன்..

ஏற்கனவே கண்ணீரோடு இருந்தவளின் முக வாட்டத்தை பொறுக்க மாட்டாமல்..

அவள் தலையில் லேசாக தட்டி..

"குழந்தை தப்பு பண்ணினா அம்மா கோவப்படுவா ...ஆனா வெறுக்க மாட்டா..என்னால உன்னை வெறுக்க முடியாது டி.." என்றான்..

அவளுக்கோ மேலும் அழுகை வந்தது..அவனை நோக்கி..

"ஐ ஆம் சாரி அருண்..இனிமே உன் பேச்சை மீறி நான் எங்கயும் போக மாட்டேன்.."என்றாள்..

" சரி மா " என்று அவளை சமாதான படுத்த முயன்ற்றவனிடம் ,

"நேத்து full ஆ நான் சாப்டவே இல்ல தெரியுமா??இதோ பாரு என் காலில்.." என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அவள் காலை பார்த்தான் அவன்..

"அடிபட்டது ரொம்ப வலிக்குதா?" என்றான் அவன்..

அதற்கு அவள்,

"ஐயோ ..வலிய விடு அருண்..எவ்ளோ வலி என்றாலும் தாங்கிக்குவேன்..ஆனா..ஆனா.." என்று சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் விம்ம தொடங்கினாள்..

கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட,

"நீ எனக்கு வாங்கி கொடுத்த கொலுசு தொலஞ்சு போச்சு அருண்.." என்றாள்..

"அத்துடன் நிறுத்தாமல்,

"எல்லாத்துக்கும் காரணம் நான் தான்..இனிமே நான் அடம் பிடிச்சாலும் ,என்னை தனியா எங்கயும் அனுப்பிடாத..!!" என்ற படி விம்மி விம்மி அழுதாள்..

"சரிம்மா...நீ இப்படியே அழுதுகிட்டு இருந்தா நம்ம குழந்தையும் அழுமூஞ்சியா தான் பிறக்கும் .." என்று அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமல் , கண்ணீர் வழியும் கண்களோடு அவனை ஒரு முறை பார்த்தாள் நந்தினி..

அவன் நாற்காலியை விட்டு எழுந்தான்...அவளது படுக்கையில் அமர்ந்து கொண்டான்..தன் இடது கரத்தால் அவளை அணைத்தபடி , வலது கரத்தால் அவளது கண்ணீரை துடைத்தான்..அவள் நெற்றியில் முத்தமிட்டான்..அவளுக்கு புரியவில்லை என்பதை உணர்ந்ததால் , தன் தலையை அசைத்தபடி,

"ம்ம்..டாக்டர் confirm  பண்ணிட்டார்.." என்றான்..

அழுவதா சிரிப்பதா என்று புரியாமல் திணறிக் கொண்டிருந்தவளை மேலும் திணற விடாமல் , தன் மார்போடு சேர்த்து அணைத்துக்
கொண்டான்..

இரண்டு ஆண்டுகள் கழித்து..

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாசலில்..

"அருண்..உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.." என்று
எதையோ சொல்ல தொடங்கினாள் நந்தினி..

"என்ன "என்று கேட்கும் பாவனையில் தலை அசைத்தான் அருண்..

"என் கூட வேலை பார்க்குறா இல்ல ..வனிதா ..அவ தன்னோட ஊருக்கு என்னை ரொம்ப நாளா கூப்பிட்டு கிட்டே இருக்கா...அவ ஊரு பேரு என்ன தெரியுமா..காட்டுபுதூர்.."என்றாள் நந்தினி ..

"ஸோ....."  என்றான் அருண்,அவள் முகத்தை பார்த்தபடி..

(அட...திரும்பவும் தொடங்கி விட்டாளே..எதாச்சு சொல்லி என்னை சம்மதம்னு சொல்ல வைப்பாளே ...லஞ்சமா முத்தம் வேற கொடுப்பாளே.. என்று ஏகப்பட்ட எண்ணங்கள் அருண் சொன்ன "ஸோ" என்ற ஒற்றை ஆங்கில வார்த்தைக்குள் புதைந்து கிடந்தன..)

" ஸோ... !!காட்டுபுதூர் அப்டின்னு பேரு இருக்குற ஊருக்கெல்லாம் என் வீட்டுக்காரர் என்னை அனுப்பி வைக்க மாட்டார் அப்டின்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்.." என்றபடி அவனை பார்த்து கண் சிமிட்டினாள்..

"ஐயோ..இம்ச ..!!!என்று அவன் பாணியில் அவள் தலையில் லேசாக ஒரு தட்டு தட்டி தன் வலது கையால் அவளது தோளை பற்றிக்கொண்டான்..

இடது கையில் தூக்கி வைத்திருந்த அவனது மகளோ , தன் பிஞ்சு கைகளால் அவன் கழுத்தை சுற்றி பிடித்த படி, "ப்பா .." என்று மழலை மொழியில் பேச எத்தனித்தாள்..

முகத்தில் புன்னகை தவழ..மனமெல்லாம் சந்தோஷத்துடன்..

மூவருமாய் கோயிலுக்குள் நுழைந்தனர்..


AND THEY LIVED HAPPILY FOREVER.....

(முற்றும்..)